About Me

2019/06/16

சிரிப்பூக்கள்



அம்மா -
மிளகாய்த்தூள் கண்ணுக்குள் பட்டால் ஏன் சிவக்குது?

மகள் - மிளகாய் சிவப்பாக இருப்பதால்

(உங்களை விட, உங்க பிள்ளைங்க புத்திசாலிங்களா? )

-------------------------------------------------------------------------------------------------


நடிகன் :- ஏம்பா என்னைச் சுத்தி சுத்தி வாறே!

ரசிகன் : - நான் உங்க Fan ங்க .................


- Jancy Caffoor-
  16.06.2019

சின்னக் குறும்பு





நான் சின்ன பொண்ணா இருக்கிறப்போ, எங்கட ஊர்ல (யாழ்ப்பாணம்) சுவீப் டிக்கற் விக்க ஒருத்தர் வருவார். அவர வைரமாளிகைன்னு சொல்லுவம். அப்படி ட்ரெஸ் எல்லாம் போட்டு ராஜ கம்பீரமா குரல் கொடுத்திட்டு போவார்.

இதில என்ன விசேசம் என்றால் அந்த உருவத்துக்கு என்ர தங்கச்சி ரொம்ப பயம். நான் எங்கேயாவது விளையாட வெளிக்கிட்டா அந்த வாலும் ஒட்டிக் கொண்டு என் பின்னாலேயே வருவா. கொஞ்ச தூரம் போனதும்,

 "இந்தா உன்ன பிடிக்க வைரமாளிகை வாரார்"

 என்று கத்துவேன்.

அழுது கொண்டு தலை தெறிக்க வீட்ட ஓடுவாள் அவள்!

  இதை இப்ப நினைச்சாலும் சிரிப்ப அடக்க முடியல!







- Jancy Caffoor-
   16.06.2019

கனவுகள் சொல்வதென்ன

Image result for கனவு கவிதை

கனவுகள் என்பது உறைந்திருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடா என்பது பற்றி பல நாட்களாய் சிந்தித்திருக்கின்றேன். ஏனெனில் நம்மையுமறியாமல் ஆழ்மனதுள் பதிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தான் கனவாகி கசிந்து வெளிப் பாய்கின்றன.

நான் அண்மையில் கண்ட கனவொன்று இன்னும் என்னுள் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அது அதிகாலைக் கனவு. அதிகாலையில் காணப்படும் கனவுகள் பலிக்குமென்று பலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

ஒவ்வொரு கனவுக்கும் அர்த்தங்கள் வேறுதான்.

கனாக்கள் அழகானதுதான் நாம் விழிக்கும் வரை!

- Jancy Caffoor-
   16.06.2019

யாழ் நினைவுகள்




யாழ்ப்பாணம் 
1990 ஆம்  ஆண்டுக்கு முன்னர் நாம் பிறந்த ஒரு தேசம். வாழ்விடம். பிறப்பிடம் தான். ஆனால் இடப்பெயர்வின் பின்னர் வேறு ஊர்களில் தங்கி இருக்கும் போதுதான் சொந்த ஊரின், வீட்டின் வாசம்  புரிந்தது. அதன் ஏக்கம் நெஞ்சில் நிறைந்து ஆழமான மனத் தாக்கமாய் உள் நுழைந்தது. இழப்பின் போதுதானே அதன் அருமை புரியும். அந்த வகையில் எம் சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போது சின்ன வயது நினைவுகள் மெல்ல மெல்ல அதிர்ந்து கண்கள் வழியே கண்ணீரை வெளித் தள்ளும்.

பிள்ளைப் பருவம் என்பது பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையிலான பருவமாகும். இப்பருவம் வாழ்வின் ஆரம்ப நிலை பலவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மனதை நிறைக்கும் பருவம். அனுபவங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பருவம். பயம் பாதி, தைரியம் பாதி என   நம்ம நாமே நிரப்பிக் கொள்ளும் பருவம். வாழ்க்கை தத்துவங்களை புரிந்து கொள்ளாமலே நமக்கென சில கோலங்களை நாமே வகுத்து அணி வகுக்கும் காலம்.  குடும்பமே வலிமையான உறவாக நம்மை வட்டமிடும். கஷ்டம், நஷ்டம் மனதுக்கு புரிவதில்லை. கிடைக்கும் சிறு காசு கூட கற்பனை  மாளிகையின் வண்ணக் கோலம்கள்தான். சுதந்திரமான காற்றின் அசைவுகளில் வாழ்நாட்கள் நகரும் அழகிய பருவம்.

அந்த பருவ அசைவுகள் யாழ்பாணத்து தெருக்களில் என்னை பதித்த நினைவுகளை மெல்ல அசை போடுறேன்.

அப்போது நான் 4 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலம். சைக்கிள் பழகும் ஆசை ஏற்படவே உம்மாவிடம் மெல்ல ஆசைகளை அவிழ்த்தேன். பக்கத்தில் லுகுமான் காக்காவின் சைக்கிள் கடை. ஒரு மணித்தியாலத்திற்கு குறித்த சில்லறைகள் வாடகையாகக் கொடுக்க வேண்டும். பக்கத்துக்கு வீட்டு நண்பிகள் புடை சூழ சைக்கிள் பயிற்சி  தினமும் ஆரம்பமானது.

சில மாதங்கள் நகர்ந்தன.

உம்மாவின் கோரிக்கைக்கேற்ப வாப்பா எனக்கென சிறு சைக்கிள் வாங்கித் தந்தார். இப்போது வாப்பாவின் மேற்பார்வையில் சைக்கிளோட்டம் ஆரம்பமானது. வாப்பா முன்னே செல்ல, நான் பின்னே பயத்துடன் ஊர்ந்து கொண்டிருந்தேன்.

அது ஓட்டுமடச் சந்தி கடந்த அராலி வீதி.

அப்போது முதலாம் குறுக்குத் தெரு பொம்மைவெளியில் வீடுகள் பெரிதாக இல்லை. ஆங்காங்கே  குடிசைகள்.  வீதிக்கும், குறுக்கு நிலத்துக்கும் இடையில் பெரிய பள்ளம்.

ஈருருளி நகர்ந்து கொண்டிருக்கும் போது என் பின்னால் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பயத்தில் கைகள் நடுங்க, ஈருருளியை பள்ளத்துக்குள் வீழ்த்தினேன். 

"உம்மா"

மெல்ல முனகலுடன் எழும்ப  முயற்சித்தேன். "ம்ம் ஹும்" முடியவில்லை. வாப்பாவும் பள்ளத்துக்குள் இறங்கி  என்னை தூக்கி விட்டார். அந்தக்கணம் பாதி வெட்கம், மீதி வேதனை.

அன்று எனக்கேற்பட்ட அடி மெல்ல என் முயற்சிகளுக்கு  பலமானது. இன்று நான் லாகவமாக உந்துருளியை செலுத்தும் போதெல்லாம் அந்த நினைவுகள் மெல்ல என்னை உலுக்கி செல்கின்றது. வீழ்கின்ற ஒவ்வொரு அடியும், அவமானமும் நம்மை தூக்கி விடும் தூண்கள்தான்! 
 

- Jancy Caffoor -
  16.06.2019