About Me

2020/07/12

துள்ளும் அழகுப் பிள்ளை நிலா

அத்தியின் மொட்டே நித்திலத்தின் அற்புதமே//
பத்துத் திங்கள் பக்குவத்தில் விளைந்த உசுரே//
சித்திரமே சிந்தையினிக்கும் இல்லறத் தவமே//
முத்தேயுன் நகையழகில்; நசுங்குதே ஏழ்மையும்//

குறுநகை சிந்தி குதூகலித்தது வதனமும்//
குயிலின் நாதமாய் ஒலிர்ந்ததே குரலும்//
விழிகளும் மயக்கிடும் விடிவிளக்காய் ஆனதில்//
பழகும் மாந்தரும் சொக்குவர் இவள் அன்பாலே//

மாமரத்து தூளியிலுனை மாமன் ஆட்டிடுகையில்//
வேப்ப மரக்காற்றும் தாலாட்டும் தாய்போல//
தேன் வழியும் சொல்லெடுத்து அழுதிடும்போது//
வான்மகளும் திரை விரிப்பாள் ஈரத்தோடு//

மாதுளம் பூச்சாறு ஊற்றிய உதட்டோரம்//
மழலைத் தமிழும் கசிந்திடும் எழிலாக//
மங்கலமாய் உதித்த வெண்ணிலா இவள்//
மனங்களின் மெல்லிசையாய் வாட்டம் தீர்த்தாளே//

ஜன்ஸி கபூர்  


சோலைவனத்திலே மாலைநேரக் குயில்கள்

சோலைவனக்குயிலே சோடியென் மயிலே/
சோதனை வேண்டாமடி சேர்ந்திட வாடி புள்ள/
ஓலைக் குடிசைக்குள்ளும் அழகாய்; காதல்/
வாலைக்குமரியே வந்தாடு வாழ்க்கை நாமாகவே/

நாதமிசைத்தே நெஞ்சுக்குள்ள நாணி ஓடுகிறாய்
வேதம் நீதானே வேண்டும்; மதியே நீயெனக்கு
மோகம் நெய்தாய் உசுரைப் பிழிந்தே
மோதும் காற்றிலே வெட்கம் கலக்கிறாய்

செந்தமிழாய் வாழ்வோ டிணைந்தாய்
சந்தனமாய் மூச்சுக்காற்றில் உறைந்தாய்
வந்தாய் விழியின் ஈர்ப்பில் புள்ளே
எந்நாளும் எனையே நீயும் ஆண்டாய்

மருதாணிச் சாறாய் உந்தன் உதடு புள்ள
பருவ நிலா  உந்தன் மேனியின் எழிலாய்
கரும்பும் கூட சுவைக்கவில்லை
இரும்பு மனசுக்குள் நீதான் இனிமை

நாடி வந்தேன் அன்பால்தான்
நாமும் சேர்ந்தால் நலமேதான்
வாழும் வாழ்க்கை வசந்தமாய்ப் பூக்கட்டும்
பாலும் பழமாய் இணைந்திட வாடி புள்ள

-ஜன்ஸி கபூர்

2020/07/11

எதிர்பார்ப்புக்கள் (சித்திரக்கதை)


'பானு... ஏம்மா.....எப்பா பாரு இந்தப் பெட்டியை நோண்டிக்கிட்டுதானே இருக்கிறே.   எனக்கும் வயசாச்சு. இந்த சமையலக் கத்துக்கிட்டாத்தானே நாளைக்கு வாக்கப்படப் போற வீட்டிலும் வாழலாம்'

பாட்டியின் முணுமுணுப்பை காதில் வாங்காதவளாக, பானு மடிக்கணனியில் எதையோ தேடிக் கொண்டு இருந்தாள். அவளின் மௌனம் பாட்டியின் கோபத்தை கொஞ்சம் அதிகரித்தது.  

பானுவும் மடிக்கணனியை நிறுத்தியவளாக, பாட்டி சொன்ன சமையல் உதவிகளைச் செய்யத் தொடங்கினாள். கண்களிலிருந்து இரகஸியமாக கண்ணீர் வழியத் தொடங்கியது.  

வறுமை வழியும் இந்த வாழ்க்கையோடு தன்னை நிலைப்படுத்த பானு ஒவ்வொரு கணமும் போராடிக் கொண்டிருக்கின்றாள். அவளுக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே   விபத்தொன்றில் பெற்றவர்கள் இறந்து போனார்கள். அன்றிலிருந்து இந்த  பாட்டிதான் அவளது உலகம். அயல் வீடுகளுக்குச் சென்று உழைக்கும் பாட்டியின் வருமானமே அவர்கள் இருவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தனது கிராம ஏழை மக்களுக்கு வைத்தியராகச் சேவை செய்ய வேண்டுமென்ற இலக்கோடு பானுவும் கல்விக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். அவளது முயற்சி, திறமை கண்டு அரசு வழங்கும் புலமைப்பரிசிலுடன்  சில தனவந்தர்களும் படிப்பதற்கு உதவி செய்வதனால் அவளுக்கான க.பொ.த.உயர்தர விஞ்ஞானப்பிரிவில் கற்பதற்கான வாய்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் பரீட்சையும் நெருங்க இருப்பதனால் அவளது முழுக்கவனமும் படிப்பிலேயே இருந்தது.  

இது கொரோனாக் காலம். திடீர் விடுமுறையிலிருக்கும் பாடசாலைகளில் பரீட்சையை இலக்காக வைத்து இணையவழியிலான வகுப்புகள் நடைபெறுவதால் பானுவுக்கும் அவ்வூர் தனவந்தர் மடிக்கணனியொன்றை அன்பளிப்புச் செய்தார். அவளும் தனது மடிக்கணனி மூலம் தினமும் கல்வியுலகிற்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தாள்.

பாவம் பாட்டி...அந்தக் கால மனுஷி. வீட்டுக்குள்ளேயே உலகமென்று வாழ்ந்து வருபவர். இந்த இணையவழிக் கல்வி பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ எதுவுமே அறிந்திருக்கவில்லை. தனது வயோதிப இயலாமையும் நோய் நிலைமையும் தன்னைச் சார்ந்திருக்கும் பானுவின்மீது கோபப்பட வைக்கின்றது.  

வீட்டுக்கடிகாரம் காலை எட்டு மணி என்பதை தெரியப்படுத்தத் தொடங்கும்போதுதான் பானுவின் மனசும் பதறத் தொடங்கியது.

'பாட்டி..........நான் படிக்கப் போகணும். இப்ப பள்ளிக்கூடம் விடுமுறை என்டாலும் இணையவழியில் படிப்பிச்சு தாராங்க. பொறகு பரீட்சையும் வைப்பாங்க. அதில கூடப் புள்ளி எடுத்தா புலமைப்பரிசிலா காசு கொடுப்பாங்க. என்ட படிப்புக்கும் இந்த உதவி கிடைச்சா நல்லதுதானே பாட்டி..........' 

என்றவளுக்கு, பாட்டியின் அனுமதி கிடைக்கவே சிட்டென பறந்தாள் மடிக்கணனி அருகில்.

அந்த இணையவழி நிகழ் பரீட்சை ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. அவசர அவசரமாக குறித்த கற்றல் இணைய முகவரியைத் தேடி தன்னையும் குறித்த நிகழ் நிலைப் பரீட்சைக்குத் தயாராக்கினாள். கணனித் திரையில் தென்பட்ட வினாக்கள் விழிகளில் வீழ்ந்ததும் மகிழ்ச்சி சிறகடித்தது. அவள் கற்றது வீண்போகவில்லை. எல்லாவற்றுக்கும் திருப்தியுடன் விடையளித்தாள். மனக் கண்ணில் புலமைப்பரிசில் கனவு அழகாய் விரிந்தது. 

'பாட்டி' 

தன்னையுமறியாது மகிழ்ச்சியில் கத்தினாள் பானு.

பாட்டியோ எதுவுமே புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம், எங்கிருந்தோ கூவும் குயிலின் நாதம் அந்த ஏழைக் குடிசைக்குள்ளும் இனிமையை நிரப்பிக் கொண்டிருந்தது. .

ஜன்ஸி கபூர் - 11.07.2020






2020/07/10

வெற்றி நாயகன்

போராளி வென்றிடுவான் மனங்களின் நேசங்களை/
போராட்டத் தளமதை துணிவுடன் நெய்திடுவான்/
பேரிடர் களைந்திட இலக்குகள் வகுத்தேதான்/
பேரொளிச் சூரியனாய் வெற்றிகள் சுமப்பான் /  

ஜன்ஸி கபூர்