About Me

2012/06/10

ஞாபகம் வருதே!


என் மன டயறி - உன்னால்
தூசு தட்டப்படுகின்றது மெதுவாய்!
நம் நட்பின் நெருடல்கள் - அதில்
சிரிக்கின்றன எழுத்துக்களாய்!

தெரு வயல்களில் - நாம்
புழுதி பரப்பி ஓடித் திரிந்த
அந்தக் கணங்கள் 
காயத் தழும்புகளினூடே
எட்டிப் பார்க்கின்றன
உன் ஞாபகச் சீண்டலைப் போல்!

காற்றலைகளில் நூல் கோர்த்து
காகிதப் பட்டங்களை ஏணியாக்கி 
விண்ணுக்கு நாமிட்ட தூதோலைகள்
இன்று வேடிக்கையாய்
என்னுள் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன
உன் அன்பின் பசுமை போல்!

நம் ஹிருதயங்களில் சிறகு விரித்து
தும்பி விரட்டியடித்த - அந்த
விடலைப் பருவம்
சிகரமாய் வியக்கின்றது என்னுள்!

கடிகார நகர்வுகளைத் தடுத்து
காலத்தை நிறுத்திய நம் குறும்புகள் 
மங்காத வாசத்தின் சுவாசிப்புக்களாய்
இன்னும் மயங்கித்தான் கிடக்கின்றன
என்னுள்ளே !

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!