About Me

2019/05/08

வெயில்

Image result for வெயில்வெயில் பூக்கள் உதிர்கின்றன
மூச்சு காற்று உஷ்ணமாக!

வெய்யில் குடைக்குள்ளும்
வியர்வை சூடாக!

வெயில் கூட்டுக்குள்
அனல் முட்டைகள்!

வெம்மை குறி வைக்கின்றது
பசுமையை!

அனல் தீ மூட்டலில்
நிழல் கருகிறது!

மலட்டு மேகங்களின் மௌனம்
நிசப்தமாக!

உஷ்ணத்தின் இஷ்டத்தில்
உருகும் மேனி!

ஈர வண்ணத்தியை தொட்டு பார்க்க
பிரார்த்தனைகள் உதிர்கின்றன!

மின்விசிறிகள் உறிஞ்சும் பெரு மூச்சுகளாவது
உதிருமா ஈரமாய்!

கோடையை கொடையாக்கும் மேடையோ
இம் மாதம்!



- Jancy Caffoor -
 

2019/05/07

இனி

வேகமான கால ஓட்டத்தில் பதவி வழிவந்த பணிச்சுமை மற்றும் வாழ்வியல் போராட்டங்களுக்கு மத்தியில் என் விரல்கள் கணனியில் பதிவிடவில்லை . நீண்ட வெறுமையில் சோர்வும் ஓர் அங்கமாகி போக நாளை            நாளை  என நாட்கடத்தலும் நீண்டது . கிட்டத்தட்ட நாலரை வருடங்கள்! என் கவிதாயினியிலிருந்து விலகியே இருந்தேன். இறுகி கிடந்த என் கற்பனை உணர்வுகளை நட்பு வட்டம் மெல்ல மெல்ல கிளற ஆரம்பிக்க, தூசு தட்டினேன் இவ் வலைப்பூவை !

எதை எழுதுவது .....................எப்படி எழுதுவது ...................?

எல்லாமே மௌனித்த உணர்வு.  நான் மாறிவிட்டேனா! இயல்பான வாழ்வியல் சிந்தனைகளை நசுக்கி விட்டதா? ஆனாலும் ஏதோ நான் எழுத வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும் நான் நேசித்த என் கலைக்காகவேனும்  எழுத வேண்டும். மீண்டும் நான்  நானாக, என் கலையாக மாறவேண்டும் !

அந்த ஏவல் என் உணர்வுகளுடன் கசிய தொடங்கியவுடன் விரல்களும் விசைப் பலகையுடன் பேசத்தொடங்கியது மழலையாய். ஒரு கலைவாதி மௌனிக்கலாம். ஆனால் மறைந்து விடுவதில்லை. இனி தினமும் என் கவிதாயினியை நான் தரிசித்து போவேன்.

- Ms. Jancy Caffoor -
   07.05.2019

2019/05/06

J/86


பள்ளிக்கூட வாழ்வின் ஒவ்வோர் உணர்வும் இனிமையானவைதான். காலத்தால் மறக்கப்பட முடியாதவை. நரை கண்டாலும் கரை காணா இன்பங்களின்  தொகுப்புகள் அவை. ஒத்த வயது நட்பினர்களுடன் மகிழும் அந்த கணங்களில் நம் வயதும் பாதி  குறைந்து விடுகிறது. எனது பள்ளி தோழிகளையும் பல வருடங்களின் பின்னர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்களை  சுமந்த கரங்கள் இன்று குடும்பங்களை சுமந்தவாறு அந்த நட்பினர்களின் களமாகிய வாட்சப் குழுவின் ஆறு மாத  நிறைவுக்கான எனது கவிதை

J/86......
நல்ல நட்புகளின் உச்சரிப்பு நீ
அழகிய சொற்கள் பிசைந்த பூக்கோலம நீ்!
.
இங்கு  அன்பேற்றங்களின் அலைவில்
மனங்கள் புல்லரிக்கும்.
மங்கலமாய் நட்பும் உயிர்க்கும் !.
.
பாசங்களும் பரிவுகளும் சங்கமிக்கும்
இந்த மையப்புள்ளியில்
தேசம் கடந்து இதயங்கள் விரியும் இதமாய்!.
.
கேலிகளின் கலகலப்பில் பூக்கும்
இந்த மலர் கூடத்தில்
புகைப்படங்களைப் பரிமாற்றி
புளாங்கிதமடையும் கொடையாளிகள் நாம்!.
.
உணர்வுகளின் ரேகைகளை
நளினமாய் வரையும் இந்த கலாசாலையின்
தொடு புள்ளியின் தொடக்கப் புள்ளியாய்
வயது ஆறு மாதம்!
.
மதம் கடந்து மூச்சொலிக்குள் நேசம் கிளறும்
இந்த அன்பு சாலையில்
சங்கமிக்கும் எமக்கு
தினம் ஆனந்தமே!
.
உந்தன் பயணப்பாதையில்
முட்களாய் முகம் திறந்த தடை உடைத்து
முல்லையாய் விரிந்த J/86!
நல்ல நட்புகளை தினமும் என்னுள் அடையாளப்படுத்தும் பொக்கிஷம் உன்னைவாழ்த்துகிறேன் வாழி நீ!


- Jancy Caffoor -
  06.05.2019

வேண்டமினி

உயிர்த்த திருநாளில் - பல
உணர்வுகள் உருகுலைக்கப்பட்டன!

உமிழ்ந்த வன்முறையில்
கனவுகள் காணாமல் போயின!

சதைகளின் கிழிசல்களில்
அரும்புகளும் தீனியாய்!

வன்முறை அநாகரிகத்தில்
மனிதம் அசுத்தமானது!

தவறுகளின் சாம்ராச்சியம்
கிரீடம் சூடியது பவிசாய்!

சமாதானங்கள் சமாதியில்
தீப்பிழம்புகள்!

பரிவும் பாசமும் தோற்றுப் போனதில்
பாவக்கறைகள் புன்னகைக்கின்றன!

தனி மனித தீயில் கருகுகின்றன
நம்  சமூகங்கள்!

மக்கள் மாக்கள் ஆனதில்..
குருதி வெள்ளோட்டம் குஷியாய்!

சன்மார்க்கம்
சந்திகளில் பேசு பொருளாய்!

ஈமானிய நம் மனதின் ஈரம்
விழி நீராய் இரகசியமாய்!

அன்று யுத்தம் கண்டோம் வலி கொண்டோம்
இன்று பழிச் சத்தம்!

வேர் விடும் வன்முறைகள்
வேண்டாம் இனி!

Image result for fight

- Jancy Caffoor -
  05.05.2019