கன்னத்தில் உரசுகின்ற கருங்கூந்தல் வளைவும்
இன்பத்தில் நனைகின்ற கூர்விழி அழகும்
புன்னகைத் தித்திப்பில் கரைந்தே வழிகையில்
வெண் முத்துக்கள் இதழுக்குள் வழுக்குகின்றதோ
மோகத்தை வருடுகின்ற வெண்சங்கு கழுத்தினில்
மெல்லிய வருடலாய் துளிர்க்கின்ற மச்சமும்
அல்லி பிழிந்தெடுத்த அற்புத தேகத்தினுள்
மென் கீற்றாய் வெட்கத்தின் வாசமும்
மின்சாரம் பாய்ச்சுகின்ற மோகனப் புன்னகையில்
என்னிதயம் அடிக்கடி நழுவி வீழ்கிறதே
உந்தன் இமைக்குள் காந்தத்தின் ஈர்ப்போ
உயிரோடு வருடுகின்ற பேரன்பும் நீ
சந்தனம் வழிகின்ற தேகத்தின் துடிப்பினில்
சர்க்கரையாய் மொய்க்கின்றதே மயக்கிடும் விழிகள்
சாய்கின்றாய் தென்றலில் சரிகின்றேன் நானும்
சரமாக்கி சூடுகின்றாய் அன்பை என்னுள்
தொலைகின்றேன் நானும் தனிமையுடைத்து உன்னுலகில்
அலைகின்றாய் எனக்குள் நீங்காத நினைவாக
கலைகின்றதே சோகங்களும் சலங்கைச் சிரிப்பினில்
கனவுகளும் உயிர்க்கின்றதே எனையும் அணைப்பதனால்
காத்திருக்கிறேன் தினமும் காதலும் மொய்த்திருக்க
கசங்கிடாப் பூவே உந்தன் நுதலினில்
எந்தன் ரேகைதனைப் பதித்திடும் நாளுக்காய்
உறைகின்றேன் ஏக்கத்தினில் காலத்தை எதிர்பார்த்தபடியே
ஜன்ஸி கபூர்