About Me

2012/08/02

அனல் பூக்கள்



ஒவ்வொரு மனங்களும் அன்பு பற்றிய ஏக்கங்களுடனேயே தத்தமது வாழ்க்கையை நகர்த்துகின்றன. அழகான வாழ்க்கை.........எதிர்பார்ப்புக்களின் சேர்க்கைகளால் நெகிழும் வாழ்க்கை...ஆனால் சில , பல சமயங்களில் அவ் வாழ்க்கை ஏமாற்றங்களால் காவு கொள்ளப்பட்டு விதிக் காற்றில் சீரழிந்து விடுகின்றன.

என் மனதை அண்மையில் நெகிழ்ச்சியடையச் செய்த , நான் கேள்விப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிண்ணப்பட்ட கதையை என் தமிழில் பகிர்கின்றேன் ......சம்பவம் உண்மை....பெயர்கள் மட்டும் கற்பனை.............

வடமத்திய மாகாணத்தின் சிற்றூர்தான் பதவியா. அங்கு வாழ்ந்த ஜெயசிங்க- ஹேமா காதல் மணம் புரிந்த ஜோடிகள்....ஜெயசிங்கவுக்கு தொழிலென்று ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை...எப்படியோ அன்றாடம் கூலித்தொழில் செய்து அவன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்..அவன் போகும் திசையில் ஹேமாவும் இழுபட்டுச் சென்றாள்...

வாழ்க்கை வறுமைப்பட்டாலும் கூட, மனதின் பசுமையால்  இல்லறம் அவர்களுக்குள் இனித்தது. அவர்கள் காதல் நறுமணத்தில் நனைந்தவளாய் அழகான மகள் சிரோமியும் பிறந்தாள்...

வருடங்கள் வேகமாக நகர, வறுமையிலும் வாழ்வை செழிப்பாக்க போராடிக் கொண்டிருந்தனர் அவ் இளம் ஜோடிகள்........

மகள் சிரோமி ஐந்து வயதைத் தொட்டு நின்றாள். அருகிலிருந்த பாடசாலையில் மகள் சிரோமியின்  வாழ்க்கைக்கான கல்வி அத்திவாரமிடப்பட்ட போது , வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ஜெயசிங்க தம்பதிகள் தடுமாறினர்....

" மகளும் வளர்ந்திட்டாள் இனி கஷ்டப்பட ஏலாது..பணம் சேர்க்கணும், நான் வெளி நாட்டுக்கு போறன், நீங்க மகள பார்த்துக்குங்க"

ஹேமா , தன் கணவனிடம் மகளை ஒப்படைத்து விட்டு அவசர அவசர மாக பலரிடம் கையேந்தி கடன்பட்டு அரபு நாடொன்றுக்குப் பயணமானாள்.......

பல இரவுகள் வியர்வையில் நனைந்து, தன் உணர்வுகளை மரக்கச் செய்து ஹேமா சிறுகச் சிறுக சேமித்த, உழைத்த பணத்தை தன் கணவன் பெயருக்கு தவறாமல் அனுப்பினாள்..அவள் ஒன்றரை வருடமாக அனுப்பிய சேமிப்பில், அவள் காதல் கணவன் லீலா எனும் பெண்ணை தன் வீட்டுக்கே அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினான்..லீலா தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவள்.ஜெயசிங்கவை வளைத்துப் பிடித்து, அவன் வீட்டுக்கே இராணியாய் முடிசூட்டிக் கொண்டாள்.

ஜெயசிங்கவின் கள்ளக் காதல் பற்றிய விடயம் அவன் மனைவி ஹேமா கேள்விப்பட முன்னரே, அவள் உழைப்பெல்லாம் அவன் காலடி சேர்ந்து லீலாவின் ஊதாரித்தனத்தில் வீணாகியது........புது மனைவியின் உல்லாச வாழ்வில் கணவன் ஜெயசிங்க மிதக்கத் தொடங்கினான்....

சிரோமி சிற்றன்னையிடம் ஒப்படைக்கப்பட்டாள். .லீலாவின் கொடுமையில் அந்த ஆறரை வயதுப் பிள்ளை  உருக்குலைந்தது, புது மனைவி மோகத்தில் ஜெயசிங்க எதனையும் கண்டு கொள்ளாதவனாய் ஊமையானான்...

சிரோமியின் உடலில் தினம் தினம் காயங்கள் தம் முகத்தைக் காட்டத் தொடங்கின...

அன்று...........

ஞாயிற்றுக்கிழமை....வீட்டில் கணவனுக்கான விசேட விருந்தோம்பலுக்காக விதம் விதமாய் சமையல் படைக்க முடிவு செய்தாள் புது மனைவி லீலா!
வேலையில் மும்முரமாய் ஈடுபட்டு அறுசுவையில் தன் கணவளைத் திணறடிக்க காத்திருந்தவளுக்கு சிரோமி இடையூறானாள்......

உரிய நேரம் தாண்டியும் அவள் அந்தச் சின்னப்பிள்ளைக்கு உணவு கொடுக்க வில்லை.பெற்றவனுக்கே இல்லாத அக்கறை புறத்தியாளுக்கு வருமா என்ன?

சிரோமி பசியால் அழுதாள்...ஆத்திரம் கொண்ட சிற்றன்னை எனும் அந்தப் பூதம் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நாக்கை இழுத்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் சூடு போட்டாள்......

சிரோமி கதறிய கதறல் கேட்டும் கூட ஜயசிங்க ஊமையாய் இருந்தான். புதுப் மனைவி மயக்கத்தில் பிள்ளைப் பாசம் பூச்சியமானது...

நாக்கில் தீக்காயத்தால்  உணவு உண்ணவும் முடியாமல், யாருடனும் பேசவும் முடியாமல் சிரோமி எனும் அந்த 2ம் வகுப்புப் பிள்ளை தனிமைக்குள் சிறையிருந்தது..

ஒருவாரம் நெருப்புக்கணங்களாய் சிரோமி உணர்ந்தாள். உடல் மெலிந்து , அவள் அழகும் உருக்குலைந்தது. .ஒரு வாரம் பாடசாலைக்கு செல்லாததால் சிரோமியின் வகுப்பாசிரியை சிற்றன்னை லீலாவைக் காணும் போதெல்லாம் சிரோமியை விசாரிக்கத் தொடங்கினார்....

இனியும் அவளை சிறை வைக்கமுடியாத நிலையில் சிற்றன்னைப் பிசாசு அவளை பாடசாலைக்கு மீள அனுப்பினாள்..

ஆனால் பிள்ளையால் பாடசாலையில் பேச முடியவில்லை.கற்க இயலவில்லை..எந்த நேரமும் அழுது கொண்டே இருந்தாள். வகுப்பாசிரியை விடவில்லை..துருவித் துருவி சிரோமியை ஆராய்ந்ததில் தீப்பட்ட நாக்கின் புண்கள் பற்றிய கதையும் கண்ணீரும் அவலமும் வெளியே கசிந்தன..

சிற்றன்னையின் கொடுமையால் கொதித்தெழுந்த பாடசாலை நிர்வாகம் உடனடியாக பொலிஸூக்குத் தகவல் அனுப்ப, பொலீஸார் லீலாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர்..

இப்பொழுது அவள் சிறைக்கம்பிகளின் பின்னால் தனது மனிதாபிமானமற்ற இதயத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருக்க, கணவனோ தலைமறைவாகி விட்டான்..

சிரோமி எனும் அந்த ஆறரை வயதுப்பிள்ளை பூக்க முன்னரே கருகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாள்..

பெற்றவளுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா.........தாய் மீள மகளைத் தேடி வருவாளா......தந்தை எங்கே இருக்கிறான்.......இனி அந்தப் பிள்ளையின் வாழ்க்கைக்கு யார் காவல்...இவை போன்ற பல வினாக்கள் எனக்குள் தொக்கிக் கிடக்கின்றன...!

வாழ்க்கையில் பிண்ணப்பட்ட வறுமையும், சபல புத்திக்காரக் கணவனின் புத்தியும் சேர்ந்து ஹேமாவின் வாழ்க்கையுடன் மட்டுமல்ல, அவள் வயிற்றில் கருவாகிய பாவத்திற்காய் அவள் மகளின் வாழ்வையும் விளையாடி விட்டன.  புழுதியில் வீணே வீசியெறியப்பட்டுள்ள அந்தக் கருகிய மலர்........இன்று அனாதையாய் விடியலின் முன் இருளாகி நிற்கின்றாள் தன் சந்தோஷங்களை யும் உதிர்த்தபடி !.....

லீலாவைப் போன்ற இரக்கமற்ற பிசாசுகளும் நாக்கறுபட்டு , தீக்குவியலுக்குள் தள்ளி விடப்பட்டு எரிக்கப்பட வேண்டும். இந்தக் கொடுமை இனி எந்த மலரையும் கசக்கி விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனையும் கூட !




ரமழான் சிந்தனைகள்





******
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகிறான்"

(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, புகாரி)

******
உண்ணுங்கள் , பருகுங்கள் , விரயம் செய்யாதீர் " (7:31)
******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

"மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் முதல் எழுநூறு மடங்கு வரை. இறைவன் சொல்கிறான் நோன்பைத் தவிர, ஏனெனில் நிச்சயமாக எனக்குரியது. நானே அதற்கு கூலி வழங்குகிறேன். காரணம் அடியான் தனது ஆசையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகிறான் "  (முஸ்லிம்)

******
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன"
- நபி மொழி_
(அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, திர்மிதி - 619 )

******
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

"அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது "
( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ, நூற்கள் : அஹ்மது , நஸயீ, பைஹக்கீ )

******

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன"
- நபிமொழி-

( அறிவிப்பவர் - அபூஹூரைரா ரளியல்லாஹூ அன்ஹூ ,
நூல் :முஸ்லிம் 1957)

******
"வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்)
 கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்.

(திருக்குர்ஆன் 2:187)

******
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் ( நன்மை தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகிறாரோ, அவர் அம் மாதம் நோன்பு நோற்க வேண்டும் .

(அல்குர் ஆன் 2 :185)



வறியவர்க்குதவுவோம்


புனித ரமழான் நமக்கு கற்றுத் தரும் பயிற்சிகள் மகத்தானவை. ஏனெனில் நோன்பானது நம் உடல், உள, ஆன்மீகத்துடன்  தொடர்புபட்ட புனித கடமையாகும்.

புனித நோன்பானது பசியின் கோரத்தை, வறுமையை, ஒட்டியுலர்ந்த வயிற்றின் அலறலை, நமக்குள் மானசீகமாக உணர்த்தி, ஏழ்மையின் இடரை செல்வந்தன் உணரச் செய்யக்கூடிய சிறந்த வழியாக உள்ளது. இது ஓர் சமத்துவத்திற்கான பாதையாகும். ஏனெனில் ஏழை , பணக்காரன் இரு சாரரும் ஒரே திசையில் பயணித்து அல்லாஹ்வுக்கு நோன்பெனும் வரியைச் செலுத்த வேண்டும்.

ஏழ்மையுடையவர்களை நினைந்து, உள்ளம் உருகி, கண்ணீர் சிந்தக்கூடிய சந்தர்ப்பத்தை நோன்பு தருகின்றது. இவர்களின் துயருணர்ந்து அவற்றை ஓரளவாவது களைய முயற்சிப்பது கூட சன்மார்க்க நெறியாகும். புனித ரமழானில் நாம் நோற்கும் நோன்பு மூலம் ஏழைகள், அனாதைகள், அகதிகள் மீது எம் கருணை வளர்க்கப்படல் வேண்டும். அக் கருணையின் உந்தலால் நாம் அவர்களுக்கு ஈகையை வழங்க வேண்டும்

" தர்மத்தில் சிறந்தது ரமழானில் வழங்கப்படும் தர்மமாகும்"

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் நோன்பு காலங்களில் அதிக தான தர்மங்களை மேற் கொண்டார்கள்.

வறுமையானது கொடியது. வாழ்க்கைக்கே சவால் விடக்கூடியது. இதனால் சிந்தனை, பகுத்தறிவு என்பன மந்தநிலையை அடையும். ஈமானைக் கூட பறித்துவிடக்கூடிய கொடிய மிருகம். ஏனெனில் வறுமைப்படும் போது மனிதன் அறநெறிகளிலிருந்து தவறி தன் நற்பண்புகளைத் துறக்கும் மிருகநிலைக்குச் சமனாகின்றான். இதனால் பண்பற்ற செயல்களும், துர்நடத்தைகளும், முறைகேடுகளும் நடந்து வாழ்வின் பெறுமதியை இழிவுபடுத்தலாம்.பல வறுமைப்பட்ட குடும்பங்களின் கட்டமைப்புக்களும், நடத்தைச் சிறப்புக்களும் சீரழிந்துள்ளன.  எனவே இதன் பயங்கர நிலைக்குள் முஸ்லிம்கள் வீழாமல் நிலைத்திருக்க ரமழான் உதவுகின்றது.இந்த ஆபத்துக்களை நீக்க நாமும் முயல்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தின் இருக்கைக்கான அத்திவாரங்களையும் இடலாம்..

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள்,

" வறுமையானது குப்ரையும் ஏற்படுத்தி விடக்கூடியது."

குப்ரிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபியவர்கள், அதனுடன் இணைத்து 'பக்ர்' என்ற வறுமையிலிருந்தும் பாதுகாப்பு தேடியமை அவையிரண்டுக்குமிடையிலான தொடர்பை நம் முன்வைக்கின்றது.

இஸ்லாம் அநாதைகள் மீது அதிக கரிசனை காட்டுகின்றது.ஏழைகளை ஆதரித்து வறுமையை ஒழித்துக் கட்டாதவன் தீனை உண்மைப்படுத்துவனல்லன் என்பதை திருமறையும், ஹதீஸ்களும் நவின்றுள்ளன.

தீனைப் பொய்ப்பிப்பவன் பற்றிக் கூறும் ஸூறா அல்மாஊன் பின்வருமாறு கூறுகின்றது-

"அவன்தான் அநாதைகளைக் கடிந்து விரட்டுபவன்"

" அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவும் மாட்டான் "

உண்மையில் ஏழைக்கு தானும் உணவளித்து, பிறரையும் தூண்டி வறுமையை அழிக்கும் செயலில் ஈடுபடாதவர் இஸ்லாம் மார்க்கத்தை பொய்ப்பிப்பவராகவே கருதப்படுகின்றார். இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.

"நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை விசுவாசிக்கவில்லை. ஏழைகளுக்கு ஆகாரமளிக்கவும்படி தூண்டவுமில்லை. ஆகவே இன்று அவனுக்கு இங்கு எந்த நண்பனும் இல்லை. புண்களில் வடியும் சீழைத் தவிர அவனுக்கு வேறு ஆகாரமும் இல்லை எனக் கூறப்படும் . அதனைக் குற்றவாளிகளைத் தவிர வேறு எவரும் புசிக்க மாட்டார்கள்"

தன் மீதுள்ள கடமை, பொறுப்புக்களை மாத்திரமே நிறைவேற்றி , சமூகக் கடமைகளை உதாசீனம் செய்வோரை இஸ்லாம் ஆதரிப்பதில்லை.

எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும், பண்பாட்டையும் வழங்கி, சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடிய செயல்களில் நாம் ஈடுபடும் போதே எமது இபாதத்துக்கள் நன்மை பயப்பனவாகையாக இருக்கின்றன..

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் ஓரங்கம். அச் சமுகம் உயிர்ப்போடு இருக்கும் போதே அவனாலும் நிம்மதியாக, மகிழ்வுடன் அச் சமுகத்தில் தன்னைப் பொறுத்தி பயனடைய முடியும்.

முஸ்லிமின் இவ்வுலக கஷ்டங்களிலிருந்து அவனை நீக்கி, அவனுக்கு உதவி செய்து நிறைவான வாழ்வுக்குள் அவனை அழைத்துச் செல்லும் கடமைப்பாடு எம்மெல்லோரின் கடமையாகும்.

எனவே ஈகையினதும், கருணையினதும் மாதமாகிய இப் புனித ரமழானில் சமூகத்தில் வாழ வழியற்றுத் தவித்துக் கொண்டிருக்கும் வறியவர்கள், அனாதைகள், எளியவர்கள் மீது மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டி இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளை, உதவியைப் பெற்றுக் கொள்வோமாக!


2012/08/01

காட்டூன்


ரோசா இதழ் பிழிந்து
தேகம் நெய்த என் மழலையாள்........
தன்
மங்களச் சிரிப்பின் கரகோஷத்தில்
நிதமும்
காட்டூன்களோடு உறவாகின்றாள்
ரசிப்பைச் சிந்தி!

கோடுகள் பல வரைந்தும்
உரு நெய்தும்.........
வண்ணங்களால் மேனி வார்த்தும்
பேசிடும் சித்திரங்களில்...........
வியப்பின் நெருடல்
விண்வரை எட்டிப் பார்க்கும்
என்னுள்!

உயிரேந்தும் சித்திரங்கள்
பேசும் பொம்மைகளாய் மாறி
விசித்திரம் காட்டுகையில்...........
பூரித்து நிற்பது ...........
குழந்தை மட்டுமல்ல
நானும் தான் !

பேசும் பொம்மைகள்
குதிப்பதும் ஓடுவதும்
குஷி காட்டிச் சிரிப்பதுமாய்
எம்மைப் போஷிக்கையில்............
கவலைகள் தூசியாய் பறக்க
மனமோ லேசாகிப் போக............
நானோ
மீண்டும் உயிர்ப்பேன் குழந்தையாய்!

தூரிகையில் உயிர் கொடுக்கும்
முகந்தெரியா அந்த ஓவியனுக்காய்......
என்
வாழ்த்துக்கள் தூதாகும்.............!
அவை
காத்திருக்கும் காட்டூனுலகில்
கரந்தொடுத்து மகிழ்ந்திருக்க!

கற்றலும் சொற் புகட்டலும்
சிந்தைமிகு பாடல்களும்.................
சிரிப்பூட்டும் கதைகளுமென - மனதை
பூரிக்கச் செய்யும் சித்திரங்கள்
மின் திரையில்
வேடிக்கை காட்டுகையில்.......
நானும் சிறகடிக்கின்றேன்
சின்னச்சிட்டாய்
குழந்தையுலகில்!

முன்பெல்லாம்
அடம்பிடித்து என் கரமிழுத்து
கார்ட்டூனியக்கத்திற்காய்
கணனிமுன்னமர்ந்த என் மழலையாள்
இப்பொழுதோ அவளழையாமல்.........
தோள் தொடுகின்றன
பேசும் பொம்மைகள்
என் விருந்தினராய்!

கதை சொல்லும் நான்..............
இப்பொதெல்லாம்
கதை கேட்பவளாய் மாறி...........
காட்டூனோடு சஞ்சரிக்கின்றேன்
பிஞ்சுலகின் அங்கத்தவராய்
மீள உருமாறி!

ஜன்ஸி கபூர்