About Me

2020/08/29

உதவும் கரங்கள்

 அழுக்கும் பழகிய அவல வாழ்வு

நழுவாமல் ஈர்க்கின்ற வறுமைப் போராட்டம்

தழுவாத உறவுகளால் உரிமையான வீதியோரம்

எழுதப்படாத விதியாக அழுத்திச் செல்கின்றதே


உணர்வுக்குள் பிசையப்பட்ட மனித நேயங்கள்

உலாவும் பூமிக்குள் புளாங்கித மழை

உதரத்தின் ஓலத்திற்கு உரமாகும் கரங்களே

உள்ளத்தின் மாண்பை  உயிர்த்திடுமே சிகரமாய்


நிலையற்ற வாழ்வுக்குள் அலைகின்ற துன்பங்களை

கலைக்கின்ற கருணையும் விலையற்ற பொக்கிஷமே

பாலைவன வெயிலையும் குளிர்த்திடும் பாசத்தினில்

சாலையோர யாசகமும் உயிர்த்திடும் தினமும்


இரக்கத்தில் இசைகின்ற மனங்களில் என்றுமே

இறைவனின் நேசமும் நிறைத்திடும் உதயத்தினை

இதயத்தின் அன்பினில் இன்னலும் கரைந்திடும்

இறந்தும் மறக்கப்படாதே உதவும் கரங்கள்


ஜன்ஸி கபூர் 

தேடினேன் தந்தது

சந்தன வாசத்தில் செந்நிற ஆதவன்

சிந்திய ஒளியினில் சிறகடிக்கிறேன் தென்றலில்

தேடினேன் தந்தது மலர்களும் மகரந்தத்தை

தேன் அமுதத்தில் மனமும் மகிழ்ந்திடவே

வான் வெளியும் பதிக்கின்றதே சுவடுகளையே   


ஜன்ஸி கபூர்

2020/08/28

அன்பு

இதயத்தின் அழகான உணர்வு மொழி

இன்னலைத் துடைத்திடும் அற்புத வழி

தேனூற்றின் சுவையினில் மனதினை நனைத்திடும்

கண்ணோரத் துடிப்பினில் கருணையாய் படர்ந்திடும்


நான் நாமாகி பொதுநலமும் உயிர்த்திடும்

நானிலத்தின் துடிப்புக்குள்ளே நற்செயலே அறமுமாகும்

வெறுப்பும் எரித்திடாத விருப்பின் மையலது

வெந்தணலிலும் பிழிந் தூற்றும் பனிச்சாரலது


கையளவு மனதுக்குள்ளே கசிந்திடும் தாய்மையும்

நம்பிக்கை தந்திடும் இடரின் வாழ்வுக்குள்ளும்

கரும்பாறையும் இளகிடும் ஆறுதல் வருடுகையில்

கரும்பின் சுவையினில் உறவுகளும் தித்திக்குமே


மேகத்தின் அன்பினில் மண்ணும் நனைந்திடுமே

மேதினி வாழ்ந்திடவே வழிகாட்டும் ஊக்கமது

அன்பின் வருடலில் சுகமாகும் என்னிதயம்


ஜன்ஸி கபூர் 






2020/08/27

துளியும் கடலும்

தரையைத் தொட்டு மீளுகின்ற அலைகளாய்

தவிக்கின்ற உன் நெஞ்சம் புரிகிறது

கரையினில் உடைகின்ற அலைகளாய் உன்னாசைகளும்

மனதினில் துடிப்பது எனக்கும் புரிகின்றது

இருந்தும் புரியாதவனாய் நழுவுகின்றேன் அடிக்கடி


வீசுகின்ற காற்றுக்குள் நிரப்புகின்றாய் சோகங்களை

மரத் துடிப்பினில் வீழ்கின்ற இலைகள்

நினைவூட்டுகின்றது உன்னை எனக்குள் எப்பொழுதும்

நானின்றி வெறும் சருகாய் உருமாறுகின்ற

உன்னைக் கண்டும்கூட கடந்துதானே செல்கின்றேன்.


உன் சாய்விற்கு என் தோள்கள்

உன் ஆசைகள் என்னைத் துரத்துகின்றன

நான் முற்றும் துறந்தவனா இல்லையே

உன் அன்பு புரிந்தும் ஊமையாகின்றேன்

யாருக்காகவோ உன்னைத் தனிமைப்படுத்துவதாகவே நினைக்கிறேன்

 

இசை எனக்குப் பிடிக்கும் இசைப்பேன்

மூங்கில் துளைகளை அருட்டுகையில் விழுகின்றது

பொங்கும் உணர்வுகளுடன் போராடும் உன்னினைவு

இருந்தும் தயங்குகின்றேன் உன்னைத் தாங்கிட

உன் அருகாமை என்னை உடைத்திடுமோ

 

காதல் உணர்வல்ல வாழும் வாழ்க்கை

காதலை நான் கற்கும் வரைக்கும்

நமது விம்பங்கள் மோதுவதை விரும்பவில்லை

நம்மை நாம் புரிந்து கொள்ளும்வரை

தள்ளியே நிற்கின்றேன் உறுதி மனதில்தான்

சந்திப்பு வேண்டாம் உறுதியுரைக்கு என்னாச்சு

உன் உருவைக் கண்டதும் உராய்கின்றது

உந்தன் விழியோரம் செருகியிருக்கும் நீர்

எந்தன் மனசுக்குள் பாய்கின்றது தாராளமாக


நாம் பேசியிருக்கிறோம் நிறைய ரசித்திருக்கிறோம்

காதல் சாயமில்லா நட்புத்தானே அது

அப்படித்தானே நினைத்துப் பழகினேன் உன்னோடு

அருகிலிருந்தால் உந்தன் அமைதியை ரசிக்கிறேன்

உரு மறைந்தால் உறுத்துகிறதே இதயமும்

இருவரின் பேச்சிலும் வாழ்வியல்தானே நிறைந்திருக்கின்றது

இருந்தும் நமது தோழமைக்குள் காதலா

கண்டுபிடிக்க காத்திருக்க வேண்டும் நாம்தான்

 

உனது நீட்சிக்குள் நானென்ற எல்லையை

எனது மனம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது

உன் துயரங்களுக்கு காது கொடுக்கிறேன்

விழி நீரையும் துடைக்கிறேன் தாயாகி

இன்பத்திலும் துன்பத்திலும் ஒருங்கிசைகின்றோம் நேர்கோட்டில்

இருந்தும் சேமிக்கின்றாய் துடிப்புக்களை என்னுள்ளே


நான் வாசிக்கையில் வீழ்கின்றாய் வரிகளாக

உன் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன்

நம் அன்பின் எல்லையை உணரும்வரை

தள்ளியே நிற்கிறேன் முல்லைக் கொடியே


நீயும் விடுவதாக இல்லை தொடர்கிறாய்

உந்தன் சோகங்களை என்னிடம் கொட்டுகையில்

கண்களின் வேதனையைப் படிக்கின்றேன் 

கன்னக் கதுப்பில் உறைந்திடும் உனதீரத்தில்

உள்ளம் நனைந்து விடுகின்றது தானாய்

உந்தன் இமையோரம் வடியும் நீர்த்துளிகள்

எனக்குள் அல்லவா கடலாகப் பெருகின்றது.

காரணம் புரியாமல் நானும் தவிக்கிறேன்


உன் அண்மையை ரசிக்கிறேன் எப்பொழுதும்

உனக்காகப் பிரார்த்திக்கிறேன் சோகங்களைப் பிடுங்க

உந்தன் கரங்களைப் பற்றிக் கொஞ்சிட

உள்ளத்தில் மெல்ல ஆவல் முளைக்கிறது

விலகலே நலன் என்கிறது மனசு

விலகினாலும் இணையத் துடிக்கின்றது அன்பு


என் விலகலில் நீ மௌனிக்கிறாய்

அப்பொழுதெல்லாம் அனலாகின்ற  தவிப்பும் கடலாகின்றது

நீ உதிர்க்கின்ற கண்ணீர்த் துளிகளை

சேமிக்கின்ற மனதுக்குள் எப்பொழுது சுனாமிதானே

பொங்குகின்ற கடலை ஏக்கம் தகர்க்கின்றது

உந்தன் உருவுக்குள்ளே ஒன்றிக்கிடக்கும் என்னைப்

பத்திரப்படுத்து வந்திடுவேன் நானும் உன்னிடத்தில்


ஜன்ஸி கபூர் - 29.08.2020

Kesavadhas

 

ஜன்ஸி கபூர் தன் உளக்கிடக்கையை ஒரு நாடகத் தனிமொழிபோல் உரைக்கும் லாவகம் மிக்க அழகு!

உன் அன்பின் எல்லையை உணரும் வரை தள்ளியே நிற்கிறேன்!

என் விலகலில் நீ மௌனிக்கிறாய்!

அதுதான் புதிரான புதிர்!

என்னை உனக்குள் பத்திரப் படுத்திக் கொள்!

ஆனால் அவள் மனம்...

உன் கண்ணீரால் என்மனக்கடல் உருவானது..

அங்கு எப்பொழுதும் சுனாமியே!

நல்ல உவமங்கள் படிமங்கள் அங்கங்கே விளையாடுகின்றன!

வாழ்த்துகள்!

*****