அலைகள் கொஞ்சும் இராமேசுவர மடியும்/
தலைசிறந்த பொக்கிசமே தலைவனைச் சுமந்ததால்/
நிலையற்ற வாழ்வில் இமயமாய் வறுமை/
மலைத்திடத் துயரும் உயர்ந்திட்டார் கல்வியால்/
விருதுக் கிரீடங்களால் கலைகளும் ஒளிர/
கரும்புச்சுவையை பிழிந்தூற்றிய அக்கினிச் சிறகும்/
பருவ வயதினர் வாழ்க்கையை வெல்ல/
பாதைகள் வகுத்திட்டார் கனவுகளும் இலட்சியமாய்/
அறிவு விரல்கள் ஆராய்ந்தன விண்ணை/
ஆற்றலின் உச்சத்தில் தந்தையுமானார் ஏவுகணைக்கே/
ஆளுமைத் தளம் நீண்டதே குடியரசில்/
அகிலமே வியந்திட்ட அன்புக்குள்ளும் நின்றார்/
இலட்சிய வேட்கையால் உதிர்ந்தன உறுதிமொழிகள்/
இன்னல் உறுஞ்சிடும் பொன்னான திட்டங்கள்/
இமயமாய் உயர்ந்திட்ட சாதனை நாயகன்/
இதயங்களில் வாழ்கின்றார் இறவாமல் உயிர்த்தே/
ஜன்ஸி கபூர்
யாழ்ப்பாணம்