About Me

2020/07/23

விடியாத பொழுது

விடியாத பொழுதெல்லாம் விதியின் சூழ்ச்சியோ/
துடிக்கின்றனர் மாந்தரும் இழிகுணம் கண்டே/
கடிவாளமில்லா ஆசைகளும் வெடித்திடுமே பேராசைகளாய்/
மனசு முணர்ந்திடும் திருப்தியற்ற வாழ்வுதனை/

சுரண்டும் கரங்கள் உயர்த்திடும் கோபுரங்களை/
வரட்டும் ஏழ்மைக்குள்ளும் துகிலுரிக்கும் கையூட்டுக்காய்/
ஈரமில்லா நெஞ்சுக்குள்ளும் திரளும் சுயநலத்தால்/
மரத்திடும் மனிதமே மற்றோரெல்லாம் இருட்டிலே/

திட்டமிடா வாழ்வும் கடனேற்றும் மலையளவு/
வாட்டத்தின் வலிமைக்குள்ளும் உதிர்ந்திடும் வனப்புமே/
தட்டிக்கேட்கார் உழைப் புறுஞ்சுவோர் அநீதியை/
வட்டமிடும் பொழுதெல்லாம் விடியலும் மறக்குமே/

விரலளவே முட்டட்டும் நமக்குள்ளே எதிர்பார்ப்பும்/
வீணாகாமல் பொழுதெல்லாம் நலமாகட்டும் இனிதாகவே/
வாழ்வும் தன்னியல்போடு பொருந்திப் போனால்/
விடியாத பொழுதெல்லாம் விடிவெள்ளிகள் ஆளட்டும்/

ஜன்ஸி கபூர்  

இறவாத வரம்

பகுத்தறிவு மாந்தர்க்கு இறவாத வரமே
வகுத்திடலாம் நெறிதனை வாழ்வும் மேன்மையுற
தன்னையு மறிந்திடலாம் கற்காத அறிவுடனே
தரணியோ டிசைந்திடலாம் நல்வாழ்வும் பெற்றே

ஜன்ஸி கபூர் 


குச்சுவீட்டுத் திண்ணையோரம்


குச்சுவீட்டுத் திண்ணையோரம் ஆசை/
மச்சானும் காத்திருக்கேன் நெடு நேரம்/
அச்சமேனே அஞ்சு நிமிசம் பேசிடலாம்/
பச்சப் புள்ளையே புரிஞ்சுக்கடி மனசத்தான்/

வளைஞ்சோடும் நதியோரம் நீ நடக்கையிலே/
வளையல் சத்தம் கலகலக்குதடி காதோரம்/
வைரமே உருக்கிறியே என் மனசத்தான்/
வைகைக் காற்றே கிள்ளாதே நினைவைத்தான்/

மை தீட்டும் விழியாலே மயக்குறே/
தை மாசம் வாறேன்டி வீட்டோரம்/
கை வீசி நடக்கையில மனசள்ளுறியே/
வையடி சீக்கிரம் கல்யாணத் தேதியத்தான்/

மொய்க்கிறே வண்டாட்டும் மனதைக் கிள்ளித்தான்/
பொய்யாக சினந்துகிட்டே சிவக்கிறே அழகாக/
சாய்ந்தாடும் மலரே உன்னிதழ் அமுதாக/
காய்ந்த பூமியின் தேவதை நீதானடி/

ஆலமர விழுதிலே ஊஞ்சலும் ஆடுவோமா/
ஆசை நெலவும் ரசித்திடப் பாடுவோமா/
ஆனந்தத் தித்திப்பிலே உசிரும் இசைந்தாட/
ஆருயிரே காத்திருக்கிறேன் உனக்காக/

ஜன்ஸி கபூர்
 





மெய்க்காதல்


அந்தாதி கவிதை
-----------------------
பனித்துளிகள் படர்கின்றனவே உன்னை நினைக்கையில்/
நினைக்கையில் வீழ்கின்றாய் கனவெல்லாம் சுகம்தானே/
சுகம்தானே கண்ணே உயிரும் தேடுகிறதே/
தேடுகிறதே நிழலும் உன் பாதையினை/
பாதையினை வகுத்தே வாழ்ந்திடுவோம் நலமாய்/
நலமாய் வாழ்ந்திடவே துடித்திடுமே மனதும்/
மனதும் தவித்திடுமே நீயென்னைப் பிரிந்தாலே/
பிரிந்தாலும் சேர்ந்திடுமே நம் மெய்க்காதல்/

ஜன்ஸி கபூர் - 24.07.2020
யாழ்ப்பாணம்