2012/06/28
காத்திரு!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
என் காற்றில் நெய்த தூதோலைகள்
சமுத்திரம் துளைத்துன் கரம் சேரட்டும்!
விண்வெளிச் சூரியப் பூ- நம்
பிரிவின் தீ வார்ப்பில் நசுங்கிப் போகட்டும்!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
என் வழிப் பாதையில் ஒட்டிக்கொண்ட
உன் நேசிப்புக்களால்
என்னுயிரின் பெண்மை சிலிர்க்கட்டும்!
நம் வேடிக்கைச் சிதறலின்
ஈரத்தில் கூடல் கொஞ்சம்
வெட்கித்து மோகித்துக் கிடக்கட்டும்!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
ஒவ்வொரு நிசப்தங்களிலும்
என் மூச்சின் விரல்களில் - உன்
முத்த ரேகைகள் சுகமாய் சயனிக்கட்டும்!
நீ தந்த தனிமைப் பொழுதின்
காயங்கள் யாவும்
கண்ணீரில் மௌனித்து கரையட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
உன் நிழலோடு
என் தடங்கள் அலையும் பயணத்தில்
உன் தேசமே சொந்தமாய் வீழட்டும்!
சோகத்தின் துவம்சத்தில் சொக்கிக் கிடக்கும்
இப் பாவையின் ஏக்கம் தீரவே
மாரியாய் உன் தூறல் மாறட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
இருள் கவிந்து மிரட்டும் - என்
திக்குத் தெரியா காட்டின்
திசைகாட்டியாய் உன் ஞாபகம் வீழட்டும்!
நிசர்சனங்களில் உனையேந்தி
நிழலுக்குள் மறைந்திருக்குமென்னை
உன் கண்கள் மட்டுமே துகிலுரிக்கட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
உன் காத்திருப்புக்களின் சுயம்வரத்தில்
தொட்டுக் கொள்ளும் கணங்கள் தோறும்
உன் மாலை என் தோள் சேரட்டும்!
என்றோ திரும்பி வருவேன்
உன் காத்திருப்புக்கள் எனக்கானால்
உன் வசம் சேர்ந்திருப்பேன்!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!