About Me

2012/08/18

கசக்கப்படும் மலர்கள்



                                                Fathima Afra 

இவ்வுலகம் எவ்வளவு விரைவாக நவீனத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு செல்கின்றதோ, அதற்கு எதிர்மாறாக வக்கிர உணர்வுகளையும் அதிகளவு சம்பாதித்துக் கொண்டு செல்கின்றது. மூடநம்பிக்கைகள், நரபலி என அற்பமான சிந்தனைகள் இன்னும் இவ்வுலகத்தின் நடைப்பயணத்திலிருந்து விலகிப் போகாமலிருப்பது ஆச்சரியமே!

கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு என தொடரும் பஞ்சமாபாதகங்களின் ஆணிவேர் முற்றாக அறுக்கப்படாத நிலையில், மனித சமுகம் எவ்வளவுதான் நாகரிகமடைந்ததாக தன்னைக்காட்டிக் கொண்டாலும் அதன் பெறுமதி பூஜ்ஜியமே

அண்மையில் நான் கேள்விப்பட்ட சம்பவமே என்னை இவ்வாறு எழுதத்தூண்டியுள்ளது.

இறைவனின் அழகிய, அற்புத படைப்புக்களில் குழந்தையும் ஒன்று. குழந்தைப்பருவம் ஒரு சில வயதேற்றங்களின் பின்னர் பிள்ளைப்பருவமாக மாற்றப்பட, வீடென்று இருந்த பிள்ளையின் உலகம் பாடசாலை வரை நீளுகின்றது..மலரைப் போன்று மென்மையான உணர்வும், உடலும் கொண்ட இந்த சின்னவர்களின் அன்பும் , அவர்கள் சார்பான உலகமும் எம்மை மகிழ்ச்சிப்படுத்தும் நந்தவனங்கள் என்பதனை  மறுப்பவர் யாருமில்லை !

பாத்திமா அfப்ரா...................!

வெலிகம, கோட்ட கொடையைச் சேர்ந்த தரம் ஒன்று கற்கும் பால்மணம் மாறாத சிறுமி...பாடசாலை வாழ்விற்குள் நுழைந்து இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாகாத மலரிவள்..

அச் சிறுமிக்கு அவன் முகம் ஏற்கனவே பழக்கப்பட்ட நிலையில், அவன் அன்று அச்சிறுமியை அணுகி பூச்செண்டு தருவதாக கூறி ஆசைப்படுத்தவே அப்ராவும் அவனுடன் அவன் வீட்டுக்குச் சென்றுள்ளாள்.

அவன் காமுகன். பெண்கள் குளிப்பதையெல்லாம் மறைந்திருந்து பார்த்து, பல தடவைகள் பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டவன். அவன் பொழுதுபோக்கே ஆபாசப்படக்காட்சிகளை ரசிப்பதுதான்!

அவன் முன்பு மனநலப்பாதிப்படைந்து குணமடைந்தவன். அந்தக் கொடியவன் மூடநம்பிக்கைகளிலும், அதிக விசுவாசம் கொண்டிருந்தான்.. அவனது தீராத நோய் குணப்படுத்தப்பட வேண்டுமானால், சிறுவர் ஒருவரை நரபலியிட வேண்டுமென்பதில் அவன் குடும்பத்தினரும் அதிக  நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் அந்தத் தேடலுக்கு அfப்ரா இரையானாள்.

அந்த ஆறு வயதுச் சிறுமி அfப்ராவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவன் , வீட்டில் மறைத்து வைத்திருந்தமண்வெட்டியினால் அf ப்ராவைத் தாக்கி , அவள் முகத்திலும் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தி, சிறுமி சிந்திய இரத்தத்தில் தன் நரபலி வெறியைத் தணித்துள்ளான் அந்தக் காமுகன்.

அவனது தாக்குதலில் துடிதுடித்துக் கசக்கப்பட்ட அப்பிஞ்சு, தனது  மூச்சையடக்கிய  பின்னர், அவளது சிதைந்த  உடலை ஒரு குறித்த வாழைமரத் தோட்டத்தில் மறைவாக வீசியிருக்கின்றான். எனினும் அவனது துரதிஷ்டம் இறந்த அfப்ராவின் உடல் வெளியுலகப் பார்வைக்குத் தென்பட்டு விட்டது.


பிள்ளை கொல்லப்பட்ட செய்தி கேட்டு திரண்ட உறவுகளும், ஊரும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து நையப்புடைத்து சட்டத்தின் கரத்தில் ஒப்படைத்துள்ளனர். அவன் இப்பொழுது சட்டத்தின் பிடியில் சிக்குண்டிருக்கின்ற ,  ஓர் கைதி..............!



அfப்ராவைக் கொலை செய்த பாதகன் இவன்தான்


அfப்ரா.........!

இப் பூவுலகில் இன்னும் பல காலம் வாழ்ந்து  , தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ வேண்டிய பூ ! சத்தியமும், மனிதாபிமானமுமற்ற மனிதர் சதியினால்  தன் காலடித்தடம் பதித்தோடித்திரிந்து , விளையாடிய  மணற்றரையிலேயே  அப்பிள்ளை நிரந்தரமாக உறங்குகின்றாள். மனித உயிர்களை தம் சுயநலத்திற்காக காவு கொள்ளும் எவரையும் என்றும் மன்னிக்கவே முடியாது!

சிறுமியைக் குருரமான முறையில் கொலை செய்த இவனுக்கு உயர்ந்த பட்சத் தண்டனை வழங்கவேண்டுமென்பதே, மனிதாபிமானமுள்ள மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.

இந்த மென்மையைக் கூடச் சிதைக்கும் வக்கிரத்தைப் பெற்றுள்ள இவனைப் போன்றவர்களை இப்புவியில் தரிக்க விட்டால், இன்னும் பல அப்ராக்கள் கசக்கப்படுவார்கள் என்பது கசப்பான, வேதனையான உண்மை! இந்தக் கொடும் பாவிக்கு மன்னிப்பு எனும் வார்த்தை லாயக்கற்றது.

இலங்கைச் சட்டத்தில் இப்பொழுது மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.  இவ்வாறான கொலைக் குற்றமெல்லாம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவதனால்தான் இந்தப் பாவிகளும் மரணதண்டனை அவஸ்தையிலிருந்து தப்பித்து விடுகின்றார்கள்...

சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள். சட்டத்தின் பிடியில் இவர்கள் தப்பித்துக்கொண்டாலும் கூட இறை தண்டனைக்கு நிச்சயம் ஆளாவார்கள் என்பதும்  மறுக்கப்படாத உண்மை!

காலம் பதில் சொல்லும்............!

இரத்தங்களால் அசுத்தமாகாத பசுமையான பூமியொன்றில் மனிதர்கள் வாழ்கின்றார்கள் எனும் சேதியை அது தாங்கிக் கொள்ளும்......இவ்வாறான காலமொன்று வருமா....அல்லது இதுகூட  நிறைவேற்றப்படமுடியாத காத்திருப்பா!

நம்பிக்கைதான் வாழ்க்கை......காலம் பதில் சொல்லும்!












முகநூல் டயறி


இந்தக் கட்டுரையில் சாடப்படுபவர்கள்  முகநூலில் பெண் நட்புள்ளங்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆண்களே !
------------------------------------------------------------------
வாழ்க்கை பல எதிர்பார்ப்புக்களின் கலவையாக இருப்பதனால் சவால்களும், போராட்டங்களும் அதிகரித்துச் செல்கின்றன இந்நாட்களில் !

மன வழுத்தங்களை  நாமும் சற்று இறக்கி வைத்து, நட்புலகில் வாஞ்சையுடன் சிறு நடைப்பயணம் பயில முகநூலுக்குள் பிரவேசித்தால், அங்கும் சில மன விகாரிகளின் அராஜகம்!

வெறும் பொழுதுபோக்கிற்காக முகநூலைப் பயன்படுத்துவோருமுண்டு. நல்ல ஆரோக்கியமான கருத்துக்கள் மூலம் தம்மைப் போஷிப்போருமுண்டு. இதில் நான் தற்போது இரண்டாவது ரகம்!

முகநூலில் உள் நுழைந்த ஆரம்ப நாட்களில் , இதனை நானும் நேரங்கடத்தும் பொழுதுபோக்கு ஊடகமென்றே கருதினேன். ஆனால் சில கசப்பான விடயங்களை மனம் உள்வாங்கியதில் ஓர்நாள் விழித்துக் கொண்டேன். அன்றிலிருந்து சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு பயணித்த முகநூல் பயணம் இப்பொழுதெல்லாம்  கலையுலகத்தின் சார்பானதாகவே உள்ளது.

நல்ல நண்பர்களை மிகக் கவனமாகத் தேர்வு செய்து முகநூல் பக்கங்களில் இணைத்தாலும் கூட, எப்படியோ சில விஷமிகளும் உள் நுழைந்து விடுகின்றனர்.

பேரலைகள் ஒருபோதும் ஓய்ந்திருப்பதில்லை என்பது போல், குறுகிய நோக்கத்தில் உள் நுழைந்து நண்பர் பட்டியலில் உட்கார்ந்திருப்பவர்களும் ஒரிரு நாட்களில் தம்மை இனங்காட்டி விடுகின்றனர். நட்பு இருக்கை கொடுக்கும் தைரியத்தில் தம் சிதைந்த வக்கிர மனதின் வெளிப்பாடாய் பின்னூட்டம் எனும் பெயரில் எதையெதையோ எழுதி சினமூட்டி விடுகின்றனர். பெண்களுடன் பிறக்காத இவர்கள்!

வேடிக்கையாகச் சொல்வதற்கும், விகாரமாகச் சொல்வதற்கும் வித்தியாசமுண்டு. போலி முகமூடியணிந்து நடமாடுமிவர்களை, அவர்கள் வார்த்தைகள் மூலம் கண்டறிந்தால் கழுத்தறுக்கவா முடியும். முகநூல் தடைப்பெட்டிக்குள் சிறைப்படுத்தவே முடியும். நட்பின் அந்தஸ்தைப் பேணாதோருக்கு இந்தத் தண்டனை கூட போதாதே!

ஏன் இந்தக் குதர்க்கம்?

இத்தனைக்கும் காரணம் நாங்கள் பெண் என்பதாலா? அதிலும் முஸ்லிம் பெண் என்பதாலா! நாங்கள் தவறாக முகநூலைப் பயன்படுத்த நினைத்ததில்லையே!

பெண்கள் முகநூலில் நல்ல விடயங்களைப் பரிமாறுவதில் உங்களுக்கென்ன சிரமம்? பெண்களைக் கேலிப்படுத்தி விளையாட  முகம் தெரியாத முகநூல் நண்பிகள் தான் கிடைத்தார்களா?

நம் மனதின் வெளிப்பாடு வார்த்தைகளே. பண்பான வார்த்தைகளைப் பரிமாறி உறவைப் பலப்படுத்துங்கள். மாறாக யாரோ தானே என்று உங்கள் பெயரை நீங்கள் தாழ்த்திக்கொண்டால், அதன் பாதிப்பு என்றோ ஓர் நாள் உங்களைச் சுற்றி வரும்!

நட்பை நாடி வருகின்ற விண்ணப்பங்களை, நாம் நல்லவர்கள் எனும் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்கின்றோம். அறிமுகமாகாதவர்களை நாம் நிராகரித்தால், பல வகையான வெளியுலகின் நடமாட்டத்தை இழக்க வேண்டியிருக்கும்...

பெண்கள் பெயரில் முகநூல் பக்கங்களை போலியாக உருவாக்கி, அதில் தங்கள் குரூரங்களை வெளியிடுவதன் மூலம் சில ஆண்கள்  தங்கள் வக்கிரத்தையே வளர்க்கின்றார்கள். ஒரு பெண்ணை ஒருவன் குற்றம் சுமத்தும்போது அவளை நன்கறிந்தவர்களுக்கு அவ் வார்த்தையின் நம்பகமும், அவனது மனநோயாளித்தனமும் புலப்படும்!

நண்பர்களாக இணையும் நீங்கள் நண்பர்களாகவே பயணியுங்கள். உங்கள் சில்மிஷங்களில் மயங்கி, உங்களில் ஈர்ப்புக் கொள்ளாதோரை விட்டு விலகுங்கள். உங்களுக்குப் பொருத்தமில்லாத நட்பை ஏன் முதுகில் சுமந்து செல்வான். யாரும் கட்டாயப்படுத்தவில்லையே! வேடிக்கை எனும் பெயரில் அடுத்தவர் மனதையறுக்கும், அடுத்தவர் சிறப்பை நறுக்கும் பண்பற்ற வார்த்தைகளை வெளிப்படுத்தாதீர்கள். சட்டத்தின் பிடியில் நீங்கள் சிக்குண்டால் அதன் விபரீதம் பயங்கரமானது.

"உன் நண்பனைக் காட்டு, உன்னைப்பற்றிக் கூறுகின்றேன் " என்பார்கள் ! நல்ல நண்பர்கள் என்ற  எம் எண்ணத்தில் கல்லறை கட்டும் சில மன விகாரிகளால், நட்பைக் கோரி கை நீட்டும் புதிய நட்புள்ளங்களை வரவேற்பதில் தயக்கம் எழுகின்றது...

இப்பொழுதெல்லாம் நான் திருப்தியடையும் ஓர் விடயம், கலையுலகோடு ஈடுபாடுள்ள நல்ல உள்ளங்களை என் நட்புப் பயணத்தில் இணைத்துள்ளேன். இருந்தும் சில சாக்கடைகளும் சத்தமில்லாமல் உள் நுழைந்து தன் கோரப் பற்களை நீட்டுகின்றன...

தவறானவர்களுக்கான பிரவேசம் நிச்சயம் என் முகநூலில் இல்லை. என் பதிவுகள் மூலம் என்னைப்பற்றிய ஒரு எண்ணக்கருவினை என் நட்பினர் பெற்றிருப்பார்கள்...என் இயல்போடு ஒத்தவர்களுக்காக என் நட்புக்கரங்கள் நீட்டப்படுகின்றன..பற்றிப்பிடியுங்கள்....பரிமாறுங்கள் நல்ல பதிவுகளையும் சிந்தனைகளையும்!

இயல்பில் ஒவ்வாதோர் என் முகநூல் பக்கத்திலிருந்து விலகிச்சென்று, உங்களைப் போன்ற கீழ்த்தரமான உணர்வுள்ளோருடன் கூட்டுச் சேருங்கள்!
அதுதான் எல்லோரின் மேன்மையைப் பேணும் வழி...!

நாம் பெண்கள். பலகீனமானவர்கள் எனும் நினைப்பில் எம் வாழ்வோடு விளையாட முனைவோர்க்கு மன்னிப்பென்றுமில்லை. ஆள் தரம், குணமறிந்து பின்னூட்டங்களையும் வார்த்தைகளையும் வெளிவிடுங்கள் !

உலகம் சுருங்கிக் கைக்குள் அடங்கிக் கிடக்கும் இன்றைய நாட்களில் முகநூலில் பிரவேசிப்பவர்கள் வெறும் கைநாட்டுப் பெண்களல்ல... படித்தவர்கள் பெரும்பாலும். தம்மைச் சூழவுள்ள அக்கிரமங்களை வேட்டுவைக்கும் துப்பாக்கி ரவைகளாக மாறவும் கூடியவர்கள்! ஏனெனில் அவர்களை விழிப்பேற்றுவது சில ஆண்கள்தான்!

மனிதர்கள் தவறு விடக்கூடியவர்களே! அவர்களின் தவறுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் தீர்மானித்து விடுகின்றன. நாம் தவறு விட்டால் பண்போடு சுட்டிக்காட்டுங்கள். ஏற்றுக் கொள்வோம். எமைச் சிதைப்பதாய் நினைந்து வன்முறையேந்தினால் அழிந்து போவது நீங்களே!

உங்கள் (பொறாமைக்)  கோஷங்களால் நிச்சயம் எம் கலைப்பயணம் தடைப்படாது. இன்னும் சிறக்கும். நானே ஆச்சரியப்படுமளவிற்கு என் திறமைகளை எனக்கு இனங்காட்டியவர்கள் எனது சில விரோதிகளே! அவர்கள் இன்னும் என் முகநூல் தடைப்பட்டியலில் உயிரறுந்து கிடக்கின்றனர்.

சிலருக்கு பொது அரங்கில் எதைப் பேசுவதென்று தெரியாமல் நட்பு அந்தஸ்தை இழந்து நிற்கின்றனர். இன்பொக்ஸூக்கும், பொதுப் பின்னூட்டத்திற்கும்  வித்தியாசம் தெரியாத இந்த மனநோயாளிகளை என்ன வென்று சொல்வதாம்!

முகநூல் பெண்களுடன் கேலி விளையாட அவர்கள் உங்கள் வீட்டு முறைப்பெண்கள் அல்ல...விதிவிலக்காக நீங்கள் இளித்தால் உங்கள் பின்னால் ஓடிவரும் சிலரை உங்களுக்காகத் தேர்ந்தெடுங்கள்..

சமூகத்தில் நல்ல முகம் காட்டும் எம்மை விட்டு விடுங்கள் உங்கள் அற்பமான பார்வைகளை எம் மீது வீசாமல்!

இது என்னைப் போன்ற பல பெண்களின் குரல்.. நாங்கள் சிறுமிகளல்ல. பருவக்குமரிகளுமல்லர்.  பருவக்கிளர்ச்சியால் மயங்கிக் கிடக்க!

வாழ்க்கையை அனுபவத்தால் நிறைத்தவர்கள்! உங்கள் நலிவான வார்த்தைகள் கண்டு பயந்து ஒடாத வலிமை பொருந்தியவர்கள்!

இதனைக் குறிப்பிடும் என்னைத் தலைக்கணம் பிடித்தவள் எனக் கருதினால் அது உங்கள் குற்றம். சிலவற்றைப் பாதுகாக்க சில போராட்டங்கள் தேவை!

இன்று என்னுடன் முகநூல் பயணத்தில் இணைந்த  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்ற சகோதரியொருவர் எனக்கனுப்பிய செய்தியொன்று என்னை வெகுவாகக் கவரவே, அந்த செய்தியை இதில் இணைக்க முடிவெடுத்தவளாய் என் ஆதங்கத்தைப் பதிவாக்கி வெளியிடுகின்றேன் என் வலைப்பூவில்! வாசித்துப்பாருங்கள்! அச் சகோதரியின் அனுமதியைப் பெற்றே இதனை நான் இணைத்தேன். இன்பொக்ஸில் நம்பிக்கையினடிப்படையில் பரிமாறப்படும் விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை எனும் கருத்தில் உறுதியாக இருப்பவள் நான்)


இத்தகைய ஆண்கள் நாம் அவர்களை இனங்கண்டு நீக்க முன்னர் தாமாகவே எம்மை விட்டு விலகி, முகநூல் நண்பர் பட்டியலின் புனிதத்தை பேணுவார்களா எனும் வினாக்குறி தொக்கி நிற்க , அக் கடிதத்தைப் பதிகின்றேனிங்கு அதன் செம்மை கலையாதவாறு!


நண்பி எழுதியுள்ளார்.................-


சோதரி, முகநூலில் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டுமெனின் முதலில் நாங்கள் எம்மை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமான கால கட்டமாக இது உள்ளது. முகநூலுக்கு நான் புதிது. இணைந்த ஒரு சில வாரங்களிலே முகநூலின் போலிமுகங்களை இனங்கண்டு கொண்டேன். பெரும்பாலும் பெண்கள் பெயரில் உள்ளவர்கள் ஆண்களாகவே உள்ளார்கள். இவர்களை ஜீரணிக்க முடியவில்லை. 13 பேரை நான் நீக்கிவிட்டேன்.



உங்கள் பெயர் எனக்குப் பரிச்சயமானது. நீங்கள் ஒரு பெண் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிகின்றது. உங்களைப் போன்ற சமூக ஆர்வமுள்ள பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்த நான் ஆசைப்படுகின்றேன்......................


கடிதம் தொடர்கின்றது..................................


இத்தகைய குறுகிய மனம் படைத்த ஆண்கள்  இனியாவது திருந்துவார்களா... இன்றும் இவ்வாறான ஒருவரை இனங்கண்டு அவர் என் முகநூலைப் பார்வையிடாதவாறு தடைப்படுத்தினேன். சிறு வார்த்தைகள் கூட மனதை புண்படுத்தி நட்பை முறிக்கும்!


இந்தப் பெண்ணடிமைத்தனப் பிரதிநிதிகள் தம் கோஷங்களைத் தவிர்ப்பார்களா. நான் ஓர் ஆசிரியை. என் பாலின சகோதரிகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பது எனது கடமையும் கூட!

நல்ல என் நண்பர்களை மதித்திடும் அதே நேரம், பாம்பின் விசமாகக் கருதி தீயவர்களை வெறுக்கின்றேன் !

இவர்களை என்னவென்று சொல்வதாம்...!

மனநோயாளிகளா....ஆணாதிக்கக்காரர்களா.......வெருளிகளா........இல்லை நல்ல வார்த்தைகளைப் பேசிப் பழகாதவர்களா...........

எதுவோ ஒன்று!




2012/08/17

மழை நின்ற ஓர் பொழுதில்


காலை பெய்த சிறு மழையில்
சாலையோரம் வியர்த்திருக்கும்.!

வானவில்லுச்சாறும் கொஞ்சம்
வீதியோரம் சிதறிச் சிரிக்கும் !

வண்ணம் தொலைக்கா வண்ணப்பூச்சி
சிறகடித்து தம் மீரம் விரட்டும் !

முன்றல் நிரப்பும் மண்வாசனை
மூச்சுக்காற்றின் பேச்சாய் நிரம்பும் !

வீட்டோரம் நாட்டமிட்ட சின்னச்சிட்டு
வெட்ட வெளியில்   பறந்திடத் துடிக்கும் !

மெல்லக் குடை விரிக்கும் குள்ளக்காளான்
அந்தரித்து காற்றில் சுற்றிப் பார்க்கும்!

தண்ணீர்ச்சிறையில்  வீழும் பூவோ..
வண்ணமிழந்து சகதியாய் முகங்காட்டும்!

எங்கிருந்தோ சங்கூதும் கருந்தவளை
இங்கிதமின்றி நிசப்தத்தை விரட்டும்!

இத்தனைக்கும் நானோ........!!

வாசிக்கத் தொடங்குவேன்.........
ஈரம் சொட்டும்  இயற்கையழகை வாஞ்சையாய் !


-Jancy Caffoor -

எல்லோரும் கொண்டாடுவோம்


விண்முகட்டில் வீழ்ந்து கிடக்கும்
வெண்ணிலாக் கீறலொன்று
கார்க் கொன்றல் மிரட்டல் கண்டும்
சிரிக்கும் லேசாய் மெல்ல
ஷவ்வல் பிறையாகி!

நால் திங்கள் நடைபயில
நூலிடையாய் "ஷவ்வல்" எட்டிப்பார்க்க
வேலியிட்டுத் தடுத்த  உண்ணலும் பருகலும்
இறையாணையால் மீளெழுந்து எமை நோக்க
மறைந்துதான் போகும் நோன்பும்
மாண்பு பல தந்துவிட்டே!

நோன்புச்சாலை வழியோரம்
சிதறி வீழ்ந்த  நம் தவறு!
கதறியழுதே துடித்திடுகையில்!
எமைக் காக்கும் கேடயமாய்
தழுவிக் கிடக்கும் "பித்ர் தர்மம்"  !

உதரத் தசையீரங்களில்
உலர்ந்து கிடக்கும் ஆகாரங்களும்
தொண்டையோர வெளிதனில்
வற்றிக் கிடக்கும் நீர்ச்சுணைகளும்
மீண்டும் சிலிர்த்துத்தான் தளிர்த்திடவே
வந்துவிடும் "ஈதுல் பித்ர் "நம்மருகே!

வறுமை கொண்ட ஆத்மாக்கள்
உருக்குலைந்தே வீழ்ந்து கிடக்கையில்
வசந்தமாய் எம் "ஸதக்கத்துல் பித்ர்"  - அவர்க்கே
சுகந்தத்தை மெல்ல நெருடிக் கொடுக்க
பேதம் துறந்து புன்னகைக்க பெருநாளும்
வாசம் வீசி வந்திடுமே!

சாமம் கடந்து பொழுதும் புலர்ந்து
ஆதவன் மெல்ல வானேறுகையில்
தென்றலின் நலனோம்பலும்
முன்றல் வந்து எட்டிப் பார்க்க
வெட்ட வெளிகளும் மடி தந்திடும்
அல்லாஹ்வைத் துதித்திடும் பள்ளிகளாய்

நல்லமல்கள் செய்தோர் தம்
பேதமை துறந்து தக்பீர் முழக்கிட
வல்லோன் புகழ் வசனங்களில்
எல்லோர் வார்த்தைகளும்  உறைந்தே கிடந்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம்!

"இரண்டு ரக்அத்தில்"  இறைவன் இறைஞ்சி
மறைவேதமாம் திருக்குர்ஆனுமோதி - நம்
மூச்சுக்காற்றிலே பரக்கத்தைச் சுமந்து
முழு வாழ்வுமே ஒளியினைப் பொருத்த
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம் !

புத்தாடையும் பெருநாள் காசும்
புளாங்கிதமாயுண்ணும் பலகாரங்களும்
உறவுகளின் சந்தோஷிப்புக்களும்
இறைவனின் அருள் மணமும் - எம்
இல்லங்களை நிறைத்திடவே
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

ஈகைத் திருநாளில் கறையிடரகற்றி
உள்ளமதை உவப்பேற்றி
பாசத்துடன் எமைத் தரிப்போருக்கே
தேன் சுவை விருந்தும் பரிமாற
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

உறவுகளின் வாழ்த்துச் சரத்தில் - எம்
மனைகளும் பூத்துச்  செழித்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் - தன்
சிறப்பை தரணிக்குணர்த்தியே

என்னைச் சூழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நட்பினருக்கும் எனதினிய நோன்புப் பெருநாள் (முன்கூட்டிய) வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்

-Jancy Caffoor -