பன்மைச் சூழலில் பல்வேறு இனங்கள் வாழும் போது அவர்களுக்கிடையில் ஏற்படக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் பாரிய அழுத்தம் தரக்கடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லெண்ணம், ஒற்றுமை, நம்பிக்கை குறைவடையும் போது முரண்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறுகின்றன. பாதிக்கப்படும் சமூகம் அடுத்த சமூகங்களின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத நிகழ்வாகியுள்ளது. ஒருவரின் பலம், மற்றையவரின் பலகீனத்தை தீர்மானிக்கிறது. பாதிக்கப்படும் சமூகத்தின் கஷ்டங்களும், நஷ்டங்களும், துன்பங்களும் மற்றைய சமூகத்தின் ரசிப்பாகி போய் விடுகிறது. சந்தேகங்கள் தொடரும் போது சந்தோசங்கள் ஓடிப் போய் விடுகிறது.
அந்த வகையில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்களும், சவால்களும் இன்னும் முற்றுப் பெறாத பனித் தூறல்களாகவே உள்ளன. அப்பின்னனியில் இன்று (28.06.2019) நான் சந்தித்த இந்த அனுபவத்தையும் பதிவிடுகிறேன்.
பணம் வைப்பில் இடுவதற்காக ................ வங்கி சென்றேன். வழமை போலவே படிவங்களையும் நிரப்பியவாறு, கவுண்டரில் வரிசையாக நின்று கொண்டிருந்தேன். அப்போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்னைத் தேடி வந்ததும் எரிந்து விழுந்தார்.
"உங்களுக்கு தெரியாதா? இங்கு கேமரா இருக்குது. தலையில் மூடி இருக்கும் சீலையைக் கழட்டுங்கள்" என்றார்.
நான் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் எதுவும் கதைக்கவில்லை. "எய்தவர் யாரோ இருக்க அம்பை நோவானேன்". மனம் கொதிநிலையில் வெந்து கொண்டிருந்தது. என் கோபத்தின் அலைவை நின்று கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்திடரிடம் வெளிப்படுத்தாமல், வரிசையில் இருந்து நகர்ந்தேன். என் கால்கள் வங்கி முகாமையாளர் அறையில் போய் நின்றன. அவர் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைக்கும் வரை பொறுமையாய் காத்து நின்றேன்.
அவர் என்னை அழைத்ததும் உட்காரச் சொன்னார். என்னை அறிமுகப்படுத்தியவாறே நடந்ததைக் கூறி முஸ்லீம் பெண்கள் வங்கிக்கு வரும் போது தலையில் முக்காடு போடக் கூடாதா Sir? அப்படி ஏதும் சுற்று நிருபம் இருக்கின்றதா? என்றேன். மானேஜர் அதிர்ந்தவாறே,
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களுக்கு யார் சொன்னது?"
என்றவாறு அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தேடி வெளியே சென்றார். நானும் அந்த பாதுகாப்பு அதிகாரியை காட்டினேன். வங்கி முகாமையாளர் அந்த ஆளைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த நபர் ரூமுக்கு வந்ததும் என் முன்னிலையில் நடந்ததை விசாரித்தார்.
"அவ முகத்தை மூடியா வந்திருக்கிறார். முகம் தெளிவாத் தெரியுதுதானே? எத்தனை தடவை விளக்கி சொல்லியும் இப்படி இருக்கிறீர். இனி இப்படி செய்தால் உம்மை இங்கே வைத்திருக்க மாட்டேன்"
என்று சற்றுக் கடுமையாக நியாயத்தின் பக்கம் நின்று பேசினார். ஏசினார். முகாமையாளர் தொனி உயர்ந்ததும் பா.ஊ குரல் பணிந்தது.
"மன்னியுங்க Sir"
என்றவாறு பாதுகாப்பு ஊழியர் வங்கி முகாமையாளரிடம் மன்னிப்புக் கேட்டதும், மனேஜரோ "என்னிடம் சொல்லாமல் அவரிடம் கேளும்" என என்னைச் சுட்டிக் காட்டினார்.
நானும் அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கலாச்சாரம் பற்றியும் கொஞ்சம் சூடாக சற்றுக் கோபமாக கதைத்தேன். முகாமையாளர் எதுவும் சொல்லாமல் என் வார்த்தைகளை அங்கீகரித்துக் கொண்டிருந்தார்.
"இது எனக்காக மட்டும் இல்லை. இங்கே வாற ஏனைய முஸ்லிம் பெண்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கட கலாச்சாரத்தை நாங்க அவமதிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும். நானும் இந்த ஊர்தானே? துவேசம் காட்டாதீங்க."
பா.ஊ தலையை குனிந்து கொண்டிருந்தார். முகாமையாளர் முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பாக நன்கு விளக்கியும் கூட, கீழ்நிலை உத்தியோகத்தர்கள் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத நிலையே இந்த சம்பவத்தின் பின்னனி !
என் முறைப்பாட்டுக்கு உடன் தீர்வு தந்த அந்த மேலதிகாரி மீது எனக்கு மதிப்பு ஏற்படவே, இதனை மேலும் பிரச்சினை ஆக்காமல் அந்த தடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். இங்கு வாழும் என் சமூகப் பெண்களுக்காக நானும் ஏதோ சிறு துளியாவது செய்திருக்கிறேன் எனும் மன நிறைவு எனக்குள்!
- ஜன்ஸி கபூர் -
28.06.2019