இப்பொழுதெல்லாம்
அடிக்கடி............
கனவொன்று கிள்ளுது என்னுள்!
நம்..........
காதல் சரித்திரங்களை
நூறாண்டு வாசித்தபடி!
பனித்துளிகளின் சில்மிஷங்களுக்குள்
சிலிர்த்துக்கிடக்கும் ரோஜாக்களாய் ..........
நாம்
நடப்படுகின்றோம் தினம் - நம்
காதல்வெளியில்!
நிதம் நீயென்
இரவுச் சொப்பனத்திலே - என்
உறக்கமறுத்து
உணர்வு பிழியும்
இரகஸிய கணவனாய்
இம்சிக்கின்றாய் இதமாய்!
விளக்கெரிக்கும் நேரத்தில்
விட்டிலாய் என்னைச் சுற்றிச் சுற்றி
வில்லத்தனம் பண்ணும் - உன்
முரட்டுக் கரங்களில் - தினம்
முடிச்சவிழத் திணறுகின்றன
என் நாணம்!
உன் சீண்டலும்
என் சிணுங்கலும்
அன்பின் பரிமாற்றங்களாயானதில்.......
சில் வாண்டுகள் பல- நம்
வண்ணச்சோலையின் அங்கத்தவராய்
புது முகம் காட்டினருன் சாயலில்!
நாட்களின் நடைப்பயணத்தில்
நம்.........
வாலிபம் கரைந்தோடுகையில்
திரையாய் நரை பல.............!
தளர்ந்த சுருக்கங்களும்
தள்ளாடும் நடையும்
துள்ளியோடும் பேரர்களை
அள்ளியணைத்து ரசிக்கையில்
குழந்தையாய் நாமும்
நமக்குள் புதைந்து போகின்றோம்!
நம்
மனக் கருவறைக்குள்
உயிர் கொண்ட காதல்...............
கல்லறைக்குள் வீழ்கின்ற போது
நம்
ஆத்மாக்கள் இணைந்தே செல்கின்றன
நமக்கிடையிலான
பிரிவை மறுத்தபடி!
உறக்கம் சிரிக்கின்றன
கனவுகள் அறுகின்றன!
மெதுவாய் கண்ணவிழ்த்து
உனைத் தேடுகின்றேன் அருகாமையில்!
நீயோ தொலைவில் நின்று
கண்சிமிட்டியவாறே.........
கன்னம் கிள்ளுகின்றாய்
காத்திரு
நாளை வருவேனென்று!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!