About Me

2020/08/14

விட்டோடுதல் தகுமோ

 


விழிகளின் கனவெல்லாம் விழிநீரில் கரைந்திடுமோ

தழுவிடத் துணையுமில்லை தணிந்திடாத கோபத்தால்

வழக்கின் பிடிக்குள் அழகான இல்லறம்

வழிகின்ற சோகம்தான் எதிர்காலத் துடிப்பாகுமோ


கருத்தோடு இசைந்தே வாழ்ந்திட்ட வாழ்வும்

உருச் சிதைந்ததோ மனமும் புரிந்துணர்வின்மையால்

எதிர்த் துருவமாக சிறகடிக்கும் அன்பே

அருகமர்ந்து பேசினாலே மிரண்டோடும் பிணக்கெல்லாம்

 

விட்டுக்கொடுத்தாலே விலகிடும் முரண்பாடெல்லாம்

தட்டிக் கொடுத்தாலும் தாம்பத்தியம் மகிழ்ந்திடும்

கட்டிய மாங்கல்யம் தொட்டணைத்த குழந்தைகளை

விட்டோடுதல் தகுமோ பெற்றவர்கள் துணையின்றி


ஜன்ஸி கபூர்  

 



 

சில காதல்கள்

சில காதல்கள் தீ போன்றன

முதலில் இதமான பார்வைகள் வீசுகின்றன

பின்னர் இதயத்தில் உணர்வுகள்  பொங்குகின்றன  

அடுத்து உடலெங்கும் மின்சாரம் பாய்கிறது

சந்திப்புக்களில் மெல்லிய காமம் பூக்கிறது

பிறகு அதுவும்  அடங்கி விடுகிறது

நீ யாரோ நான் யாரோவென்று

நம் மனங்களையும் முறித்து விடுகின்றன


சில காதல்கள் கனவுகளில் வாழ்கின்றன

கற்பனைகளில் மாத்திரம் கவிதைகளைச் சுமக்கின்றன

நிஜ வாழ்க்கைக்கு ஏனோ பயப்படுகின்றன

அடி மனதில் ஆசை துடித்தாலும்

எல்லாவற்றையும் மறந்ததாக நாமும் நடிக்கிறோம்

விருப்பமின்றி வேறு வழியில் பயணிக்கிறோம்

நம்மிடம் எஞ்சுகின்றன வடுக்கள் மாத்திரமே


சில காதல்கள் காதலர்தினத்தில் பொங்குகின்றன

நாகரிக உலகத்தில் வாழ அலைகின்றன

வாழத் தெரியாத காதல்கள்தானே இவை

அருகிருந்தால் அணைக்கின்றன தொலைவென்றாலோ மறக்கின்றன

ஆனாலும் உண்மை அன்பைக் கடக்கின்றோம்

அடுத்தவர் பாவத்தையும் நாம்தான் சுமக்கின்றோம்


காதலுக்குள்ளும் அகம் புறக் கண்களுண்டு

நம் உலகம் சுருங்கிக் கிடக்கின்றன

கனவு நிலைக்குள் நாம் தள்ளப்படுகிறோம்

பிறர் புறக்கண்கள் நம்மிடம் நீளுகின்றபோதெல்லாம்

மாயை உலகின் விமர்சனங்களைக் கடக்கின்றோம்.


சில காதல்கள் பேருந்துகள் போன்றவை

இலக்கின்றி இதயத்தில் ஏற்றி இறக்குகின்றன

கொஞ்ச நினைவுகளே நமக்குள் எஞ்சுகின்றன.

கடைசியில் காதலின் புனிதத்தை இழக்கின்றோம்


சில காதல்கள் மலர்களைப் போன்றன

உதிர்ந்து எருவாகின்ற பூக்களாய் மாறுகின்றன

இறந்தாலும் உயிர் வாழ்கின்றன நமக்குள்

அவை ஒருபோதும் நினைவுகளை மறப்பதில்லை


சில காதல்கள் பாதணிகள் போன்றன

எம்மை அருகிலிருந்து அன்போடு பாதுகாக்கின்றன

நாமாக உதறித் தள்ளும் வரை

நம்முடனே இணைந்து வருகின்றன தினமும்

அந்த அன்புடனே நாமும் அலைகின்றோம்


சில பிஞ்சுக் காதல்களும் வாழ்கின்றன

இலக்கணம் அறிந்திருக்காத புதுமைக் காதல்கள்

மற்றோரைப் போல நாமும் காதலிக்கின்றோம்

எல்லா உணர்வுகளும் அதில் இருக்கின்றன

ஆனாலும் முதிர்ச்சிக்கு முன்னரே தோற்கிறோம்

வலி மாத்திரம் எஞ்சுகின்றது நமக்குள்


சில காதல்கள் நமக்கு ஏணிகள் போன்றன 

நம்முடன் நினைவில் நடந்து முன்னேற்றுகின்றன

தொலைவிலிருந்து ரசிக்கும் இந்த அன்பை

நினைவுகளில் மாத்திரமே நாமும்   சுமக்கிறோம்


காதல்கள் சூழ்நிலைக்கேற்ப பண்புகளை மாற்றுகின்றன

கற்பனைகள் வலிகள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள்

எல்லாம் வந்துதான் போகின்றன அழகாக.

சிதையாத உண்மைக் காதல் வாழ்கின்றது

நாம் சுமக்கின்ற அன்புடனதுவும் வளர்கின்றது


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்





2020/08/13

விடுதலை முழக்கம்

விடியல் போராட்டங்கள் உணர்வுகளின் ஒலியே/

துடித்திடுமே இதயங்களும் மௌனத்து வலியில்/

மடிகின்ற மனிதங்களை உயிர்ப்பிக்கும் ஆயுதமாய்/

படிகின்றதே வாழ்வுக்குள்ளும் விடுதலை வெற்றி/


ஜன்ஸி கபூர்  


மயக்கமென்ன மௌனமென்ன

சிற்பமொன்று உயிர்த்திடவே சிறகடித்தேன் கனவுக்குள்ளே/

அற்புத ஒளியவளோ உணர்வெல்லாம் மோட்சத்தினில்/

விழியசைத்தாள் நனைந்ததுவே என்னுயிரும் ஏக்கத்தினில்/

அழகியவள் கரமிணைத்தேன் மயக்கத்தினை மொழிபெயர்த்தாள்/


கன்னத்தில் கசிகின்ற வெட்கத்தின் வெடிப்புக்களை/

சுவைக்கின்றேன் களவாக சொப்பனத்தில்  அவளிதழ்கள்/

உளமேந்தும் காதலுமே பிணைந்திடும் நேரந்தனில்/

உறைகிறாள் மௌனத்தினில் ரசிக்கின்றேன் நானுமவளை/


ஜன்ஸி கபூர் - 12.08.2020

யாழ்ப்பாணம்