நெஞ்சக் கூட்டின் சுருதியலைகளில்
மோதி ஓய்கின்றது
பெருமூச்சொன்று!
தொலைந்து போன நிஜங்களின்
சாம்பர் மேட்டின்...........
அக்கினிப்பூக்களாய்
எழுதுகோல்கள் உருமாறியதில்........
கற்பனைகள் கூட
வலியில் வெந்து
கருகிப் போனதோ!
கவியும் பஞ்சமானதோ!
இருந்தும்...............
மனச்சிறகசைத்து
விழிகளை விரும்பிய திசைகளிலெல்லாம்
கவிக்கருக்காய்
தூதனுப்புகையில்....................
நாடியுடைக்கும் யதார்த்தங்களால்
செந்நீர் கரைந்து..........
கன்னங்களைத் துடைக்கின்றன
கண்ணீராய்க் கசிந்து!
வெறுமை வெளிக்குள் பூத்தவென்
உயிரோ........
முடிவிலிச் சலனத்தால்...................
கருக்கட்டப்படாத கனவுகளைத் தேடி
அலைகின்றது வீணாய்!
இப்பொழுதெல்லாம்
மௌனங்களோடு மட்டும் பேசியவென்
உதடுகள்..........
மானுட பாஷையை மறந்து போக.......
இது புரியாமல்............!
வெட்டியெறியப்பட்ட என் புன்னகையையும்
வார்த்தைகளையும்.............
மீண்டும்
என்னுள்ளே நட்டிவிட............
கங்கணம் கட்டுகின்றனர் நண்பர் குழாம்..........!
நட்புச்சிறையுடைத்தே........
தனி வழிதேடி............நானும்
மிரண்டோடினாலும்
பாறை நிழலுக்குள்ளும்
ஓரமாய்.............
துளிர்த்திருக்கும் பாசம் தாமென..............
மிரட்டுகின்றனர் ..........
ஐயகோ!
என் செய்வேன்...........