About Me

2020/06/13

வறுமை

எட்டிப் பார்க்கும் குட்டிப் பொண்ணு/
வாட்டம் தீர்க்க நோட்டமிடுது கண்/
எட்டா உயரக் குப்பைத் தொட்டி/
கொட்டிக் கிடக்குமோ ரொட்டித் துண்டு/

நாற்றம் சகித்து தவிக்குது பசி வயிறு/
தொற்றுக்கள் வாழும் உணவுக்கு ஏங்குது மனது/
வறுமை இளமையில் கொடிது கொடிது/
சிறு மலருக்குள் படியுது வலி/

ஆகாரம் இல்லாத வாழ்வின் துயர்/
ஆதாரம் தெருவோர குப்பைத் தொட்டி/
சிறகறுந்த சின்னச் சிட்டின் ஒலியில்/
வருந்துதே மனம் கண்ணீரும் கசியுதே/

ஜன்ஸி கபூர்
13.06.2020

2020/06/12

மாசில்லா சூழல்

மண்ணில் விதைத்த பயிர்கள்//
பொன்னாய் விளைந்திருக்கு//
மனித சக்தி உழைப்பால்//
மாசில்லா சூழல்//

ஜன்ஸி கபூர் 

(ஏ)மாற்றம்

கூறுபோட்டு கொள்ளை
இலாபம் அடித்தே//
வயிறு கழுவுதே
பெருங் கூட்டம்//

பொருளைப் பதுக்கியே
விலையை ஏற்றியே//
தவறுகளால் ஆளுதே
வணிக மோகம்//

வறியோர் வருந்தும்
துன்பம் நீங்க//
ஏமாற்றிப் பிழைப்போரின்
அநீதியை வெல்வோம்//

ஜன்ஸி கபூர்  

உறவைத் தேடும் உயிர்கள்


இறைவன் செதுக்கும் உயிரின் உணர்வாய்//
தரிக்கும் உறவும் பெருஞ் செல்வமே//
அன்பில் அலைந்து மகிழ்வுள் நுழைந்து//
பந்தச் சிறப்பில் வாழ்தல் சுகமே// 

இருந்தும் நவீன மாயத் தாக்கம்//
இடைவெளி நீள தொலைவாகின்றோம் அந்நியமாய்//
உதட்டு வார்த்தைகள் மெல்லச் சுருங்க//
உதிர்க்கின்றோம் வெறும் புன்னகைத் துளிகளை// 

தொல்லை நோயில் தாங்கும் அணைப்பாய்//
அல்லல் தீர்க்கும் சொந்தம் சொர்க்கமே//
மரண நொடியில் தோள்கள் தாங்கி//
கண்ணீர் தெளித்து விடை யனுப்பும்// 

பாச மதை தனிமை வென்றிடுமோ//
இதயங்கள் உடைந்திட வேண்டாம் பிரிவில்//
இனித்து மகிழ்ந்திடலாம் இன சனங்களுடன்//
இரண்டறக் கலந்தே குதுகலிப்போம் குவலயத்தில்// 

ஜன்ஸி கபூர்