About Me

2020/06/24

புத்தம்புது பூமி வேண்டும்

புத்தம்புது பூமி வேண்டும் அழகாக/
சித்தம் மகிழும் வாழ்வும் நமதாக/
சத்தம் கலக்காத காற்றும் சுவாசமாக/
நித்தம் நலம் பேணும் நிலமாக/

மாசு அற்ற இயற்கையே வரமாக/
காசு தேடா வாழ்க்கையே இருப்பாக/
பசுமை தெளிக்கும் தருக்களே அரணாக/
ஆசு தேடா மக்களே உயிர்ப்பாக/

பூக்கள் வாசம் மனங்களின் நேசமாக/
காக்கும் கரங்கள் இறையோன் ஆசியாக/
தாக்கும் தொற்றுக்கள் நீக்கும் மருந்தாக/
பாக்கள் தளிர்க்கும் தமிழ்மொழி   விருப்பாக /

மாற்றிடும் நம்மைச் சுமக்கும்  தேசம்/
ஆற்றிடும் இன்னல் ரணங்களைத் தேகம்/
மறைத்திடும் பொங்கும் வன்முறை  மோகம்/
குறைந்திடும் வாழ்வில் வறுமைத் தாக்கம்

ஜன்ஸி கபூர்  
  •  

2020/06/23

அழியாத நினைவுகள்

நெஞ்சம் வரைந்திடும் வண்ணங்களாய் நினைவுகள்
கஞ்சத்தனமேது இன்பங்களை நிதம் சுவைப்பதற்கே
வெஞ்சினம் அறியா பிஞ்சு வயதும்
கொஞ்சி மகிழ்ந்தன கரங்களில்; பொம்மைகளை

சோலை யிலாடும் மலர்களாய் நானும்
காலைக் காற்றில்  சிறகுகள் வீசி
இலைகளில் ஒளிந்து மறையும் வண்ணப்பூச்சிகளை
அலைக்கழித்தே பிடித்த வீரமிப்போ வெட்கத்தில்

கற்றிடும் பாடங்கள் இடைநடுவே களவாய்
சொற்களைக் கோர்த்தே புனைந்திட்ட கவிகள்
கற்கண்டு நட்பினர் விழிகளில் மொழியாய்
தொற்றிய சிரிப்பும் வதையாகி இனிக்கும்

கடலோசை குவிந்து குழையும் மணலில்
தடம் பதித்தும் அழித்தும் விளையாடும்
உடலும் நனையும் ஈரமாய் குறும்பும்
உணர்வில்; கலந்த நொடிகள் மறந்திடுமோ

ஜன்ஸி கபூர்  


இன்பத் தமிழ்

தமிழே அமுதே இனிய மொழியே/
வளர்ந்தாய் புதிதாய் உலகின் நடையாய்/
இளமைப் பொழிவில் திகழ்ந்தாய் உயிர்த்தாய்/
வளர்ந்தாய் படர்ந்தாய் சிந்தை எழிலாய்/
மழலைச் சிரிப்பில் மனதைக் கவர்ந்தாய்/
மொழிவாய் நீயே எந்தன் மூச்சு/

ஜன்ஸி கபூர்  

விதியை வெல்வோம்



















பிசைந்த மண்ணும் பிள்ளைப் பருவமும்/
இசைந்திடும் வளைத்திடலாம் நம் எண்ணத்திற்கே/
அசைந்திடும் காற்றும் வசை பாடாதினி/
மாசைக் கரைத்திடும் உலோகங்கள் தொலைவில்தான்/

மதிநுட்பமும் கனவும் கலந்த கலவையாய்/
புதிய படைப்பைப் படைக்கும் பிரம்மனே /
துதி பாடுவோம் உழும் விரல்களுக்கே/
விதியை வெல்லலாம் பொக்கிஷங்கள் நீங்களே/

மண்ணை மிதித்ததும் நெகிழும் மனசாய்/
மன சித்தமே உயிர்க்கும் கோலங்களாய்/
சக்கரத்தில் வனையும்  கைநுட்பம் கொண்டே/
வாழ்க்கைச் சக்கரமும் வளமாய்ச் சுற்றிடுமே/

ஜன்ஸி கபூர்  


  •