மனிதர்கள் தம்முடைய சிந்தனைகளின் பொருட்டே தனித்துவமானவர்களாக மாறுகின்றார்கள். ஒவ்வொரு மனிதரினதும் கைரேகைகள் எவ்விதம் ஒத்திருப்பதில்லையோ அவ்வாறே சிந்தனைகளும் வேறுபடுகின்றன. சிந்தனைகள் ஒத்திருப்பதில்லையாதலால் முரண்பாடுகள் தோன்றுகின்றன.
வாழ்க்கை என்றால் என்ன?
அந்த வாழ்க்கை எல்லோருக்கும் சுகமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கின்றதா?
ஆனாலும் வாழ்வின் சவால்கள் போராட்டங்களுடன் போராட நம்மில் எத்தனை பேருக்கு தன்னம்பிக்கை இருக்கின்றது.?
நிறைய பேரின் மனதில் இந்த வாழ்க்கை பற்றிய சலிப்பே இருக்கின்றது.
நம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் பொய்யாக மாறும்போது இயல்பாகவே நாம் நம்மிடமே தோற்று விடுகின்றோம். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு எழ நமக்கு மன தைரியம் வேண்டும். நேர்ச்சிந்தனைகள் வேண்டும்.
எம்மை நாமே நம் சூழ்நிலைக்கேற்ப தயார்படுத்திக் கொண்டோமானால் நம்மைத் துரத்துகின்ற எந்த முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம்.
நம்மை எதிர்கொள்கின்ற முரண்பாடுகள் நம்மை விழுங்க நாமே அனுமதித்தால் அந்த முரண்பாடுகளிடம் நாம் நம் நிம்மதி கலந்த வாழ்வையே இழந்து விடுகின்றோம்.
வேறுபட்ட இலக்குகள் அல்லது பெறுமானங்களை கொண்டிருக்கும் இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் தோன்றக்கூடிய வெளிப்படையான இயக்கமற்ற தன்மை முரண்பாடு எனப்படும்.'
முரண்பாட்டுக்கான வரைவிலக்கணத்தை மேற்கண்டவாறு கல்வியலாளர்கள் வழங்கியுள்ளனர். அதாவது நபர்களுக்கிடையில் சிந்தனைகள் வேறுபடும்போது வெளிப்படுகின்ற ஓரு இயக்கமற்ற தன்மையாக இதனைக் கொள்ளலாம்.
நீர் சொல்வதை நான் செய்ய வேண்டுமா அல்லது நான் சொல்வதை நீர் செய்ய மாட்டீரோ என விரிந்து செல்கின்ற மனப்போக்குகளால் விட்டுக்கொடுப்பு இங்கு இடம்பெறாது.
முரண்பாடு என்பது ஒருவரிடத்தே அல்லது இருவருக்கிடையில் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோரின் கருத்து வேறுபாட்டின் அல்லது எதிர்ப்பின் பெறுபேறாகத் தோன்றுவதாகும். இந்த முரண்பாடுகள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையலோ அல்லது உறவினர்களுக்கிடையிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ ஏற்படலாம்.
முரண்பாட்டுச் சிந்தனை நமக்குள் ஏற்பட்டால் சூழ்நிலைக்கெதிரான மனநிலையைக் கொண்டிருப்போம்.
உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகளின் விளைவு பகைமை
கணவன் மனைவிகளுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் விவாகரத்தில் நின்றுவிடும்.
குடும்பங்களில் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க முடியாத பாதகநிலை.
தொழில் நிலையங்களில் சந்திக்கின்ற முரண்பாடுகள் நம் வாழ்வில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.
இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகின்றன. வேற்றுமைக்கு வித்திட்டு பற்பல மோதல்களுக்கு வடிகாலாக காணப்படுகின்ற இந்த முரண்பாடுகள் தோன்றாவிடில் இந்த உலகமோ அழகான அமைதிப் பூங்காவாக அல்லவா காணப்படும். மனிதர்களுக்கிடையில் சாந்தியும் சமாதானமும் சேர்ந்த நிம்மதியான வாழ்வும் கிடைக்குமே. முனம் இவ்வாறாக ஆசைப்பட்டாலும்கூட யதார்த்தநிலை நம்மை சிந்திக்க வைக்கின்றதே
மனித எண்ணங்களுக்கிடையில் காணப்படுகின்ற பல்வகைமைகளின் செல்வாக்கு அன்பெனும் உணர்வின் எல்லைகளையும் தகர்த்து விடுகின்றது.
இந்த முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது எனப் பார்ப்போமா
• ஆளுக்காள் தோன்றுகின்ற பக்கச்சார்பு நிலை.
• தனிநபர் பிறர்மீது செலுத்துகின்ற செல்வாக்கு
• வேறுபட்ட இலட்சியங்கள்
• பொருட் தேவைகள்
• தவறான தொடர்பாடல்
• அந்தஸ்தை வெளிப்படுத்தல்
• அதிகமான வேலைச்சுமை
• ஆளுமை மோதல்
• தெளிவற்ற பொறுப்புக்கள்
• வேறுபாடான எண்ணக்கருக்கள்.
இவ்வாறாக பல காரணங்கள் காணப்படலாம்.
இந்த முரண்பாட்டுக்கும் பண்புகள் காணப்படுகின்றன.
• குறித்த நபர் அல்லது நபர்கள் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுதல்.
• குறை கூறல்.
• தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல்.
• ஒதுக்கி வைத்தல்.
• தனித்திருத்தல்.
• பேசுவதை தவிர்த்துக் கொள்ளல்.
• கண்கள் நேருக்கு நேர் பார்த்து பேசாதிருத்தல்.
இவ்வாறாக மன அவஸ்தைகளைத் தருகின்ற முரண்பாடுகள் நமக்குத் தேவைதானா நிச்சயமாக முரண்படுகின்றபோது நமக்குள் எழுகின்ற சிந்தனைகளால் நாம் நம்மையே திரும்பிப் பார்க்கின்றோம்
முரண்பாடு மூலம் கிடைக்கும் நன்மைகள்
• புதிய கருத்துக்கள் உருவாகும்.
• இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது.
• தேவைகளை நிறைவு செய்கிறது.
• நடத்தை கோலங்களை கற்றுக் கொடுக்கிறது.
• பிரச்சனைக்கான தீர்வு தேடித் தரும்.
• தொடர்பாடல் திறனுக்கான பயிற்சி.
• உணர்ச்சிவசப்படுவதை தடுக்கும்.
• வித்தியாசமான அனுபவங்களைத் தரும்.
• புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
• உண்மையான பிரச்சனை வெளிப்படும்.
• குறைபாடுகளை இனம் கண்டு கட்டுப்படுத்த முடிகிறது.
• இரு தரப்பும் இணங்கும் வெற்றிகரமான தீர்வு.
• புரிந்துணர்வு வளர்ச்சி.
முரண்பாடுகள் மூலம் கிடைக்கும் தீமைகள்
• சக்தி நேரம் வீணாகும்.
• தாமத முடிவு.
• ஆரோக்கியமற்ற சமூகம்.
• எரிச்சலூட்டுதல்.
• பின்தங்கிய நிலை.
• குழுவினர் விலகுதல்.
• குறிக்கோளை அடைய முடியாது.
ஒழுங்கமைப்பினுடாக முரண்பாட்டுக்கான தீர்வுக்காக கடைபிடிக்கப்படும் பல்வேறு உபாயங்களாவன : -
• தவிர்த்தல்.
• தீர்வொன்றை விதித்தல்.
• மிருதுவாக்குதல்.
• ஒழுங்கமைப்பின் குறிக்கோளை நிறைவுபடுத்திக் கொள்ளல்.
• பிரதிநிதியுடன் கலந்துரையாடல்.
• கட்டமைக்கப்பட்ட இடைத்தாக்கம்.
• பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும்.
• மத்தியஸ்தம்.
• பிரச்சினை தீர்த்தல்.
• ஒழுங்கமைப்பை மறுசீரமைத்தல்.
எனினும் நமக்கு தீங்கினையும் தரக்கூடிய இத்தகைய முரண்பாடுகள் எம்முள் தோற்றம் பெறுவதை நாம் அனுமதிக்கக்கூடாது.
பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்த்தல் வேண்டும். இதற்கு பொறுமையும் பிறரை நேசிக்கின்ற அன்பான குணமும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற பக்குவமும் வேண்டும். பிறர் நலத்தின்மீது மதிப்பு வைக்கின்ற மனநிலை வேண்டும். தவறுகளைக் கண்டறிந்து களைந்தெறிதல் வேண்டும். ஒருவரும் பாதிப்படையாமல் தொடர்பாடல்கள் மூலம் குறைகளைக் களைந்தெறிந்து நல்ல விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முரண்பட்டோர் கருத்துக்களை 'நேருக்கு நேர் நோக்குதல்' போன்ற நுட்ப முறைகளையும் பயன்படுத்தி பிணக்குத் தீர்க்கலாம்
ஈகோ நீக்கப்பட்டாலே பாதி முரண்பாடும் மறைந்து விடும்.
அடுத்தவரின் உணர்வுகள் தேவைகளைப் புரிந்து கொண்டாலே முரண்பாட்டுக்கான பாதைகளும் மறைந்து விடும்.
விட்டுக்கொடுங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகின் உயர்ந்த மனிதப் பிறவிகள் சமாதானத்தின் மிகச்சிறந்த அடையாளங்களாக மாற்றம் பெறுவார்கள்.
அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பின்தொடர பலர் முன்வருவார்கள்.
பிறரின் குறைகளைக் கண்டுகொள்ளாதீர்கள். உங்கள் நிறைகள் பிறரால் பாராட்டப்படும்.
ஒவ்வொருவரும் தம்மை அடுத்தவர்களை நேசிக்கின்ற மனிதர்களாக மாற்றும்போது இப்பிரபஞ்சத்தின் அன்பின் செழுமைக்கும் குறைவுதான் ஏது.
அன்பு ஆட்சி செய்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற இப்பூமி மயானங்களல்ல. சொர்க்கத்தின் சுவடுகளால் பாதைகள் செய்யப்பட்ட அழகான பூமியாக மாறும்.
நாமும் மாறுவோம். மற்றவர்களையும் மாற்றுவோம். மாற்றங்களாலேயே வாழ்வில் ஏற்றம் பெறலாம்.
ஜன்ஸி கபூர் - 24.06.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!