About Me

2021/06/16

வாழ்க்கை நம் கையிலே



 மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியையே தேடுகின்றது. ஆனாலும் அந்த மகிழ்ச்சி நமக்குள்ளேயே இருக்கின்றது என்பதை மறந்து அடுத்தவர்களின் எதிர்பார்ப்பிற்காக நமது வாழ்க்கையை குறுக்குகின்றோம். மகிழ்ச்சியை உணர வேண்டிய மனம் அதை வீணாக இழந்து தவிக்கின்றதே!
---------------------------------------------

-
ஆசைகள் உள்ளத்தில் எழுகின்ற சிறு உணர்வுதான். ஆனாலும் ஆசைகளுக்குள் நாம் நம்மை அடக்கி வாழ முயற்சிக்கும்போதுதான் நம்மைச் சுற்றி வலி கசிகின்றது. கட்டுப்படுத்தப்படாத ஆசைகளின் நீட்சியில் கண்ணீர்க் கசிவு இருக்கின்றது என்பதை நாம் மறந்துதான் போகின்றோம்.
--------------------------------------------------


அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வினுள்  பல எதிர்பார்ப்புக்களை நமக்குள் தேக்கிக் கொள்கின்றோம். நாம் விரும்புகின்ற எல்லாம் நிறைவேற வேண்டுமென முயற்சிக்கின்றோம். போராடுகின்றோம். இருந்தும் ஏமாற்றங்கள் நம்மைத் துரத்துகின்ற போது எல்லாவற்றையும் இழந்ததைப் போல் தனிமைக்குள் சுருண்டு விடுகின்றோம்.

--------------------------------------------------

நமக்குள் அடங்கியிருக்கின்ற ஆற்றல்கள்தான் நமது அடையாளங்கள். பலம் நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனாலும் நாம் ஏனோ பலத்தை மறந்து பலகீனங்களை நமக்குள் நிரப்பி அப்பலகீனங்களால் சந்தோசங்களை இழந்து விடுகின்றோம். தடுக்கி வீழும்போதெல்லாம் நம்மீது ஏறி மிதிக்காமல் எழுந்திருக்க கை தருவது நம்மீது அன்பு கொண்டவர்கள் மாத்திரமே!
----------------------------------------------------------

இலக்குகள் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஓவ்வொரு தொலை புள்ளியும் தொட்டு விடும் தூரமெனும் நம்பிக்கையில் முயற்சிக்கின்றோம். ஒவ்வொரு முயற்சிக்குள்ளும் ஒளிந்திருக்கின்ற தன்னம்பிக்கை நமது பயணப் பாதையின் வலியை உறுஞ்சி வழி காட்டி நிற்கும்.
----------------------------------------------------------

நாம் நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மை நேசிக்கின்ற போது மனதில் புத்துணர்ச்சியுடன் வலிமை பிறக்கின்றது. புன்னகை நமக்குச் சொந்தமாகின்றது. இன்பமோ துன்பமோ நாம் தேடிச் செல்கின்ற செயல்களின் தீர்ப்புக்களே. வெற்றியை தேடும் மனம் சந்திக்கின்ற தோல்விகளையும் வலிகளையும் அக்கணமே மறந்து விடுகின்றது.    

----------------------------------------------------------


தோல்விகளிடம் நாம் தோற்றுவிடும்போது எம்மைத்  தேடி துன்பங்கள்தானே வருகின்றன. ஒவ்வொரு கணமும் நம் நிம்மதியும் தொலைகின்றதுதானே. இருந்தும் கடந்து போன சந்தோசங்கள் உதிர்ந்து போகாமல் கொஞ்சமாவது நமக்குள் நினைவுகள் எனும் பொக்கிசமாக மாறிக் கிடப்பதனால் வாழ்க்கை இன்னும் நமக்காக காத்துக் கிடப்பதாக உணர்ந்து வாழ்கின்றோம். வாழ்க்கை நம் கையிலே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் நமக்கான வாழ்க்கை அனுபவங்களைக் கற்றபடி வாழ்வோம். வாழ்வை ரசிப்போம்.

- Jancy Caffoor - 16.06.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!