About Me

2020/07/14

சமூக இசைவு

 ஒற்றுமை கொண்டால் பெற்றிடலாம் பலத்தை/
வேற்றுமைத் தீதும் வேரறுந்தே போகும்/
உற்ற துணையாய் சூழ்ந்திடுவார் நல்லோர்/
பெற்றிடலாம் நாமும் அழகிய சமூகத்தை/

ஜன்ஸி கபூர்  

தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினிலே
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே
அன்போடு ஊட்டிடுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்

ஈன்றவள் நெஞ்சின் ஈரச் சுவடுகள்
ஈர்ப்போ டிசைந்தே தொடர்கிறதே கருணையாய்
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்
ஈடில்லா உறவாகி சுமக்கின்றதே   அழகாய்

இடுக்கண் களைந்தே இன்ப மூற்றி
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்
உறைந்திருக்கும் சொர்க்கத்தை தினம் கண்டேனே
உலகமே அடைக்கலமே தாயின் மடியினிலே

ஜன்ஸி கபூர்  

நலமோடு வாழ

பறக்குது காற்றிலே கொரோனாக் கொடி
பதறித் துடிக்குது பாரும் நோய்முற்றி
உதறுது ஆரோக்கியம் உயிரை வருத்தியபடி
உழைப்போ ஏதுமின்றி உறங்குது ஊரடங்கில்

உன்னத மனிதமும் உறவின் அருமையும்
உணர்த்திய பாடங்களாம் உருண்டன நெஞ்சோடு
இறுமாப்பில் நிமிர்ந்தோரும் இன்னலுடன் தலைகுனிந்தே
வறுமைச்சுவை தானறிந்தே வாழ்வையும் புரிந்தனரே

முகக்கவசம் மூச்சுக்காற்றின் முத்தமாய்  அலைந்ததுவே
அகக்கண்ணிலோ அச்சம் மொத்தமாய் வீழ்ந்ததுவே
முத்திரையாம் கைக்கவசமும் இடைவெளியும் நலமாகும்
முடிவுரையாய் ஆரோக்கியப் பயிற்சியும் நமதாகும்

ஜன்ஸி கபூர் 


2020/07/13

பசுமை நினைவுகள்

வகுப்பறை இருக்கைகளுக்குள் ஒளிந்திருக்கும் இதயங்கள்
தவிப்புடனே துடித்திருக்கும் கனவுகளையும் சுமந்தபடி
அறுத்தெறிந்த குறும்புகள் தெறித்தோடிய சுவடுகள்
காலத் தேய்விலும் கரையாக் கற்கண்டுகளே

உயிரற்ற கூட்டுக்குள் உயிர்த்தெழுந்த நினைவுகள்
உறவாடிச் சுகம் காட்டும் வயதேற்றத்திலும்
உயிர் நட்புக்களின் பசுமைச் சுவையுமே
உணர்வின்றி ஒடுங்குமோ வாழ்க்கைப் போரினில்

ஆசான் அன்புடனே ஆய்ந்தறிந்து கற்றவற்றை
அமிர்தச் சுவையுடனே பிழிந் தூற்றுகையில்
மூச்சைத்தான் உடைத்தேதான் வலியாக்கும்  கொரோனாவால்
முகங்கள் தொலைத்தே தனித்திருக்கு எங்களறை

ஜன்ஸி கபூர்