About Me

2013/04/10

தோழிக்கு ஓர் தூது

தோழியே
நம் பால்ய பருவம்
கண் முன்னால் நசிகின்றது ஆர்வமாய்!

உன்னை நீ என்னுள் நிரப்பிச் சென்ற
அந்த நாட்களில் முகிழ்த்த நட்பெல்லாம்
ஆத்மார்த்தமாய்
ஆத்மாவை நிறைக்கின்றது!

என்னருகில் நீ
உன்னருகில் நான்
விட்டுச் சென்ற காலங்களில்
வசந்தங்கள்
கூடு கட்டி நிற்கின்றது!

பூக்களின் சுக விசாரிப்புக்களில்
குவிந்து கிடக்கின்றன - நம்
விழித் தடாக முன்றல்கள்!

உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாய்ந்து உருண்ட நம் கனாக்கள்
அழகாய்
கண் சிமிட்டுகின்றன !

இளமையின் சுவாரஸ்யத்தில்
தேகங்கள் ஊறிக் கிடக்க

அடடா.....நம்
பால்ய பருவத்தின் வசந்தத்தில்
மனசு அப்பித்தான் கிடக்கின்றது!

உன்னை என் விழிகளால் துலாவுகின்றேன்
இப்போதும் - என்
நேசத்தில் நனைத்திட!

ஆனால்.!

நம் சுதந்திர உலகில்
யாரிட்டார் முடிச்சிப்போ!

நம் பார்வைகள்
அன்றும் இன்றும் ஒன்றாய்
வீழ்ந்திருக்க!

புலம் பெயர்ந்த பருவங்களால்
நம்
பால்யம் பாழாக்கப்பட!

கண் கொத்திப் பாம்பாய்
நம்மவர்
பிணைந்து கிடக்கின்றனர் -நம்
பாதையில்!

நீயோ
தொடா தொடு வானமாய்
சிதறிச் செல்கின்றாய் முகில் கிழித்து!

நம்முள் பேதமில்லை
எப்போதும்
அடுத்தவரோ
வேலிச்சுவராய் படர்கின்றனர்
இரக்கமின்றி!

"நாம் வயசுக்கு வந்திட்டமாம்."

காலக் கலண்டர்
கொக்களமிட்டுச் சிரிக்கின்றது
நம் நட்பைப் பார்த்து!

- Jancy Caffoor-
   09.04.2013

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!