About Me

2020/07/23

மெய்க்காதல்


அந்தாதி கவிதை
-----------------------
பனித்துளிகள் படர்கின்றனவே உன்னை நினைக்கையில்/
நினைக்கையில் வீழ்கின்றாய் கனவெல்லாம் சுகம்தானே/
சுகம்தானே கண்ணே உயிரும் தேடுகிறதே/
தேடுகிறதே நிழலும் உன் பாதையினை/
பாதையினை வகுத்தே வாழ்ந்திடுவோம் நலமாய்/
நலமாய் வாழ்ந்திடவே துடித்திடுமே மனதும்/
மனதும் தவித்திடுமே நீயென்னைப் பிரிந்தாலே/
பிரிந்தாலும் சேர்ந்திடுமே நம் மெய்க்காதல்/

ஜன்ஸி கபூர் - 24.07.2020
யாழ்ப்பாணம்


மகிழ்வின் விலை

 

உழைப்பின் மூச்சினில்  ஊதிப் பருத்திடும்
ஏழை வியர்வையும் காற்றினில் கலந்திடும்
தழைத்திடும் வாழ்வும் செழித்தே மலர்ந்திட
அழைப்பார் விலை கொடுத்திட ஊதும்பைக்கே

பிஞ்சு மனங்களின் கொஞ்சும் விரல்கள்
கெஞ்சி வருடும் காற்றுப்பை மேனிதனை
அஞ்சிடாமல் அசைந்திடும் தென்றல் சுகத்தினில் 
நெஞ்சமும் நிறையுதே வானவில் வர்ணங்களில் 

விழிகளின் சுகத்தினிலே அழுகின்றதே இயற்கையும்
பழியாகுமோ சூழலும் இறப்பர் மாசினால்
அழிகின்றதே பண்பாடும் காற்றுப்பை கலாசாரத்தினால்  
செழிக்கட்டுமினித் தரணியும் பசுமை யலங்காரங்களால்

ஜன்ஸி கபூர்   

2020/07/21

புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன் அத்தமகளே உனக்காக பூத்திருக்கேன்

 
புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன்/
அத்தமகளே உனக்காக பித்தாகப் பூத்திருக்கேன்/
சித்தமெல்லாம் உருகுதடி உந்தன் அழகாலே/
உத்தமியே உசுருக்குள்ளே உன்னைத்தானே பூட்டினீயே/

கடலோரக் காற்றி லுந்தன் வாசமெல்லாம்/
கவிதையாக வீழுதடி நனையுதே மனசும்தான்/
கனவோரம் உயிர்க்குதடி நினைவெல்லாம் சுகமாய்/
கட்டியிழுத்தாய் காலமெல்லாம் கூடி வாழ/

நாணம் சிந்தும் நளின விழியினிலே/
நானும் சிறைபட்டேனே நிழலாய்த் தொடர/
நாவுதிர்க்கும் அமிர்தமே சுவைக்கத் துடித்தேனே/
நாளுமே உனக்காக ஏங்கித் தவித்தேனடி/

நடக்கு முன்னழகிலே அன்னமும் தோற்குதடி/
குடமேந்தும் வளைவினிலே துடிக்குதடி வயசும்தான் / 
விடமும் அமிர்தம்தானே நீ தொட்டதனாலே/
அடம்பிடிக்காதே  நாள்குறி நாம வாழத்தான்டி/

ஜன்ஸி கபூர் 






பொங்கு தமிழ்

அமுதத் தமிழை அன்பால் மொழிந்தே
அகிலம் வியக்க ஆளும் தமிழா
அண்டம் கேட்கும் வீர முழக்கம்
அஞ்சா நெஞ்சம் உந்தன் மகுடம்

பொங்கு தமிழ் எங்கும் தமிழாய்
வங்கக் கடலும் ஓங்கி ஒலிக்கும்
எங்குமுள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
சங்கே முழங்கு பகைவர்கள் மறையட்டும்

கொடுமை காணுகையில் கொன்றொழி அதர்மம்
நடுநிலை கொண்டேதான் நானிலம் காத்திடு
தடுமாறி வீழ்ந்திடாமல் தடைகளு முடைத்தே
நாடும் செழித்திட நல்லுரமாய் உழைத்திடு

வஞ்சகர் நெஞ்சினைப் பிளந்திடு வாய்மையால்
கொஞ்சிடு முறவுதனை நல்லறமாய்ப்  போற்றிடு
வெஞ்சினம் கொள்வாய் பெண்பித்தர் முன்னாலே
நெஞ்சத்தை நிமிர்த்திடு தமிழனாய் வாழ்ந்திட

ஜன்ஸி கபூர் - 20.07.2020
யாழ்ப்பாணம்