About Me

2012/06/28

சொர்க்கத் தீவு !


வெள்ளி நிலாக் கொஞ்சலில் 
உணர்வுகள் களித்துக் கிடக்கின்றன
இப்போதெல்லாம்!

நேர்த்தியான என் மாளிகையில் 
சிதறிக் கிடக்கின்ற பொருட்களெல்லாம்
கண்ணடிக்கின்றன வெகுளியாய்!

தூசு கூடச் செல்லாத என் காற்றில்
மாசற்ற அவள் பேச்சொலி 
சிலிர்த்துக் கிடக்கின்றன சில்லறையாய்!

காலைப் பனிக்குள்ளும் பண்ணிசைக்கும்
சிட்டுக்களின் சிரிப்பலையாய் - அவள்
என்னுள் நிரம்பிக் கிடக்கின்றாள்!

தனிமைக்குள் மந்திரிக்கப்பட்டு
இருளுக்குள் கவிழ்ந்திருந்த என்னுள் 
இப்பொழுதெல்லாம் அவளே விடிவெள்ளி!

என் மனதின் துன்பவலைகளெல்லாம்
அவள் புன்னகைக்குள் 
கலைந்து செல்கின்றன இதமாய்!

என் விழிகள் விரிகையில்  
விடியலை சுட்டும் மலரிதழாய் 
வாசனை விட்டுச் செல்வதும் அவளே!

என் பெயரில் இத்தனை அமிர்தமா !
அவளென்னை உச்சரிக்கையில்
சிறகடிக்கின்றேன் பல வெளி தாண்டி!

அவள் பார்வை வீச்சில் 
இத்தனை வசீகரமோ - என்
மனமோ பித்தாகிக் அலைகின்றது
அவள் பின்னால்!

விடியலின் கரமசைப்பில் - எனை
தொட்டுத் தழுவும் அலாரமாய்
வந்து போகின்றாள் அடிக்கடி!

இந்தக் கிளிப்பேச்சில் மயக்கத்தில்
என் சினக் கவசங்கள் 
துகிலுரிக்கப்படுகின்றன மென்னிசையாய்!

இவள் பதிக்கும் முத்தத்தில்  
பவனி வரும் பழரசங்களோ
இடறி வீழ்கின்றன என்னிதழில்!

இப்பொழுதெல்லாம் என் கவனம்
அவள் மீதே சிதறிக்கிடக்கின்றன- இந்த
வெளியுலக வில்லத்தனத்திலிருந்து மீண்டபடி!

உணர்கின்றேன் என்னை நானே
உணர்கின்றேன் - அவள்
தந்திருக்கும் மொத்த அன்பையும் சேமித்தபடி!

இவள் 
குறும்புகளில் கரும்பு பிசைந்து
பயணிக்கின்றேன் - அந்தச்
சொர்க்கத்தீவின் ஆட்சிக்குள் நான் !

(அஸ்கா எங்கள் வீட்டுச் செல்லம். வயது 2  1/2  . அவள் என்னுள் தந்த பாச அருட்டலிது.)


Doctor  Jano இம் மழலையை எமக்களித்த என் சகோதரி

ஜன்ஸி கபூர் 

காத்திரு!




என்னிடம் திரும்பி வா 
எனக்குன் காதல் வேண்டும்!

என் காற்றில் நெய்த தூதோலைகள்
சமுத்திரம் துளைத்துன் கரம் சேரட்டும்!

விண்வெளிச் சூரியப் பூ- நம்
பிரிவின் தீ வார்ப்பில் நசுங்கிப் போகட்டும்!

என்னிடம் திரும்பி வா 
எனக்குன் காதல் வேண்டும்!

என் வழிப் பாதையில் ஒட்டிக்கொண்ட
உன் நேசிப்புக்களால் 
என்னுயிரின் பெண்மை சிலிர்க்கட்டும்!

நம் வேடிக்கைச் சிதறலின்
ஈரத்தில் கூடல் கொஞ்சம்
வெட்கித்து மோகித்துக் கிடக்கட்டும்!

என்னிடம் திரும்பி வா 
எனக்குன் காதல் வேண்டும்!

ஒவ்வொரு நிசப்தங்களிலும்
என் மூச்சின் விரல்களில் - உன்
முத்த ரேகைகள் சுகமாய் சயனிக்கட்டும்!

நீ தந்த தனிமைப் பொழுதின்
காயங்கள் யாவும் 
கண்ணீரில் மௌனித்து கரையட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

உன் நிழலோடு 
என் தடங்கள் அலையும் பயணத்தில்
உன் தேசமே சொந்தமாய் வீழட்டும்!

சோகத்தின் துவம்சத்தில் சொக்கிக் கிடக்கும்
இப் பாவையின் ஏக்கம் தீரவே 
மாரியாய் உன் தூறல் மாறட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

இருள் கவிந்து மிரட்டும் - என்
திக்குத் தெரியா காட்டின் 
திசைகாட்டியாய் உன் ஞாபகம் வீழட்டும்!

நிசர்சனங்களில் உனையேந்தி
நிழலுக்குள் மறைந்திருக்குமென்னை
உன் கண்கள் மட்டுமே துகிலுரிக்கட்டும்!

என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!

உன் காத்திருப்புக்களின் சுயம்வரத்தில்
தொட்டுக் கொள்ளும் கணங்கள் தோறும் 
உன் மாலை என் தோள் சேரட்டும்!

என்றோ திரும்பி வருவேன்
உன் காத்திருப்புக்கள் எனக்கானால் 
உன் வசம் சேர்ந்திருப்பேன்!



ஜன்ஸி கபூர் 













2012/06/26

சில நினைவுகள்

ஆசிரியர்த் தொழிலில் நானீட்டிய சில பசுமையான சாதனைகளின்  நினைவுகளின் தொகுப்புக்கள் இவை
-----------------------------------------------------------------


வடமத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல சிறந்த விஞ்ஞான ஆசிரியையாக தெரிவு செய்யப்பட்ட போது



சர்வதேச ஆசிரியா் தினத்திற்காக பாடசாலையில் எனக்குக் கிடைத்த விருது
(குறைந்த லீவு)
தந்தவர் அன்றைய அதிபர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள் 


தேசிய மட்ட ஆசிரியர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசில் பெறல்
தருபவர் அன்றைய கல்வியமைச்சர் ரிச்சட் பத்திரன அவர்கள்



என் இலக்கிய பயணத்திற்காக யாழ் முஸ்லிம் இணையத்தளம் வழங்கிய "விருது " . 

தருபவர் அமைச்சர் ரிசாட் பதியூத்தின் அவர்கள்







நான் வரைந்தவை

"பெப்ரிக்" ( இந்தியா) வர்ண நிறுவனம் நடாத்திய துணி ஓவியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இருபத்தைந்து பேரில் முதலிடம் பெற்ற என் தூரிகை அசைவுகள் இவை-




















மீண்டும் உரிய முன்பக்கத்திற்குச் செல்ல வேண்டுமாயின் இதனை அழுத்துக