அவள்
மெல்லிய சிறகு சுமக்கும்
மலரிதழ்!
தன் குறும்புகளால்
காற்றையும் பூட்டி வைக்கும்
சாகஸக்காரி!
அவள் மொழி வார்ப்பில்
மழலை
அழகான சரிதமாகின்றது!
கடல் பூக்களின் நுரை மகரந்தங்கள்
அவள் புன்னகைக்குள்
மாலையாகிச் சிரிக்கும்!
மெல்ல விழி சுருக்கி
கண் சிமிட்டும் அவள் பார்வையில்
விண் மொட்டுக்கள்
மெய்மறந்து கண்ணயரும்!
சிற்பமொன்று
சொற்களைக் கோர்த்து
கவி புனையும்
அவள் அருகினில்!
அவள் சாலையில்
இவள் விட்டுச் செல்லும்
நிழல்களெல்லாம்
பெருமிதத்தில் வேராய் முளைக்கும்
புவிக்குள்!
சகதியெல்லாம்
சாக்லேட்டுக்களை திணிக்கும்
அவள்
மயிலிறகுக் கரத்தில்!
முப்பத்தாறு மாதங்கள் முகிழ்த்த
முத்தவள்
முழு நிலவையும் தன்னுள் நிரப்பும்
சொந்தக்காரி!
இத்தனைக்கும் அவள்
அற்புதக் குழந்தையல்ல
அன்பால்
இயற்கையே ரசிக்கும் அதிசயக் குழந்தை!
- Jancy Caffoor-
09.4.2013
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!