பெண் இப்புவியில் கருக்கொள்ளும் போதே அவளை சூழ இருளும் கவ்வத் தொடங்குகிறது போலும்1 பெண் எனும் அழகிய உருக்குள்ளே சோகங்களும் மையம் கொள்ளத் தொடங்குகிறது. அவளுக்குள்ளே உறைந்து கொண்டிருக்கும் கனவுகள், எதிர்பார்ப்புகளை காலம் "திருமணம்" எனும் பெயரால் விகாரப்படுத்தி விடுகின்றது.
திருமணம் ஒரு பெண்ணை முழுமைப்படுத்துகிறது. அவள் தன் மனதில் படிய வைத்திருக்கும் ஆசைகள் அரங்கேற்றும் இடமாக அந்த மணவாழ்க்கையை கருதுகிறாள். அவள் உணர்வுகளோடு ஒன்றித்துப் போகும் கணவனை மனம் தேடுகிறது. தன் குடும்பமே அவள் உலகமாக உரு எடுக்க, தன் உணர்வுகளை குடும்பத்துக்கே அர்ப்பணித்து வாழ்கிறாள். அந்த திருமணம் அவள் பெற்றோர் உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் என பல உறவுகளையும் பிரித்து, கணவன் எனும் கயிற்றை பலமாகப் பற்ற அவளுக்கு கற்றுக் கொடுக்கிறது.
வருடங்கள் அவள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர அவளுக்கென்றே அவள் இரத்தத்தோடு உறவாடும் பிள்ளைகள் சொந்தமாகிறார்கள்.
தனிமரம் அவள் கிளை விட்டு தோப்பாகிறாள்.
சில வருடங்கள் ஓடிச்சென்றது விதி சதி செய்கிறது!
மருமகளின் உணர்வுகளை புரிந்து மகளாக ஏற்றுக் கொள்ளாத மாமியார், மதினிமார் அவள் மீது வன்மம் வளர்த்தார்கள். அவர்களின் சூழ்ச்சியால் கணவன், மனைவிக்கிடையில் மனக்கசப்பு உருவானது. அவர்களின் உறவுக்குள் மௌனம் பிசைந்து கொண்டது. ஒரு வீட்டுக்குள் வாழும் பறவைகள் உடலாலும், மனதாலும் தொலைவாகினர். அந்த வாழ்வு வெறும் சம்பிரதாயமாக மாறியது. அவள் ஏதோ வாழ்ந்தாள். அவள் பிள்ளைகள் மீது உயிரை போர்வையாக்கி மகிழ்ந்தாள். தன் குடும்ப மகிழ்வுக்காக அவள் சுயநலம் களைந்து ஒடுங்கிக் கொண்டாள்!
" பெண் என்றால் பேயும் இறங்கும் " என்பார்கள்.
ஆனால்!
இந்த ஆணாதிக்க யுகத்தில் அவளுக்கென்று வெறும் போராட்டங்களே தரித்து நிற்கின்றன. காற்றாகி போகும் கானல்கள் அவளுக்குள் தீயாய் உறைந்து விடுகிறது. நிம்மதி தேடும் வழிப்பயணத்தில் அவள் பதிக்கும் சுவடுகள் எல்லாம் கலியாகி உலர்ந்து விடுகிறது. திருமணம் எனும் உணர்வுமிக்க புரிந்துணர்வு வெறும் சடங்காகிப் போகும் போது பெண்ணின் வாழ்வும் கேலியாய், கேள்வியாய் வீணாகிப் போய் விடுகின்றது.
நம்பிக்கை தந்து வாழ்வை பகிர்ந்த கணவன் வேறு பெண்ணை நாடும் பறவையாகிறான். அவள் மனநிலை இறுக்கமடைகிறது. தற்கொலை எண்ணம் தீயாய் அவளை சூழ்ந்து மனதை அல்லல்படுத்துகிறது. தன்னை கட்டுப்படுத்த, தன் பிள்ளைகளுக்கான இருப்பை தக்க வைக்க அந்த சூழலை விட்டு சில காலம் வெளியேற நினைக்கிறாள். உணர்வுகளை நேசிக்காத அந்த மனிதாபிமானமற்ற மனிதனிடமிருந்து, தன் பிள்ளைகளிடமிருந்து யாருமறியாமல் பிரிந்து தாய் வீடு செல்கிறாள். பிள்ளைகள் அவனுடன் இருந்தால் அவன் தன் அடுத்த மனைவியை தேடிச் செல்லமாட்டான் எனும் நப்பாசை அவளுக்குள்!
சில காலம் சென்றதும்
தன் கொந்தளிக்கும் மனதை அடக்கி மீள வீட்டிட்குச் செல்கிறாள். அவள் கணவன் அவள் குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கவில்லை. பிள்ளைகள் அந்த சிலகாலமும் தகப்பனால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள் போலும் ! தாய் மனநிலையை புரிந்து கொள்ளாமல் வெறுப்பை கக்கினார்கள்.
அவள் பிள்ளைகள் கணவனால் பிரிக்கப்படுகின்றார்கள். பிரிக்கப்பட்ட போது பெத்த மனம் கண்ணீரால் தன்னை கழுவிக் கொண்டது.
இன்று விவாகரத்துக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் அவள் மனம்!
போராட்டக் கலவை. கணவனால் வேறாக்கி கொண்டு செல்லப்பட்ட அவள் குழந்தைகள் தாய்ப்பாசம் மறந்து இன்று கணவனின் மனைவியான சிற்றன்னையுடன் வாழும் பிள்ளைகளாக மாறி விட்டார்கள் .
ஏன் ?
தாயை மறக்கும் படி கணவன் மிரட்டினானா அல்லது கணவன் ஈனச் செயல் தாங்காது அவள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி தன் தாய் வீடு சென்றதா?
அவள் இன்று தனி மரம்!
வாழ்வோடு போராடும் தனி மரம்!!
வாழ்வு தரிக்கப்பட்ட சோக மனம்!!!
அவளுக்கு அவள் தெரிவு செய்த இந்த திருமண வாழ்வு பொய்த்து போனதே!
இது யார் குற்றம்?
அவனைத் தெரிவு செய்த அவள் குற்றமா அல்லது இறைவன் விட்ட வழியா?
அவள் துன்பத்துக்கு ஒருநாள் முடிவு வரும் அதுவரை அவள் வாழ்வு காலத்தின் கையில் புதிர்தான்!
கலங்காதே உன் துன்பம் விரைவில் தீரும்!! பிரார்த்தனைகள்!!!- Jancy Caffoor-
16.06.2019