About Me

2012/08/17

எல்லோரும் கொண்டாடுவோம்


விண்முகட்டில் வீழ்ந்து கிடக்கும்
வெண்ணிலாக் கீறலொன்று
கார்க் கொன்றல் மிரட்டல் கண்டும்
சிரிக்கும் லேசாய் மெல்ல
ஷவ்வல் பிறையாகி!

நால் திங்கள் நடைபயில
நூலிடையாய் "ஷவ்வல்" எட்டிப்பார்க்க
வேலியிட்டுத் தடுத்த  உண்ணலும் பருகலும்
இறையாணையால் மீளெழுந்து எமை நோக்க
மறைந்துதான் போகும் நோன்பும்
மாண்பு பல தந்துவிட்டே!

நோன்புச்சாலை வழியோரம்
சிதறி வீழ்ந்த  நம் தவறு!
கதறியழுதே துடித்திடுகையில்!
எமைக் காக்கும் கேடயமாய்
தழுவிக் கிடக்கும் "பித்ர் தர்மம்"  !

உதரத் தசையீரங்களில்
உலர்ந்து கிடக்கும் ஆகாரங்களும்
தொண்டையோர வெளிதனில்
வற்றிக் கிடக்கும் நீர்ச்சுணைகளும்
மீண்டும் சிலிர்த்துத்தான் தளிர்த்திடவே
வந்துவிடும் "ஈதுல் பித்ர் "நம்மருகே!

வறுமை கொண்ட ஆத்மாக்கள்
உருக்குலைந்தே வீழ்ந்து கிடக்கையில்
வசந்தமாய் எம் "ஸதக்கத்துல் பித்ர்"  - அவர்க்கே
சுகந்தத்தை மெல்ல நெருடிக் கொடுக்க
பேதம் துறந்து புன்னகைக்க பெருநாளும்
வாசம் வீசி வந்திடுமே!

சாமம் கடந்து பொழுதும் புலர்ந்து
ஆதவன் மெல்ல வானேறுகையில்
தென்றலின் நலனோம்பலும்
முன்றல் வந்து எட்டிப் பார்க்க
வெட்ட வெளிகளும் மடி தந்திடும்
அல்லாஹ்வைத் துதித்திடும் பள்ளிகளாய்

நல்லமல்கள் செய்தோர் தம்
பேதமை துறந்து தக்பீர் முழக்கிட
வல்லோன் புகழ் வசனங்களில்
எல்லோர் வார்த்தைகளும்  உறைந்தே கிடந்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம்!

"இரண்டு ரக்அத்தில்"  இறைவன் இறைஞ்சி
மறைவேதமாம் திருக்குர்ஆனுமோதி - நம்
மூச்சுக்காற்றிலே பரக்கத்தைச் சுமந்து
முழு வாழ்வுமே ஒளியினைப் பொருத்த
வந்திடும் பெருநாளும்
தந்திடும்  சந்தன வாசம் !

புத்தாடையும் பெருநாள் காசும்
புளாங்கிதமாயுண்ணும் பலகாரங்களும்
உறவுகளின் சந்தோஷிப்புக்களும்
இறைவனின் அருள் மணமும் - எம்
இல்லங்களை நிறைத்திடவே
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

ஈகைத் திருநாளில் கறையிடரகற்றி
உள்ளமதை உவப்பேற்றி
பாசத்துடன் எமைத் தரிப்போருக்கே
தேன் சுவை விருந்தும் பரிமாற
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம்!!

உறவுகளின் வாழ்த்துச் சரத்தில் - எம்
மனைகளும் பூத்துச்  செழித்திட
வந்திடும் பெருநாளும்
தந்திடும் சந்தன வாசம் - தன்
சிறப்பை தரணிக்குணர்த்தியே

என்னைச் சூழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நட்பினருக்கும் எனதினிய நோன்புப் பெருநாள் (முன்கூட்டிய) வாழ்த்துக்கள்
ஈத் முபாரக்

-Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!