About Me

2012/08/08

ஐ லவ் யூ சொன்னால்....


இப்பொழுதெல்லாம் .  வீதியோரங்களில் அநாவசியமாக   வீசியெறிப்படுகின்ற உணர்வே காதலாகி விட்டது. காதலாகி கசிந்து மனமுருகி உணர்வுகளை வார்க்க வேண்டிய இந்தக் காதல், இன்று நாகரீகவுலகில் அதன் அர்த்தம் தெரியாமல் அலைமோதுகின்றது.

பல போலிக்காதல்கள் சிறு சலன தூறல்களில் காளான்களாகி கண்காணும் இடங்களிலெல்லாம் பூத்திருக்க, உண்மைக் காதல்களும் உயிர் தளிர்த்து  கண்களை குளிர்ச்சிப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்புமிகு இக் காதலை என் பார்வையின்று "ஐ லவ் யூ" எனக் குதூகலிக்கும்  அசையும் படங்களினூடாக ரசிக்கின்றது. இப்பதிவைக் கண்டதும் சிலர் ரசிக்கலாம். சிலர் முகம் சுளிக்கலாம். 

வார்த்தை "தீ"யென்று உச்சரிக்கும் போது நா சுடுவதில்லை. காதலைப் பற்றி சொல்பவர்கள் எல்லாம் காதல் அனுபவம் கொண்டவர்கள் அல்ல.

இந்த முன்னுரையோடு உங்களுக்கும் "ஐ லவ் யூ " சில விசயங்களை ரகஸியமாகச் சொல்லப் போகின்றது.


வாலிபப் பருவமென்பது வசந்தங்களைத் தேடியழைக்கும் பருவம். சுடுகின்ற யதார்த்தங்களை விட சுகமான கனவுகளை நாடிக் கிடக்கும் பருவம். உள்ளம் ரகஸியமாய்த் தேடும் சுகந்தமான உணர்வின் அறைகூவலில் எதிர்பாலினர் தொடர்பான இரசாயனமாற்றங்கள் அதிகளவில் கசிந்து பொசிந்து கலவையாகும் போது தூதுக்கள் மன்மத அம்புகளாகி குறித்த இதயத்தின் காலடி தேடி ஓடும்.

ஏற்றுக் கொள்ளப்படும் காதல்கள் முத்தத்தை மொத்தமாய் கொள்வனவு செய்ய, நிராகரிக்கப்படும் காதல் தூது தன் வாழ்வை சோகத்துள் நனைத்து நிற்கும்.குறித்த இருவரிடத்தில் பற்றுதல் கூடுதலாகி ஈர் இதயங்களும் கிறக்கத்தில் ஓரிதயமாய் வீழ்ந்து தமக்கிடையே தம் உயிர்சாசனத்தில் காதல் ஒப்பந்தத்தை எழுதிவிடுகின்றனர். மன்மதன்களின் கூடலிலே பல ரதிக்கள் மயங்கிக் கிடக்க காதல் வரலாறு அவர்களுக்குள் ஆனந்த புன்னகையை விசிறியவாறு எழுதப்படத் தொடங்குகின்றது.



மனித மனங்களை நந்தவனங்களாக்குவதும், மயானங்களாக்குவதும் இந்தக் காதல்தான். காதல் என்பது இதயவேலிகளில் நாட்டப்படும் முள்வேலி என்பதால் பிறரின் காதல் தூதுக்களை  உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றது. கற்பனைகளின் அரங்கேற்றம் காதல் மனங்களிலேயே பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்படும் போது காதல் வயப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் தமக்குள் ஆபரணங்களாய் அணிந்து தம் காதல் உறவுக்குள் வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் எந்நேரம் உச்சரிக்கும் மந்திரம் "ஐ லவ் யூ " தான்.



கண்கள் வழியாக இறங்கும் காதல் கருத்துக்களில் படிந்து இதயத்தில் சங்கமித்து உணர்வாகி உயிராகும் போது திருமணம் எனும் சடங்கால் அந்தஸ்து பெற முனைகின்றது. மனங்களால் ஒன்றித்தவர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்கும் வரை நிஜம் தொலையும் கற்பனை உலகில் கலந்து கிடக்கின்றனர். அவர்கள் இதயம் இடமாறிக் கொள்ள, விழிகளும் அவர்களைச் சுற்றியே படர்கின்றது. அவர்கள் இதயம் சங்கமிக்கும் உலகில் அவர்களது காதல் நினைவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. பிறர் பற்றிய பார்வைகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.


தங்களுக்குள் நிதம் நிதம் நிரம்பும் கனவுகளுக்கு உருவேற்றி, அக் கனவுகளின் சிலிர்ப்புக்குள் தன் அன்பானவர்களையும் அடக்கி விடத் துடிப்பார்கள். உணர்வுகள் ஏந்தும் ஆசைகள், கனவுகளை மையாக்கி, அவர்களின் மென் கரங்களைச் சூடேற்றி மோகத்தில்  தவிக்கும் காதல் கடிதங்களாய் மாற்றி, தன் துணையின்  முகம் தரித்திருக்கும் முகவரிக்குள் கடிதங்களைச் நுழைத்து விட காதல் மனங்கள் துடிக்கின்றன.  அக் கடிதத்தின் அழைப்பு மணி "ஐ லவ' யூ' என கோஷித்துக் கொண்டேயிருக்கும் அடுத்த கடிதம் காணும் வரை!


 எதிர்காலம் அவர்கள் கண்முன் விரிய  அக் கடிதங்களில் பல முறை பார்வையைப் பதித்து  அடிக்கடி தம் நிஜ வாழ்விலிருந்து விலகி, கற்பனை ராஜாங்கத்தின் சிம்மாசனத்தில் இருவருமே ஏறியமர்ந்து  முடி சூடிக் கொள்கின்றனர்.காதலர் கரம் சேரும் கடிதங்களும், அவர்களின் நேச அன்பளிப்புக்கும், உயிர்ப்பான வார்த்தைகளின் ஞாபகங்களுமே இவர்களின் ஆயுட்கால ஆவணங்களாய் உயிருக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும் காலம் முழுதும்!

காதல் ஒரு போதையாகவும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகவும் விளங்குவதால் காதல் வயப்பட்டவர்கள் மகிழ்ச்சியூற்றுக்களில்  நிதம் தம்மை நனைத்து துன்பமிகு யதார்த்தங்களிலிருந்தும் விலகி விடுகின்றனர்.  சிறகடிக்கும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய் இருவரும் தம்முலகில் பறக்க முயற்சிப்பதால் புறவுலகை அவர்கள் மறந்து பிறரின் பார்வையில் வெறும் கண்காட்சிப் பொருட்களாய் மாறி விமர்சனத்துக்குள்ளும் வீழ்ந்து விடுகின்றனர் சிறு பிள்ளைத்தனமாய்!


புகையைப் போல காதலையும் மறைக்க முடியாதென்பார். இருவர் மனப்பூர்வமாக ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து வாழ முயற்சிக்கையில் அவர்களையுமறியாமற் காதல் மோகத் தீயை அடுத்தவர் கண்களுக்குள் விசிறி விடுகின்றனர்.அவனும் நோக்க அவளும் நோக்க அவர்களிருவரையும் ஊரார் நோக்க உள்ளத்தில் மோகித்து சுடர் விட்டெரியும் காதலொளி பிறர் பார்வையில் தீப்பந்தமாய் வெளியே எட்டிப் பார்க்கின்றது. ஊர் பார்வைக்குள் உருளும் காதல்களில் சில  திருமண முழக்கத்தில் மனம் மகிழலாம். சில பெரியவர்கள்  எதிர்ப்பில் முறிந்தும் போகலாம்.


அழகு ஒரு கவர்ச்சியான ஊக்கியாகவிருந்தாலும் கூட  பல காதல் முக வழகு தேடாது அகத்தின் இருப்பில் படிந்திருக்கும் மெய் யன்பின் எதிர்பார்ப்பிலேயே குறி வைத்திறங்குகின்றன. நண்பர்கள் துணை நிற்க தம் எதிர்பார்ப்புக்களை வாழ்க்கையாக்க பல மனங்கள் போராட்டத்தில் களம் குதித்தாலும், சில மனங்களோ எதிர்ப்பின்றி இல்லற பந்தத்தில் பெரியோர் ஆசியுடன் நுழைந்து வாழ்வைத் தொடங்கி விடுகின்றனர்.



வாழ்த்துவோம் நாமும் காதலர்களை!

அவர்களின்  அன்பு தாலியாய் பெண் கழுத்தில் மங்கள நாண் பூட்ட, அவர்கள் தடங்கள் பயணிக்கும் வாழ்க்கை யோரங்களில் வீழ்ந்து கிடக்கும் முட்களெல்லாம் மென்மலர்களாய் உருமாறி அவர்களை ஏந்திக் கொள்ளட்டும் கால முழுவதும் !


இனி அவர்கள் மௌன வுலகில் நமக்குள் அனுமதியில்லை.  அவர்கள் உலகில் அவர்களே தனித்திருக்கட்டும் தம் கனவுகளைப் பரிமாறிக் கொள்ள !


-Jancy Caffoor-


உன்னுயிர் பற்றி


இருள் கிழித்து ...........
மௌனமாய் உருகும் நிலவெளியில்
மானசீகமாய் மயங்கிக் கிடக்கின்றன
நம் நினைவுகள்!

உன்னருகாமையில் - நான்
படர்ந்திருக்கும் - அந்த
நிசப்த தணலில் ............
பற்றியெரியும் தீயாய்
மோகித்துக் கிடக்கின்றது
நம்மன்பு!

விரல்களின் மோதல்களைத்
தவிர்த்திட மனமின்றி ...........
நம் மேனியோ
உஷ்ணத்தின் வெளிநடப்பால்
வெட்கம் தொலைத்து நிற்கின்றன
ஏக்கங்களை ரசித்தபடி!

எங்கோ.................
சிறகறுத்து வரும் தென்றல்
கொஞ்சம் முறைத்துச் செல்கின்றன
இடைவெளி மறந்த
நம் .............
இதழோரங்களைக் கண்டு!

நம்.......
உயிர் தள  மூச்சோரங்கள்
எகிறிக் குதிக்கின்றது
நேசத்துடன் வாசிக்கப்படும்
உணர்வுப் பரிமாற்றத்தின்
வீரியம் கண்டு!

சத்தமின்றி நம் சந்திப்புக்காய்
கை காட்டும் நாட்காட்டி
வெட்கத்தோடு ஒதுங்கிக் கிடக்கிறது........
இடையிடையே
தடையின்றி மோதும் நம்
முத்தச் சிலிர்ப்பில்!

கொந்தளிக்கும் அலை நடுவே
தத்தளிக்கும் சிறு மீனாய் ........உன்
அணைப்பினிறுக்கத்தில்
சிவந்து கிடக்கின்றேன்
விடுதலை தேடா கைதியாய்
மாறி!

உன் உயிர் பற்றி
உருளுமென்னுலகில் ......
கடிகார அலைவுகள்
நிதானித்தே செல்கின்றன
உன்னை.......
என்னுள்ளிடமாற்றும் வரை!




ஜன்ஸி கபூர் 



கனவொன்று


இப்பொழுதெல்லாம்
அடிக்கடி............
கனவொன்று கிள்ளுது  என்னுள்!
நம்..........
காதல் சரித்திரங்களை
நூறாண்டு வாசித்தபடி!

பனித்துளிகளின் சில்மிஷங்களுக்குள்
சிலிர்த்துக்கிடக்கும் ரோஜாக்களாய் ..........
நாம்
நடப்படுகின்றோம் தினம் - நம்
காதல்வெளியில்!

நிதம் நீயென்
இரவுச் சொப்பனத்திலே - என்
உறக்கமறுத்து
உணர்வு பிழியும்
இரகஸிய  கணவனாய்
இம்சிக்கின்றாய் இதமாய்!

விளக்கெரிக்கும் நேரத்தில்
விட்டிலாய் என்னைச் சுற்றிச் சுற்றி
வில்லத்தனம் பண்ணும் - உன்
முரட்டுக் கரங்களில் - தினம்
முடிச்சவிழத் திணறுகின்றன
என் நாணம்!

உன் சீண்டலும்
என் சிணுங்கலும்
அன்பின் பரிமாற்றங்களாயானதில்.......
சில் வாண்டுகள் பல- நம்
வண்ணச்சோலையின் அங்கத்தவராய்
புது முகம் காட்டினருன் சாயலில்!

நாட்களின் நடைப்பயணத்தில்
நம்.........
வாலிபம் கரைந்தோடுகையில்
திரையாய் நரை  பல.............!

தளர்ந்த சுருக்கங்களும்
தள்ளாடும் நடையும்
துள்ளியோடும் பேரர்களை
அள்ளியணைத்து ரசிக்கையில்
குழந்தையாய் நாமும்
நமக்குள் புதைந்து போகின்றோம்!

நம்
மனக் கருவறைக்குள்
உயிர் கொண்ட காதல்...............
கல்லறைக்குள் வீழ்கின்ற போது
நம்
ஆத்மாக்கள்  இணைந்தே செல்கின்றன
நமக்கிடையிலான
பிரிவை மறுத்தபடி!

உறக்கம் சிரிக்கின்றன
கனவுகள் அறுகின்றன!
மெதுவாய் கண்ணவிழ்த்து
உனைத் தேடுகின்றேன் அருகாமையில்!

நீயோ தொலைவில் நின்று
கண்சிமிட்டியவாறே.........
கன்னம் கிள்ளுகின்றாய்
காத்திரு
நாளை வருவேனென்று!

ஜன்ஸி கபூர் 

2012/08/07

மனசே மனசே


வீட்டு முற்றத்தில் சிதறிக்கிடந்த  இரையை உற்சாகமாகத் தேடிப் பொறுக்கித் தின்னும் சின்னச்சிட்டுக்களின் சிரிப்பொலியும் அவ்வொலி ஞாபகப்படுத்தும் சலங்கை யொலியும் பலமாய் என் காதுகளுக்குள் விழுந்த போது மேலும் உறங்க முடியவில்லை. தூக்கம் சிதறியோடியது. கண்களை விரித்து உறக்கத்திற்கு விடை கொடுத்தேன்.....நன்றாக விடிந்து விட்டது. கடிகார முட்கள் ஏழைத் தொட்டு நின்றன.

விடிந்து விட்ட இயற்கையின் பரபரப்புக்குள் ஒன்றித்துக் கிடக்க மனசேனோ இடம் தரவில்லை. அமைதிக்குள் அடங்கிப் போனவளாய் வெளி முற்றத்தில் என் கால்களைப் பதித்தேன்.

என் பார்வை என்னையுமறியாமல் மேல் மாடியில்  வீசப்பட்டது.  காயப் போடப்பட்டிருக்கும் வெள்ளை நிற தாதி யூனிபார்ம் கோட்டுக்களால் நிரப்பப்பட்டிருக்கும் கயிற்றுக் கொடிகள் பொலிவிழந்து வெறுமையாகிக் கிடந்தன. மனம் சங்கடப்பட அப் பார்வையை அறுத்தவளாய் மறு புறத்திலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தைப் பார்க்கின்றேன். அங்கும் வெறுமை......... மீண்டும் மனசு வெறுமைப் பிரளயத்தில்  கரைந்தோட சில நினைவுகள் எனக்குள் உட்கார்ந்து விழிகளை அரிக்கத் தொடங்கின!

" நிசங்க"

பார்க்குமிடத்திலெல்லாம் அவன் விம்பமாய் பூத்து நின்றான்.

நாங்கள் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையொன்றில்தான் அவனும்  வாடகைக்கு எடுத்துத் தங்கிருந்தான்.அவன் ஒரு பயிலுநர் தாதி. எங்களூர் வைத்தியசாலையிலேயே நியமனம் கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் அவனுக்கும் எனக்கும் இடையில் வெறும் புன்னகை மட்டுமே பாஷையாக இருந்தாலும் கூட  காலப் போக்கில் எங்கள் சின்னப் பாப்பா மூலம் அவனுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

"நர்ஸ் மாமா வாறார் "

இரண்டரை வயதுக்குழந்தையின் மழலை மொழி கேட்கும் போதெல்லாம் அவன் பாப்பாவுடன் கதைக்க எங்கள் வீட்டு முற்றத்திற்கே  வந்துவிடுவான். அவன் கதைக்கும் சிங்களப் பாஷை குழந்தைக்கு விளங்காவிட்டாலும் கூட அவன் காட்டும் அன்பும், அவன் சிரித்த முகம் காட்டும் அபிநயமும்  அவளுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டன.

எங்கள் வீதியில் அவன் மோட்டார் சைக்கிள் உறுமிக் கொண்டு வரும் போதெல்லாம் பிள்ளை அவனை வீட்டுக்குள்ளிருந்தே அடையாளம் கண்டவளாய் , "நர்ஸ் மாமா" என கூவிக் கொண்டு வீட்டுக்குள் மறைந்து நின்று அவன் வருகையை எதிர்பார்த்து  காத்து நிற்பாள். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளி முற்றத்துக்குள் வந்து அவனது மேல்மாடி அறையை அண்ணார்ந்து பார்ப்பாள்.. அவனுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பதால் வீட்டுக்குள் போவதைப் போல் பாசாங்கு செய்து கதவுக்குள் மறைந்து நின்று அவள் வெளியே வந்ததும் ஓடி வந்து தூக்குவான். அவள் சிரித்துக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலகி வீட்டுக்குள் ஓடி வரத் துடிக்கும் போதெல்லாம், அவர்கள் இருவருக்குமிடையில் நடுவராக நின்று அவன் பிடியிலிருக்கும் அவளைச் சமாதானப்படுத்துவது  நானே என்பதால் தொடர்ந்து வந்த நாட்களில் அவன் புன்னகை என்னைக் கண்டதும் வார்த்தைகளாக மாறின. பிள்ளையின் செயலைப் பற்றி கதைப்போம். அந்த நல்ல நட்பில் அவன் என் மனதுக்குள் மெதுவாக இறங்கினான்.பாப்பாவுக்கும் அவனுக்குமிடையிலான இந்த அன்பு விளையாட்டை நான் அதிகம் ரசித்தேன். சில நேரங்களில் அவர்களின் சிரிப்பில் என் சிரிப்பும் கலந்து கிடக்கும்

நாட்களின் வேகமான பயணத்தில் அந்த நாட்களும் வந்தது. அவன் தாதிப் பயிற்சி நிறைவடைந்து தன் ஊருக்கே மாற்றலாகிப் போகும் அந்த இறுதித் தருணங்களும் வந்தன..சின்னவளோ இந்த உண்மையை அறியாமல் வழமைபோல் அவனுடன்  ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் எங்கள் ஊரைவிட்டுப் போகும் கடைசி நிமிடங்களையும் சந்தித்து எம்மிடமிருந்து விடைபெற்றும் சென்றுவிட்டான் ....

உர்ரென்று வீதியை உரசிச் செல்லும் மோட்டார் சைக்கிளின் ஓசையொன்றின் அதிர்வைக் கேட்டு  சின்னவள் கைதட்டி உற்சாகமாகச் சிரிக்கின்றாள்

"நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்"

அவள் குரலதிர்வு எனக்குள் வேதனையைக் கிளற ,மெதுவாக குழந்தையிடம் சொல்கின்றேன்.

" நர்ஸ் மாமா , இனி வரமாட்டார் செல்லம்"

மனசின் வேதனையோடு  நான் கூறும் வார்த்தைகளை அவள் கேட்பதாக இல்லை. புரிந்து கொள்ள முடியாத அந்த வயசு, தன்னிடம் பதிவாகியுள்ள நம்பிக்கையை மட்டுமே சுமந்தவாறு மீண்டும் மீண்டும் உற்சாகமாக குரல் கொடுக்கின்றாள்.........

"நர்ஸ் மாமா வாறார்............நர்ஸ் மாமா வாறார்"

அவள் அன்பு .......வார்த்தைகளாகி காற்றோடு வேகமாக மோதி வீடெங்கும் ஒலிக்கத் தொடங்க,  நானோ   பிள்ளையின் தவிப்பைக் கண்டு கண்கலங்கி நிற்கின்றேன் சோகத்துடன் !............

இந்த அன்பின் அவஸ்தையில் தவித்துக் கிடப்பதென்னவோ மனசுதானே!