About Me

2020/08/05

வான வீதியில் பறக்க வா


தனிமைச் சிறை நீள்கின்றதே தவிப்புடன்/
தாவும் நொடியெல்லாம் பூக்கின்றதே அக்கினியாய்/
இனிமைத் துடிப்பெல்லாம் சிதைகின்ற இதயத்தில்/
இன்னலும் உருகிடுதே விழிநீர் வெம்மைக்குள்/

கன்னச் சிவப்பும் குறுநகை விழியசைவும்/
என்னைத் துளைக்குதடி காதலும் சுகமாக/
இன்பத்தின் வாசலாய் வானம்தான் நமக்கிருக்கே/
அன்றிலே உந்தன் சிறகாய் நானே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020



 


 

தாயே நானும் உனக்கே


சேரி சுமக்கும் வாழ்க்கை நமக்குள்
சோகம் ஏனோ சோதரி யுன்னில் 
சோர்ந்திடாதே தாயே  நானும் உனக்கே

---------------------------------------------------------
சேரிக்குள்ளும் கூர்மை யன்பு 
வாரியணைக்கும் நெஞ்சங்களும் பிணைய
கறையுமுண்டோ வறுமைக்கிங்கு  

ஜன்ஸி கபூர்


வயலோரம் விளையாட வா புள்ள


வயலோரம் காத்திருக்கேன் மனசுக்குள்ளே பூத்திருக்கேன்/
வாறியாடி வெளையாட வரம்போரம் கோடிழுப்போம்/
சறுக்கிடாதே சேத்துக்குள்ள சிறுமீன்கள் துடிப்பிருக்கு/
கருவேப்பிலை வாசத்திலே கருத்தள்ளி போறவளே/

பருவத்தில வெளஞ்சிருக்கு வெண்டக்கா விரலப்போல/ 
துரும்பாக எளச்சிட்டேனே கரும்பே வந்துடடி/
இறுங்கும் வெளஞ்சிருக்கு குறும்பாய் பாத்திருக்கு/
இறுக்கி அணைச்சுக்கோடி இன்பம் கோடிதான்/

உச்சி சூரியன் இளகிப் போச்சே/
உழுத வயலும் காத்திருக்கு புள்ள/
உழுந்துக் கொடியும் உந்தன் இடையினில்/
தழுவுதடி நாத்துப்போல
தளிர்க்கொடியே வெட்கமேனோ/

சமைஞ்ச புள்ளே வெளஞ்ச நாத்தே/
சக்கரைத் தண்ணீ ஊறுதடி நாக்குல/
தேக்குமரம் வயலோரம் தேடுதடி என்னப்போல/
ஆக்கிடலாம் சிறுசோறும் அள்ளிப்போடு வாழயிலைல/

வெக்கம் ஏனோ வெள்ளரிப் பிஞ்சே/
பக்கம் வந்திடு மாமனும் சொக்க/
அக்கம் பக்கம் யாருமில்லை அன்பே/
அந்திக்குள் வந்திடு ஆனந்தம் நெறைஞ்சிருக்கு/

வடக்கில பரணிருக்கு மச்சானும் அருக்கிருக்கேன்/
குடத்தோட வந்திடடி கும்மியும் ஆடிடலாம்/
எட்டிப் பார்த்தால் யாரும்தான் பதுங்கிக்கலாம்/
கட்டழியே நமக்கிருக்கு நெல்லுமணித் தொட்டில்தான்/

ஜன்ஸி கபூர்

கொரோனாவும் கொள்ளையும்

கொட்டமடிக்கும் கொரோனாவால் வாட்டத்திலிங்கு மாந்தரும்
திட்டமிட்டே ஏறுது விலைவாசியும் இமயமாக
நீட்டிடும் பணத்திற்கே நிறையுது கூடைகளும்
பட்டினி வயிரெல்லாம் வெறுமையில் சிதையுது

வீட்டுச் சிறையினில் வாழ்வும் பதுங்கிடவே
தட்டுப்பாடென்ற மாயையினில் நட்டுகின்றனரே கொள்ளையைத்தான்
கட்டுப்பணம் கறந்தாலே கைமாறும்  பசியடங்க
கேட்கத்தான் நாதியில்லை பதுங்கிடுதே பொருட்களும்தான்

நீளுகின்ற ஊரடங்கை வசப்படுத்தும்  முதலைகள்
மாளுகின்றன உயிர்கள்தான் தொற்றுடன் விலைவாசியால்
தளும்புகின்ற சோகங்கள் நெறிக்கின்றதே குரல்வளையை
ஆளுகின்ற கொள்ளையிதை மதிதான் மாற்றிடுமோ

ஜன்ஸி கபூர்