About Me

2020/07/17

தாலாட்டும் தென்றல்


மேகமாய் குவிந்தே மோகிக்கும் தென்றலே
தேகம் நனைகையில் தேன்மல்லி வாசமே
மோதும் வெப்பத்தையும் மெல்லப் பிழிந்தே
மோகன பூமிக்குள் மெல்ல  ஊற்றுகிறாய்

என்றும் இளமையிற் துள்ளிடும் பூங்காற்றே
மனசள்ளிப் போகின்றாய் தென்பொதிகைப் பாசமாய்
தேனைக் குளிர்த்தி அனலுக்குள் வீசி
எண்ணங்களைக் குளிர்த்துகின்றாய் புன்னகையை ரசித்தபடி

முற்றத்து மலர்கள் திரைதனை நீக்க
முத்தத்தில் நனைத்தே ரசிக்கிறாய் வெட்கத்தை
முட்டி மயிலின் இறக்கையும் மறித்தே
மூச்சின் உயிர்ப்புக்குள் உறைகிறாய்  அமிர்தமாய்

இரவுத் தனிமையை மெல்லிசையால் உடைத்தே
இனிதாய் கரைக்கிறாய் இதய சோகங்களை
இடர் தணித்தே இன்பங்களால் ரசிப்பூட்டி
இதமாய்த் தாலாட்டுகிறாய் என்னைத் தாய்மையுடன்

ஜன்ஸி கபூர்    - 16.07.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!