About Me

2021/04/14

மனித நேயம்

 

மனித நேயம் என்பது அன்பு அல்லது தன்னலமற்று இருத்தலாகும். இளகிய இதயமும், இரக்கமும் அடங்கியிருக்கின்ற நேயத்தினால்தான் மனிதன் தான் தனித்திருக்காது தன்னைச் சுற்றி குடும்பம், சமூகம் போன்ற கட்டமைப்புக்களினால் சமூக இசைவாக்கம் அடைகின்றான்.  

"கொடையும் தயையும் பிறவிக் குணம்" என்பது சான்றோர் மொழி. 

இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது எனும் சிந்தனை நம்மிடையே எழுமாயின் நம்மைச் சூழவுள்ள பிற உயிரினங்களின்மீதும் நமக்கு கருணை ஏற்படும்.

மனிதநேயத்தை வெளிப்படுத்தி பல தமிழ் இலக்கிய பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதிகாசங்கள், திருக்குறள் என்பவற்றிலும் மனித நேயம் முன்னிலப்படுத்தப்பட்டுள்ளன. சமய நூலான புனித அல்குர்ஆன் திருமறையிலும் மனித நேயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித நேயம் கொண்ட பலர் மக்களால் மதிக்கப்படுகின்ற மதத் தலைவர்களாகவும் இவ்வுலகினை  வழிப்படுத்தியுள்ளார்கள். பாரி, பேகன் போன்ற மன்னர்கள் மனித நேயத்தின் உச்சநிலையில் வைத்துப் போற்றப்பட்டவர்கள். 

கணியன் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எனவுரைத்தார். இது சமத்துவத்தின் குரல்.

மனித நேயம் என்றவுடன் நம் கண்முன்னால் தோன்றுபவர், மானுட சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அன்னை திரேசா அவர்கள். நெல்சன் மண்டேலா அவர்களும் நிறவெறிக்கு எதிராகப் போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

 அன்பு, அஹிம்சை எனும் தடங்களினூடாக,  உண்மைக்கும், நல்லிணக்கத்திற்கும் இடையில் பயணப்பட்டவர்கள் இறந்தும் மறையாத கல்வெட்டுக்களாகப் பரிணமிக்கின்றார்கள்.

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பேணும் இன்றைய உலகில் மனிதநேயம் கொண்டவர்களைத் தேட வேண்டிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே!.

ஜன்ஸி கபூர் - 03.11.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!