2012/08/01
காட்டூன்
ரோசா இதழ் பிழிந்து
தேகம் நெய்த என் மழலையாள்........
தன்
மங்களச் சிரிப்பின் கரகோஷத்தில்
நிதமும்
காட்டூன்களோடு உறவாகின்றாள்
ரசிப்பைச் சிந்தி!
கோடுகள் பல வரைந்தும்
உரு நெய்தும்.........
வண்ணங்களால் மேனி வார்த்தும்
பேசிடும் சித்திரங்களில்...........
வியப்பின் நெருடல்
விண்வரை எட்டிப் பார்க்கும்
என்னுள்!
உயிரேந்தும் சித்திரங்கள்
பேசும் பொம்மைகளாய் மாறி
விசித்திரம் காட்டுகையில்...........
பூரித்து நிற்பது ...........
குழந்தை மட்டுமல்ல
நானும் தான் !
பேசும் பொம்மைகள்
குதிப்பதும் ஓடுவதும்
குஷி காட்டிச் சிரிப்பதுமாய்
எம்மைப் போஷிக்கையில்............
கவலைகள் தூசியாய் பறக்க
மனமோ லேசாகிப் போக............
நானோ
மீண்டும் உயிர்ப்பேன் குழந்தையாய்!
தூரிகையில் உயிர் கொடுக்கும்
முகந்தெரியா அந்த ஓவியனுக்காய்......
என்
வாழ்த்துக்கள் தூதாகும்.............!
அவை
காத்திருக்கும் காட்டூனுலகில்
கரந்தொடுத்து மகிழ்ந்திருக்க!
கற்றலும் சொற் புகட்டலும்
சிந்தைமிகு பாடல்களும்.................
சிரிப்பூட்டும் கதைகளுமென - மனதை
பூரிக்கச் செய்யும் சித்திரங்கள்
மின் திரையில்
வேடிக்கை காட்டுகையில்.......
நானும் சிறகடிக்கின்றேன்
சின்னச்சிட்டாய்
குழந்தையுலகில்!
முன்பெல்லாம்
அடம்பிடித்து என் கரமிழுத்து
கார்ட்டூனியக்கத்திற்காய்
கணனிமுன்னமர்ந்த என் மழலையாள்
இப்பொழுதோ அவளழையாமல்.........
தோள் தொடுகின்றன
பேசும் பொம்மைகள்
என் விருந்தினராய்!
கதை சொல்லும் நான்..............
இப்பொதெல்லாம்
கதை கேட்பவளாய் மாறி...........
காட்டூனோடு சஞ்சரிக்கின்றேன்
பிஞ்சுலகின் அங்கத்தவராய்
மீள உருமாறி!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Post Comments (Atom)
nice
ReplyDeleteநன்றி
Delete