About Me

2020/08/05

கொரோனாவும் கொள்ளையும்

கொட்டமடிக்கும் கொரோனாவால் வாட்டத்திலிங்கு மாந்தரும்
திட்டமிட்டே ஏறுது விலைவாசியும் இமயமாக
நீட்டிடும் பணத்திற்கே நிறையுது கூடைகளும்
பட்டினி வயிரெல்லாம் வெறுமையில் சிதையுது

வீட்டுச் சிறையினில் வாழ்வும் பதுங்கிடவே
தட்டுப்பாடென்ற மாயையினில் நட்டுகின்றனரே கொள்ளையைத்தான்
கட்டுப்பணம் கறந்தாலே கைமாறும்  பசியடங்க
கேட்கத்தான் நாதியில்லை பதுங்கிடுதே பொருட்களும்தான்

நீளுகின்ற ஊரடங்கை வசப்படுத்தும்  முதலைகள்
மாளுகின்றன உயிர்கள்தான் தொற்றுடன் விலைவாசியால்
தளும்புகின்ற சோகங்கள் நெறிக்கின்றதே குரல்வளையை
ஆளுகின்ற கொள்ளையிதை மதிதான் மாற்றிடுமோ

ஜன்ஸி கபூர்
 
 

 

2020/08/04

முட் தேசத்து வாசம்

நேசமே உயிர்த்தாய் மெல்லிழைக் காதலால்/
வாசமும் நுகர்ந்தேன் சுவாசமே நீயுமானதால்/
தேசமும் துறந்தே ஆழியும் கடந்தாய்/
பாசமும் மாறியதோ பாவையிவள் தொலைவாகவே/
வேசமும் கலைந்தாயே அன்பும் வெருண்டோட/
மோசமான நடத்தையால் வாழ்வும் நாசமாகியது/

ஜன்ஸி கபூர்  
 




தமிழ்


உயிர் மூச்சினில் உறைந்திட்ட மொழி
உலக உயிர்ப்பினில் இசைந்திட்ட இன்பத்தமிழ்

04.08.2020

மனைமாட்சி

 மங்களம் வந்தமரும் நல் மனைமாட்சியில்
பொங்குமே புன்னகையும் குங்குமச் செழிப்பினில்
இல்லறத்தின் நற்பயனை இல்லமே சுவைத்திட
நல்லமுதாய் காத்திடுவாள் தன் குலத்தினையே

ஆண்மையும் பெண்மையும் இசைந்திடுமே இல்லறமாய்
எண்ணமும் வசமாகும் வாழ்வின் சிறப்பினில்
கண்ணாளன் கருத்தினில் கலந்திடும் நல்மனையாள்
தொண்டெனவே ஊறிடுவாள் தன் உறவுகளுக்கே

சொற்களைக் கலப்பாள் நாவடக்கமும் சுவையாகும் 
கற்பின் செழுமையினில் பண்பும் உயர்வாகும்
வள்ளுவன் வாக்கோடு தன்னையும் கோர்த்தே  
மங்களப் பேருவைகையால் வாழ்த்திடுவாள் மனையை  

இகழ்ந்திடார் அறிந்தோர் இதயத் தினன்பை 
புகழும் மணக்கும் வாழ்ந்திடும் வாழ்வினில்
அகமும் மகிழும் அணிகலனாய் மக்கற்பேற்றுடன்
அகிலமும் போற்றுமே அவள் மனையாட்சியை

ஜன்ஸி கபூர்