About Me

2013/04/10

மென் மலராள்

அவள்
மெல்லிய சிறகு சுமக்கும்
மலரிதழ்!

தன் குறும்புகளால்
காற்றையும் பூட்டி வைக்கும்
சாகஸக்காரி!

அவள் மொழி வார்ப்பில்
மழலை
அழகான சரிதமாகின்றது!

கடல் பூக்களின் நுரை மகரந்தங்கள்
அவள் புன்னகைக்குள்
மாலையாகிச் சிரிக்கும்!

மெல்ல விழி சுருக்கி
கண் சிமிட்டும் அவள் பார்வையில்
விண் மொட்டுக்கள்
மெய்மறந்து கண்ணயரும்!

சிற்பமொன்று
சொற்களைக் கோர்த்து
கவி புனையும்
அவள் அருகினில்!

அவள் சாலையில்
இவள் விட்டுச் செல்லும்
நிழல்களெல்லாம்
பெருமிதத்தில் வேராய் முளைக்கும்
புவிக்குள்!

சகதியெல்லாம்
சாக்லேட்டுக்களை திணிக்கும்
அவள்
மயிலிறகுக் கரத்தில்!

முப்பத்தாறு மாதங்கள் முகிழ்த்த
முத்தவள்
முழு நிலவையும் தன்னுள் நிரப்பும்
சொந்தக்காரி!

இத்தனைக்கும் அவள்
அற்புதக் குழந்தையல்ல
அன்பால்
இயற்கையே ரசிக்கும் அதிசயக் குழந்தை!

- Jancy Caffoor-
     09.4.2013

சில்லென்று



பனித் துளியின் தழுவலில்
இயற்கை நீராடிக் கொண்டிருக்கும்
அழகாய்!

காற்று கோர்த்துச் செல்லும்
சுவாசத்தின் சகபாடியாய்
உன்னை விட்டுச் செல்கின்றாய்
என்னில்!

நம் பேச்சுக்களின் சிந்தலில்
சிலிர்க்கும் சலங்கைகள்
குந்திக் கொள்ளும் காலடியில்!

உந்தன் காதல் சல்லாபத்தில்
மெட்டிசைக்கும் மெட்டியாய்
அடிக்கடி கிள்ளும் உன் நினைவுகள்!

நீ எனை விட்டுச் செல்லும்
ஒவ்வொரு தருணங்களும்

யுகங்களாய் சரித்திரம் பேசும்
என் தனிமையே துணையாய்!

- Jancy Caffoor-
     09.04.2013

தவிப்பில்


கனவுக்கும் வாழ்வுக்கும் சாளரம் நுழைத்து
என்னில் கன்னம் வைப்பவனே

உன்னால் மெல்லன சிலிர்த்தன மேனி
காதல் ஸ்பரிசங்களை விழுங்கி!

உன்
நினைவு வேர்களில் என்னுலகம் முடிந்து
நான் மௌனமாய் நடை பயில்கையில்

சட்டென பின் தொடர்கின்றாய் விடாமல்
என் நிழல் பிணைத்து!

வருவாயா.........என்னவளாய் - என்
விரலிழுத்து நீ பூசும் முத்தங்கள் சூடாகி

மெல்லன பரவுகின்றது - என்
பெண்மைக்குள் நாணம் சேர்த்து

உன் தவிப்பறிந்தும்
மௌனிக்கின்றேன் - மனசால்
உன்னை விழுங்கியவாறு!

வா காதல் செய்வோம்- உன்
குரலொலிக்கும் என் ஆன்மாவின் காதலை
மறைத்தவாறு

மறைகின்றேன் உன்னை தொலைவாக்கி
கரைகின்றன விழிகள் சிவப்புறிஞ்சி!

- Jancy Caffoor-
     09.04.2013

தோழிக்கு ஓர் தூது

தோழியே
நம் பால்ய பருவம்
கண் முன்னால் நசிகின்றது ஆர்வமாய்!

உன்னை நீ என்னுள் நிரப்பிச் சென்ற
அந்த நாட்களில் முகிழ்த்த நட்பெல்லாம்
ஆத்மார்த்தமாய்
ஆத்மாவை நிறைக்கின்றது!

என்னருகில் நீ
உன்னருகில் நான்
விட்டுச் சென்ற காலங்களில்
வசந்தங்கள்
கூடு கட்டி நிற்கின்றது!

பூக்களின் சுக விசாரிப்புக்களில்
குவிந்து கிடக்கின்றன - நம்
விழித் தடாக முன்றல்கள்!

உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாய்ந்து உருண்ட நம் கனாக்கள்
அழகாய்
கண் சிமிட்டுகின்றன !

இளமையின் சுவாரஸ்யத்தில்
தேகங்கள் ஊறிக் கிடக்க

அடடா.....நம்
பால்ய பருவத்தின் வசந்தத்தில்
மனசு அப்பித்தான் கிடக்கின்றது!

உன்னை என் விழிகளால் துலாவுகின்றேன்
இப்போதும் - என்
நேசத்தில் நனைத்திட!

ஆனால்.!

நம் சுதந்திர உலகில்
யாரிட்டார் முடிச்சிப்போ!

நம் பார்வைகள்
அன்றும் இன்றும் ஒன்றாய்
வீழ்ந்திருக்க!

புலம் பெயர்ந்த பருவங்களால்
நம்
பால்யம் பாழாக்கப்பட!

கண் கொத்திப் பாம்பாய்
நம்மவர்
பிணைந்து கிடக்கின்றனர் -நம்
பாதையில்!

நீயோ
தொடா தொடு வானமாய்
சிதறிச் செல்கின்றாய் முகில் கிழித்து!

நம்முள் பேதமில்லை
எப்போதும்
அடுத்தவரோ
வேலிச்சுவராய் படர்கின்றனர்
இரக்கமின்றி!

"நாம் வயசுக்கு வந்திட்டமாம்."

காலக் கலண்டர்
கொக்களமிட்டுச் சிரிக்கின்றது
நம் நட்பைப் பார்த்து!

- Jancy Caffoor-
   09.04.2013