About Me

2020/07/14

வாழ்க்கை எனும் ஓடம்

அலைகளின் சிறு துடிப்பே துடுப்பாக/
அசைந்தோடும் ஓடம் தணிப்பதில்லை வேகம்/
மலைப்பாகும் பேரிடர்கள் மறுத்தாலும் பயணம்/
தளர்வதில்லை தன் இலக்கதனை மறப்பதில்லை/

பயமிருந்தால் கடலசைவும் காவுகொள்ளும் வாழ்வை/
துணிவிருந்தால் போகும்வழி முட்களெல்லாம் பூக்களே/
துரத்தி வரும் வறுமைக்குள் தூங்கிவிடாதே/
தூரத்து விளக்கும் ஒளியாகும் விடிவுக்கு/

கனிந்திடும் கனவுக்குள்ளும் திரையிடும் வறுமை/
கலங்கிடாமல்; தடையுடைத்தே முன்னேறத் தயங்காதே/
வசைபாடியே மூச்சடைப்பார் வம்பர்கள் கூட்டம்/
வருந்தாதே முறைத்திடு எதிர்ப்பிலும் ஏற்றமுண்டே/

தோல்விகள் கேலியல்ல வெற்றியின் வலிமை/
தேடிச்சென்றே முயற்சி தொடு வீரத்துடன்/
ஓடிவிடும் வாட்டமெல்லாம் ஒளிந்துவிடும் சோம்பலெல்லாம்/
நாடிச்செல்லும் நம்பிக்கையில் மாற்றங்களுடன் எதிர்காலம்/

ஜன்ஸி கபூர் 


  •  
     

வாழ்க்கைத் தத்துவம்

 காற்றிலாடும் கூடொன்று தென்றலிடம் முரணாகி/
சிதைந்தே போனதில் சிதறின குஞ்சுகள்/
வருந்திய தாயுமே வனப்பின்றி பறந்தது/
பருந்தொன்று கண்டதால் விதியும் மாறியதே/
இசைந்தே வாழ்ந்திட்டால் அழிவும் தானேது/
வளைந்தே கொடுத்தேதான் உயிர்க்கிறது நாணல்/

ஜன்ஸி கபூர்  


சமூக இசைவு

 ஒற்றுமை கொண்டால் பெற்றிடலாம் பலத்தை/
வேற்றுமைத் தீதும் வேரறுந்தே போகும்/
உற்ற துணையாய் சூழ்ந்திடுவார் நல்லோர்/
பெற்றிடலாம் நாமும் அழகிய சமூகத்தை/

ஜன்ஸி கபூர்  

தாயின் மடியில்

அமிர்தமாய் இனித்திடும் தாயின் நிழலினிலே
அடங்கிக் கிடத்தலும் பெருஞ் சுகமே
அருஞ்சுவைப் பாலதை உதிரத்தில் பிழிந்தே
அன்போடு ஊட்டிடுகையில் ஆட்கொள்ளுதே ஆனந்தமும்

ஈன்றவள் நெஞ்சின் ஈரச் சுவடுகள்
ஈர்ப்போ டிசைந்தே தொடர்கிறதே கருணையாய்
ஈந்திட்ட பொழுதெல்லாம் தன்னலம் பாராமல்
ஈடில்லா உறவாகி சுமக்கின்றதே   அழகாய்

இடுக்கண் களைந்தே இன்ப மூற்றி
இதயத்தின் அலைவுகளில் மூச்சாகும் தாய்மை
பொருந்திட்ட அன்பினாலே பெருந்துயர் துடைத்தே
பொல்லாத நோய்க்கும் மருந்தாகிக் காக்கும்

உணர்வோடு உடலையும் பிழிந்தூற்றி பூரிப்பில்
உயிர்த்தெழுகின்ற உன்னத தாயின் காலடியில்
உறைந்திருக்கும் சொர்க்கத்தை தினம் கண்டேனே
உலகமே அடைக்கலமே தாயின் மடியினிலே

ஜன்ஸி கபூர்