இறப்பும் பிறப்புமாய் உருண்டோடும் வாழ்வில்
இதய வலியின் ஓலங்களோ ஆழ்திரையில்
நாளென்பதோ யந்திரச் சுழற்சியின் விசையாக
வாழ்நாளின் ஓய்வளவும் பணிச்சுமையால் சுருங்க
காலையெழுந்தே கடுகதியானேன் வேலைத்தளத்திற்கே
தலைமை நானே முகாமைப் பணியோ கண்முன்னே
விரைகிறேன் அருகிலுள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கே
விருட்டென்று வந்ததொன்று உறைந்தே நின்றது
விரைந்தேற சப்தமிட்டார் பேரூந்தின் நடத்துனர்
விருப்பின்றி சனங்களும் அடைக்கப்பட்டனர் மூச்சுத்திணறலுடன்
ஏறமுயன்றேன் கால்களோ அந்தரத்தில் - இடர்
கூற முன்னர் உருண்டது விரைவாய் - நானோ
எறியப்பட்டேன் வெளியே கழுத்தோ சக்கரங்களுக்கிடையில்
மரண நெடிக்குள் வீழ்ந்த மனசும்
உதிரக் கசிவும் வலியோடு உறைந்தன
விபரீதம் உணர்ந்ததும் நிறுத்தினர் பேரூந்தை
விளைந்த தவறுக்கு வருந்தி நின்றனர்
மன்னிப்பும்; சிறந்த அறமென்றே நானும்
மருத்துவம் பெற்றே வலியும் துடைத்தேன்
ஜன்ஸி கபூர் 07.07.2020