2012/06/10
மண வேலி!
நீ- என்
இனிய கவிதை!
நாதஸ்வரத்தின் நளினத்தோடு
என்னுள் நார்த்தனமாடியவுன்னை
விலங்கிட்டுக் கொண்டேன்
என்னவளாய்!
நீ நடக்கையில்
எனக்குள் கிசுகிசுக்கும் - உன்
மெட்டியொலியின் மெட்டோசை
கெட்டி மேளம் கொட்டும் - என்
ஹிருதய நுழைவாயிலை
அடிக்கடி எட்டிப் பார்த்து !
அடி பெண்ணே!
நம் புதுவுறவுள் - நானோ
புளாங்கிதமடைய
நீயோ புன்னகைக்கின்றாய்
அந்தப் புது நிலவாய்
என்னவளாய்!
ஜன்ஸி கபூர்
யதார்த்தம்
கால மயானத்தில்
காவு கொள்ளப்பட்ட என் வயதைத்
தேடுகின்றேன் - அது
மரணித்த சுவடாய்
நினைவுகளை மட்டும் அப்பிக்
கிடக்கின்றது!
முட்களும் கற்களும்
முணுமுணுத்த - அந்தத்
தீப் பொழுதுகள்
மௌனமாய் என்னை விரட்டும்
போதெல்லாம்
வாழ்க்கை சயனித்து
இடறி வீழ்கின்றது வெறுமைக்குள்!
அன்று
திமிரெடுத்து பண்ணிய வம்பு
வாலிப அட்டகாசங்கள்
இன்று
வலியெடுத்துத் துடிக்கின்றது
ஞாபகச் சில்லுகளில் நசுங்கி!
வசந்த விரயத்தோடு உதிர்க்கப்பட்ட
வாழ்க்கைத்துளிகள்
மானசீகமாய் எட்டிப்பார்க்கின்றது
தனிமைப்பட்டுப் போன - என்
சிறைப் பொழுதுகளில்
சிரமம் பாராமல் !
ஜன்ஸி கபூர்
ஞாபகம் வருதே!
என் மன டயறி - உன்னால்
தூசு தட்டப்படுகின்றது மெதுவாய்!
நம் நட்பின் நெருடல்கள் - அதில்
சிரிக்கின்றன எழுத்துக்களாய்!
தெரு வயல்களில் - நாம்
புழுதி பரப்பி ஓடித் திரிந்த
அந்தக் கணங்கள்
காயத் தழும்புகளினூடே
எட்டிப் பார்க்கின்றன
உன் ஞாபகச் சீண்டலைப் போல்!
காற்றலைகளில் நூல் கோர்த்து
காகிதப் பட்டங்களை ஏணியாக்கி
விண்ணுக்கு நாமிட்ட தூதோலைகள்
இன்று வேடிக்கையாய்
என்னுள் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன
உன் அன்பின் பசுமை போல்!
நம் ஹிருதயங்களில் சிறகு விரித்து
தும்பி விரட்டியடித்த - அந்த
விடலைப் பருவம்
சிகரமாய் வியக்கின்றது என்னுள்!
கடிகார நகர்வுகளைத் தடுத்து
காலத்தை நிறுத்திய நம் குறும்புகள்
மங்காத வாசத்தின் சுவாசிப்புக்களாய்
இன்னும் மயங்கித்தான் கிடக்கின்றன
என்னுள்ளே !
ஜன்ஸி கபூர்
உறக்கம்
விழிக்கும் விடுமுறை தா..!
உறக்கத்தின் போராட்டம்
களமிறங்கும் நேரமிது!
இருளும் முகங்காட்ட
மெல்ல எட்டிப் பார்க்கிறது
கனாக்களும்!
எம் நினைவகத்தின் இருப்புக்களை
மீள உருத்துலக்குவதற்காக!
விளக்கின் ஒளிச்சாரலில்
விழத்துடிக்காத பார்வைகள்
வீம்பாய் முரசறைகின்றது
கொட்டாவி அலைகளோடு!
குட் நைட் .!
இஷ்டப்பட்ட வார்த்தைகளோடு
நாவும் குவிந்து மடிகின்றது
இன்றைய பொழுதின் நன்றியுரையாய்!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)