About Me

2012/07/23

என் தேவதை


தாமரைச் சாறில் மையெடுத்து
சூரிய விரலில் பேனா ஏந்தி - நீ
நிலவின் விளக்கொளியில்
களவாய் வரைந்த காகிதங்கள்
என் மலர் மெத்தையின்
பூவாச தூதோலைகள்!

புன்னகைக் கொலுசினிலே
ஒட்டிக் கிடக்கும் உன் வார்த்தைகள்............
இன்னிசைத் தொகுப்பாக - என்
செவிப்பறை யேந்தி நிற்கும்!

உன் பார்வை மின்னொளியில்
என்னுயிரும் ஒளியுறுஞ்சும்...........
நீ பருவச் சேமிப்பினிலே
உதிர்க்கும் நாணமள்ளி- துருவப்
பனிப்பாறை நித முருகும்
தங்கச் சிற்பமாய் உன் விரலது தொடும்!

நேர நகர்விற்கு நங்கூரமிட்டு - நீ
நெடு நேரம் எனை நேசிக்கையில்
என்....................
தனிமைச் சாரளம் விழி திறக்கும்
உன்னையே உள்வாங்கி
கனவுவெளியில் காதல் செய்யும்!

என் நெஞ்சத் தரையில் விழுதாகும்
மன அண்டவெளியின் ஆட்சிக்காரியே...........!
என்
ஞாபகக் கல்வெட்டில் நீ - நிதம்
விரல் தொட்டுச் செல்கின்றாய் அழகாய்!


ஜன்ஸி கபூர் 


சின்னத் தாமரை !


அந்த நிலாவைக் களவாப் பிடித்தே
பொத்தி வைச்சேன் நெஞ்சுக்குள்ள ............
பௌர்ணமி யவள் சிரிப்பினில்
வாழ்வின் இருளும் மிரண்டோடியதுவே!

தாமரை விழி விரித்தாள் - இன்ப
மகரந்தங்கள் அள்ளித் தெளித்தாள் - தினம்
மடியினில் மெல்லப் புரண்டாள்
கருவண்டாய் எனை ஈர்த்து நின்றாள்!

பஞ்சுக் கரத்தால் முகம் வருடியே- என்
நெஞ்சுக்குழியின் சுவாசமாய் நிறைந்து நின்றாள் !.....
வஞ்சியென் னன்பில் மூழ்கிக் கிடந்த - அந்த
பிஞ்சு மகள் என் செல்வமன்றோ!

சந்தனம் கரைத்து மேனி கொண்டாள்
மல்லிகையின் மொட்டுக்களின் வாசம் கொண்டாள் !
அள்ளியணைத்திட ஆசை கொண்டாள்- அந்த
வண்ண மகளவள் வைரமானாள்!

மழலை தேனில் என் பெயர் நனைப்பாள்-என்
ஜடை அவிழ்த்தும் மெல்ல விழுப்பாள்..........
வெள்ளிக் கொலுசொலி யவள் சிரிப்பில்
வெள்ளி னிலவாய் கண்ணுள் ஒளிர்வாள்!


(எங்கள் செல்லம் அஸ்காக் குட்டிக்கான என் கவிதை)


உணர்வோசை


இந்தப் புவிக்கோளத்தில் - நாம்
இரணயாத சமாந்தரங்கள் !
அதனாற்றானோ
என்......................
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
உன் நிராகரிப்பின் சலிப்போடு
விழிநீராய் வழிந்தோடுகின்றது!

உன் நேச ஒளியில்
அன்று......
விட்டிலான என் மனசோரங்களெல்லாம்
இப்போது.......
வெறுமைச்சிறகுகளால்
பறக்கின்றன
உயிர்ப்பை துறந்தபடி!

என் வாழ்க்கை மெழுகு- உன்
அனல் பட்டதால் உருகி உருகியே
கரைந்ததில்...............
கறைப்படிவுகளாய்
சோதனைகளும் சோர்வுகளும்
படிந்து கிடக்கின்றன
என்னுள்!

நம்முள் நனைந்த கனவெல்லாம்
உலர்ந்து உவப்பின்றி- பிரிவின்
புலர்வில் காணாமல்தான் போனது!

இருந்தும்..............
என் வெற்றிட மனதில்
சுற்றியோடுமுன்னை நிதமும்
பற்றிப்பிடிக்க காத்திருக்கின்றேன்!
சற்றுப் பொறு.............
நம்பிக்கையின் அதிர்வோசைகள்
மனத் தந்தியில்
முரசறைகின்றதே பலமாய்!

ஜன்ஸி கபூர் 

சிறகு விரிக்கின்றேன்


சிறு புள்ளியாய் - நீ
தொலைதூரம் பயணிக்கையில்............
சிறகு விரிக்கின்றேன் நானும்
உன் னிழலோடு!

உன் நகர்வுகளின் ஒலிப்பதிவுகள்
இப்போதெல்லாம்
பத்திரப்படுத்தப்படுகின்றன - என்
நெஞ்சில் ஞாபகங்களாய்!

உன் நேசத்தை - நான்
வாசிக்கும் ஒவ்வொரு கணங்களிலும்..........
குரல்நாண்கள் குதுகலிக்கின்றன!

உன் பார்வை படும்
பாலைநிலங்களில் - நானும்
ஜனனிக்கின்றேன் - உன்
பாதச்சுவடுகளாய்!

உன் சந்திப்புக்கள் மறுக்கப்படும்
என் பொழுதுகளின்
விழுதுகள்.............
அழுது புலம்புகின்றன!

என் வீட்டு ஷன்னல்களில்
ரகஸியமாய் படியும் - உன்
விம்பக் கவிதைகள் யாவும்
பிரமிப்புக் காட்டுகின்றன
பிரமிட்டுக்களாய்!

உன் காத்திருப்பில்
எனை நிறுத்தி
காதோரம் சிணுங்கல் பூட்டி
பூரித்த நொடிகளெல்லாம்...............
தொடுவானச் சூரியனாய்
அழகு காட்டுகின்றன
என் பூமியிலே!

சின்னவனே............
தென்றல் கூட எனைத் தீண்ட
அனுமதியில்லை !
இருந்தும்............
உன் கரம் தா - என்
கண்ணீரைக் கழற்றியெடுக்க!

ஜன்ஸி கபூர்