About Me

2014/07/25

டயறி



டயறி
--------
டயறி என்பது நம் சந்தோசங்களின் திறப்பு...உணர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் உத்தம நட்பு...நம் இரகஸியங்களை தனக்குள் மாத்திரம் அடக்கி வைத்திருக்கும் ஆத்மார்த்த உறவு!

என்ன..ஆச்சரியமா இருக்கா?
தினமும் டைரி எழுதும் பழக்கமானது, பிற்காலத்தில் நம் ஞாபக மறதியைக் குறைக்கின்றது. அதுமாத்திரமன்றி நாம் சந்திக்கும் சவால்கள், இன்ப, துன்பங்களுக்கு அதில் வரிவடிவம் கொடுக்கும்போது நம் உணர்வுகளைப் பரிமாறிய திருப்தியும், நமது செயல்களை நாமே மதிப்பிடும் பக்குவமும், எழுத்தாற்றலும் ஏற்படுகின்றது..

ஆனால்......

பலர் டைரி என்பதை வெறும் தாள்களாக நினைத்து அதில் தமது சோகங்களையும், தோல்விகளை மாத்திரமே பதிவிடுகின்றனர்.

ஓர் உண்மையைச் சொல்லட்டுமா...???

சிறுவயதிலேயிருந்து எனக்கும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அப்பழக்கம்தான் பிற்காலத்தில் என் இலக்கிய வளத்தை மெருகூட்ட காரணமாக இருந்தது. அதுமாத்திரமின்றி எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை வெறும் எழுத்துக்களாக மாத்திரமன்றி உயிர்ப்புள்ள ஞாபகங்களாக மாற்றும் சக்தியும் இதற்குண்டு!

முகநூல் துளிகள் - 4




நமது கடந்தகால கசப்பான ஞாபகங்கள் நம் நினைவுத் தளங்களிலிருந்து அழிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவை கற்றுத் தந்த பாடங்கள், படிப்பினைகள் அனுபவங்களாக மாறி நிகழ்காலத்தை வழிநடத்துகின்றன. அப்போதுதான் நாம் நமது எதிர்கால வாழ்க்கையை நமக்கேற்றதாக மாற்ற முடிகின்றது..
--------------------------------------------------------------------------------



கடந்த காலத்தின் வினாக்குறிகளை....
நிகழ்காலம் மாற்றித் தருகின்றது ஆச்சரியக்குறிகளாய்!
எதிர்காலம் அவற்றைப் பதிக்கட்டும்
சாதனைக்குறிகளாய்!
--------------------------------------------------------------------------------


சாதாரணமாக, இலகுவாகக் கிடைக்கும் ஒவ்வொரு விடயங்களையும் பொருட்களையும் அலட்சிப்படுத்துகின்றோம்.

ஆனால் .........

நமக்கு தேவையேற்பட்டு தேடி அலையும்போதுதான் நம் அலட்சியத்தின் வெகுமதியாய் மனம் உணர்கின்றது துன்பத்தை!
----------------------------------------------------------------------------


ஒரு செயலைச் செய்கின்றோம். ஆனால் திருப்தி என்பது கிடைக்காமலே போகின்றது. ஏனெனில் ஒரு செயலை செய்து முடிக்கும்போதுதான் அது தொடர்பான வேறு சிந்தனைகளும் எழுந்து அச்செயல் புதுப்பிக்கப்படுகின்றது.

எனவேதான்.......

முன்னேற்றத்திற்கு முடிவென்பது கிடையாது. நாமதைத் தேடி ஓடுமபோதே கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் நம்மைத் தேடி வருகின்றன!

--------------------------------------------------------------------------------


கிடைத்துள்ளதை வைத்து வாழ்க்கையை நன்றாக வாழ முயற்சிக்கும்போது ஏற்படுகின்ற மனநிறைவு நம் பலகீனத்தையெல்லாம் பலமாக மாற்றுகின்றது!


முகநூல்த் துளிகள் - 3




தோற்றுப் போகும் கணங்களில்
தொற்றிக் கொள்ளும் கண்ணீர் - நம்
வெற்றிப் பாதைக்காகத் தௌிக்கப்படும்
பன்னீர்!

-----------------------------------------------------------


நேற்றைய பொழுதுகளில்....
உன் தரிசனமின்றி
வெறிச்சோடிப் போன என் பக்கங்கள்

இன்று..

கைகுலுக்கின்றன புன்னகையுடன்
உன் மீள் வரவுக்காய்!
-----------------------------------------------------------


உன் பலமெல்லாம்
என் மீதான அன்பால்....
குழந்தைத்தனமாகின்றது!

உன் .....
குழந்தைத்தனமும்
குறும்புத்தனமும்

நான் ரசிக்கும் கவிதைகள்!
----------------------------------------------------------------------------


வாய்ப்புக்கள்....!

நம் வீட்டு வாசற்படிகளல்ல நமக்காக எப்போதும் காத்திருக்க..
வந்து போகும் முகிற் கூட்டங்கள்!!

வாய்ப்புக்களை நாம் தவற விடும்போது நமது முன்னேற்றங்களும் பின்னோக்கி விடுகின்றன..

எனவே .......

வாய்ப்புக்களை நாம் தவற விட்டாலும்கூட, நல்ல வாய்ப்புக்கள் நம்மைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்போது, அதனைப் பற்றிப் பிடித்தல் வேண்டும்...

-----------------------------------------------------------------------------


பெண் ஓர் புத்தகம்...
அவளிடம் பல உணர்ச்சிப் பக்கங்கள்!
அவற்றை பரிவுடன் வாசித்து புரிந்து கொள்ளும் ஆண்களாலேயே
பெண் மனதின் அன்பை வெல்ல முடிகின்றது!

----------------------------------------------------------------------------



ஆழ்மனதின் உணர்ச்சிகளை வௌிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லை. கண்ணீரே போதும்!

------------------------------------------------------------------------------


இதயத்தை திறந்து வைக்கும்போதுதான் பிறரது உண்மையான அன்பை உணர முடிகின்றது..உண்மையான அன்பானது குற்றத்தையும், குறைகளையும் ஆராயாமல் அவற்றைக் களைந்து விடும்...



சுகந்திரம்



என் குருவிக்கூடு
தினமும் கல்லெறியப்படுகின்றது

தும்புகள் சிதறி
இரத்தம் சிந்துவன குருவிகள் மட்டுமல்ல
அடைக்கலம் காத்த என்
நெஞ்சும்தான்!

அடுத்தவர்
கண்ணீர் ஈரம் உணராமலே
விசம் தடவும் சிலர் வார்த்தைகள்

சுய தீர்ப்பாய் மொழிகின்றது
குருவிகளின் உயிரோடு!

அந்தோ

குருவிகள் குற்றுயிராய் - நானோ
அருவியாய் நீரூற்றும்
விழிகளோடு!

விடுதலை
தொலைந்து போன  வாழ்வில்
விடியல் மட்டும் வந்து வந்து
போகின்றது
பிரயோசனமின்றி இரவைக் கரைக்க!


- Jancy Caffoor-
      25.07.2014