கால மயானத்தில்
காவு கொள்ளப்பட்ட என் வயதைத்
தேடுகின்றேன் - அது
மரணித்த சுவடாய்
நினைவுகளை மட்டும் அப்பிக்
கிடக்கின்றது!
முட்களும் கற்களும்
முணுமுணுத்த - அந்தத்
தீப் பொழுதுகள்
மௌனமாய் என்னை விரட்டும்
போதெல்லாம்
வாழ்க்கை சயனித்து
இடறி வீழ்கின்றது வெறுமைக்குள்!
அன்று
திமிரெடுத்து பண்ணிய வம்பு
வாலிப அட்டகாசங்கள்
இன்று
வலியெடுத்துத் துடிக்கின்றது
ஞாபகச் சில்லுகளில் நசுங்கி!
வசந்த விரயத்தோடு உதிர்க்கப்பட்ட
வாழ்க்கைத்துளிகள்
மானசீகமாய் எட்டிப்பார்க்கின்றது
தனிமைப்பட்டுப் போன - என்
சிறைப் பொழுதுகளில்
சிரமம் பாராமல் !
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!