About Me

2013/04/14

ஒளித் தூரிகை


நீ சொன்னால்..........
பொய்களும் மெய் போலாகும்
நீ என்னவனென்பதால்!
========================== 


அங்கே.............
குடைக்குள் கோடை கழிக்கும்
காளானாய் நீ!

இங்கே.........
மாரிக்குள் ஒப்பாரி வைக்கும்
கிணற்றுத் தவளையாய் நான்!

நம் உணர்வுகள்
மையப் புள்ளியில் சந்திக்க...........
பார்த்தாயா...............
நம் தேசங்கள் நம்மை
வெவ்வேறு துருவங்களாய் மாற்றுகின்றன!

============================ 



"நம்மட சூரியன் பயணிக்கிற பாதையில 12 ராசி இருக்கு, அதில முதலாவது ராசியாக மேடமும் ,  12வது ராசியாக மீனமும் இருக்கு. சூரியன் மீன ராசியில இருந்து மேட ராசிக்கு பயணிக்கிற அந்த நிகழ்வத்தான் புதுவருஷமென்று சொல்லுறம்"



நான் என் வகுப்பு மாணவர்களுக்கு புதுவருடப்பிறப்பினை விஞ்ஞான ரீதியில் விளக்கிக் கொண்டிருக்க, தம் அயல் மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியவாறு மாணவர்கள் திருப்தியுடன் தலையாட்டுகின்றனர்...

இதுல உங்களுக்கு ஏதாவது புரியுதா..

புரியலைன்னா பரவாயில்லை..............

நாளை சித்திர வருடப்பிறப்பைக் கொண்டாடும் என் நேசங்களுக்கு முன்கூட்டிய புதுவருட வாழ்த்துக்கள்
====================================== 

நமது வார்த்தைகள் எப்பொழுது பிறர் முன்னிலையில் பெறுமதி இழக்கின்றதோ, அத் தருணமே. மௌனம் நம் பெறுமதியைக் காக்கும் கேடயமாக மாறி விடுகின்றது!

================================ 



என் கனவுக்கூடுகளில் உன்னை நிரப்பி
போகின்றேன் என் தேசம் தோறும்!
வா.........
வசந்தத்தின் இருக்கைகள் கூட
நாமாகட்டும் !

மயிலிறாகால் வருடும் என்
ரஞ்சிதப் பொழுதுகளெல்லாம் - உன்
அன்பின் விடியலில் மட்டும்
முகம் பார்த்துக் கொள்ளட்டும்!

வா............................
நம்................
தேசத்தில் நாம் மட்டுமே
ஆளுபவர்களாய்!
============================== 



அன்பின் துளிகள் சிந்தும் ஒவ்வொரு இடங்களிலும்
அன்னையே......................
நீயே உன் முகங்காட்டுகின்றாய்!
================================= 


மழை வருது மழை வருது குடை கொண்டு வா.......
இப்படித்தான் இப்ப எங்க ஊரும் பாடிக் கொண்டிருக்கின்றது...மழை வந்தால் நல்லதுதான். ஆனால் இன்னொரு பிரச்சினை இருக்கே!

அது மின்னல்..........

நேற்று ராத்திரி அக்கம் பக்கம் கேட்ட மத்தாப்புக்கள விட, இந்த மின்னலும், இடியும் அட்டகாசமாக கொட்ட ஆரம்பிச்ச நேரம்,


(எங்கேயோ பக்கத்தில விழுந்திருக்கணும்..டியூப் லைட்ட யாரோ உடைக்கிற மாதிரி சத்தமும், வெளிச்சமும்)


எனக்கு வந்த நினைவுதான் இந்தப் பதிவு.....

அருகே கந்தக வாசம் அதாவது தீக்குச்சி எரிக்கிற போது வருகிற வாசம் வந்தால் கொஞ்சம் உஷாரா இருங்க.....ஏனென்றால் எங்கேயோ இடி விழப்போகுதுன்னு அர்த்தம்!

சிலர் கோபத்தில தலைல இடி விழட்டும் என்று சொல்வீங்கதானே..........இனி அப்படி சொல்லாதீங்க!
ஏனென்றால் எதிரி கூட கருகிச் சாக வேண்டாமே!
================================== 



உடன்பாடுகளும், முரண்பாடுகளும் நம் மன எண்ணங்களிலிருந்தே வேர் விடுகின்றன. வேற்றுமையிலும் ஒற்றுமை காணப் பழகி விட்டால் நிம்மதியின் நிதர்சனத்தில்  நம் வாழ்வும் இளைப்பாறும்!

- Ms. Jancy Caffoor -













ஏன் வேரறுத்தீர்


உங்கள் பயிற்சிப் பாசறைகள்தான்
எங்கள் கனவுக் கூடாரங்கள்!

உங்கள் வேள்வித் தீக்காய்
எங்கள் உயிர்களும் உருகின!

பொம்பரும்
ஹெலிகளும்
ஏகே களும்
பீரங்கிகளும்
எங்கள் தோட்டத்திலும்
குண்டுகள் நட்டன!

சுதந்திரப் பறவைகளின் இறக்கைகளில்
எங்கள் ஜடைகளைப் பிணைந்தவர்களும்
நாமே!

பெடியள்களின் படிக்கட்டுக்களில்- எம்
தடங்களும் பதிந்துதான் இருந்தன!

நிதர்சனங்களின் காட்சி ரணங்களில்
குருதி பிழியப்பட்ட போது
உயிரறுந்த வலியால் துடித்தவர்களும் நாமே!

சிதறப்பட்ட ஒவ்வொரு விதைகளிலும்
எழுச்சியைப் பொறுக்கியவர்களும் நாமே!

புல்லரிக்கும் புதுவை அண்ணாவின் கவிகளை
உள்ளத்தில் பதியமிட்டு
சுதந்திர எழுச்சிக்காய் சுவாசமறுத்தவர்களும்
நாமே!

நீங்கள் செருகிய மயான முகவரிகளை
எம்மோடிணைத்ததில்
பலியாடுகளாய் வீழ்த்தப்பட்டவர்களும்
நாமே!

எல்லாம் உங்களுக்கும் தெரியும்
ஏனெனில்
போராட்டங்களும்
யுத்த தந்திரங்களும்
எமக்கு
கற்றுத் தந்தவர்களும் நீங்கள்தானே!

சயனைட் குப்பிகளாய்
எம் உணர்வுக்குள்
விடுதலை கோஷிக்க வைத்தவர்களும்
நீங்கள்தானே!

பாலச் சந்திரன் போல் நானும்தான்
உங்களிடம் கேட்கின்றேன்
இவை காட்டிகொடுப்பல்ல உங்களை
அடுத்தவரிடம்!

என் அகதி வாழ்வின்
ஒவ்வொரு துளிகளின் அவலங்கள்
இருப்பிடம் அறுக்கப்பட்ட அவஸ்தை
பால்யம் வீணடிக்கப்பட்ட சினம்!

நானும் கேட்கிறேன் உங்களிடம்
ஏன் எம்மை
1990 ஒக்டோபர் 30
இரண்டு மணி நேரத்தில்
பிறப்பிடத்திலிருந்து கருவறுத்தீர்
சகோதரராய் அருகிலிருந்தும்!

உங்களைப் போல்தானே
யாழ் மண்ணும் எம்மைச் சுமந்தது
உங்களுடன் தானே நாமும் பயணித்தோம்
ஏன் கருவருத்தீர் எம் தாயகத்திலிருந்து
எம்மை!

ஒன்று மட்டும் புரியவேயில்லை

சிறுபான்மை அடக்குமுறைக்காய்
ஆயுதம் ஏந்திய நீங்கள்
எதற்காய் வேரறுத்தீர்கள் எம்மை
நாம் உங்களுக்கு சிறுபான்மையினர் தாமே!

இனவாதத்திற்கான உங்கள் அடக்குமுறை
ஏன்
உங்கள் சிறுபான்மை எமக்காய்
அஹிம்சையை  நாட்டவில்லை!

உங்கள் மனக்குமுறல்கள் தானே எமக்கும்
கோஷங்கள் வெறும் முழக்கங்கள் அல்ல
உணர்வின் எரிமலைகள்!
ஏன் வேரறுத்தீர்கள்
குற்றம் புனையா எமக்கே!

- Jancy Caffoor-
     14.04.2013

2013/04/13

சித்ரா பௌர்ணமி


சித்ரா பௌர்ணமி!
சிரிப்பாள் என் தோட்டத்தில்
அழகாய்  நாளை!

மல்லிகை மொட்டுக்களாய்
விரிந்து கிடக்கும் நட்சத்திரக் குவியலுக்குள்
மயங்கிக் கிடக்கும் மணப்பெண்ணாய் அவள்!

ஒளி நீரூற்றுக்களை என்னுள் விசிறி
அவளென் கன்னம் கிள்ளுகையில்
கிறங்கிப் போவேன்
கவிகளை கிறுக்கியபடி!

பவ்வியமாய் சிரித்து - என்
மனசு கௌவும் அவள் வரும் வரை
இன்னும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்
என்னுடன் சேர்ந்து நீங்களும்!


-Jancy Caffoor -

2013/04/12

வயசுக்கு வந்திட்டேனாம்



நான் வயசுக்கு வந்திட்டேனாம்!

பக்கத்து வீட்டத்தை
பக்குவமாய் நெஞ்சில் அறைந்தே
அம்மாவிடம் என்னை சிறை வைத்த போது
மனசு பதைபதைத்தது!

என் பாவாடைக் கரைகளில்
பூத்திருந்த ரத்தக் கறைகள்
மிரட்டிக் கொண்டிருந்தன
என்னை மற்றோர்களிடமிருந்து தனிமைப்படுத்தி!

வயிற்றுத் தசைகளின் பிரட்டலில்
வாலிப்பான உடலெங்கும் வலியெடுக்க
நடுங்கும் கரங்களுடன் அச்சம் இறுகி
தரையமர்ந்தேன் உணர்வின்றி!

அயலாளர் யார் யாரோ
என்னை எட்டிப் பார்த்தே கிசுகிசுத்தனர்
சடங்கு வைக்கும் வரை அசையாதேயென்று
சிறைப்படுத்தினர் வீட்டோரம்!

"ஏய் பெரிய மனுஷி"
நண்பிகளின் கேலிகளில்.என் வருங்காலச்
சுதந்திரம் நசுங்கிய போது
சுடும் கண்ணீருருகி கன்னம் தெறித்தது!

நேற்று வரை சிட்டாய்ப் பறந்தவென்
இறகறுத்த பருவம்
பறைசாட்டி முரசறைந்தது ஊர் முழுதும்
என் வாலிப இரகஸியங்களை!

ஆண் துணையில்லா எம் கூட்டில்- இனி
வட்டமிடும் வல்லுறுக்கள்
காமத் தீ வார்க்குமென்று
பாவம் அம்மாவும் அஞ்சிக் கிடந்தாள்
மனசுக்குள் முட்களைப் பதியமாக்கி!

தாய்மைக்கு அங்கீகாரமாம்
என் பெண்மை!
பாட்டி பத்தியங் காக்க ஏதேதோ தந்தாள்
வாய்க் கசப்பையும் மறுத்தபடி!


பதினாறின் செழுமையில்
தேகம் பூத்துக் குலுங்கியதில்
அம்மாவின் சேமிப்பும்  கரைய
தாய் மாமன் நாளும் குறித்தான்
தன் மகனுக்காய் என்னை!


"நான் வயசுக்கு வந்திட்டேனாம்"
என்னைச் சுற்றி
ஆரவாரங்களும் கொண்டாட்டங்களும்
குதூகலிக்கின்றன - என்
 கனவோரங்களில் பூத்திருந்த
சாம்பர் மேட்டைக் கவனிக்காமலே!

நேற்று வரை நெருங்கிப் பழகிய
நண்பர்களுக்கு
அண்ணன் மிரட்டல் கொடுக்கிறான்
என் நட்பை தணிக்கையாக்கி!

"பெரிய மனுஷி நானென்ற"
அறிவிப்புப் பதாதைகளுடன்
யாரு மறியாமலே என்னைக்
கரைத்துச் செல்கின்றது
கண்ணீர்த்துளிகள் !

- Jancy Caffoor-
     12.04.2013