கடையெழு வள்ளல்களுள் மாவீரன் ஓரி
கவர்ந்திட்டான் நல்லாட்சியால் கொல்லிமலை நாட்டினை
கருணையும் அன்பும் மனதின் மொழிகளாம்
களம் ஆண்டான் காண்போர் புகழவே
கொல்லிமலைக் கொற்றவனாம் உவந்தளிக்கும் வள்ளலாம்
இல்லாதவர் இதயங்களை ஆண்ட நல்லோனாம்
வல்வில் ஓரியானார் வில்லின் வாண்மையால்
வில் வீரெனப் புகழ்ந்தாரே வன்பரணரும்
வரலாறும் புகழ்ந்திடும் மன்னனின் பொற்காலத்தை
வாழ்த்துவர் புலவரும் போற்றிடும் புலமைக்கே
வறுமைத் தணலுக்குள் வீழ்ந்திடும் மனங்களை
வாரியணைத்திடும் வள்ளன்மையே புகழ்ந்திடுமே வையகமும்
ஓரியின் கொடைத்திறன் மொழிந்திடும் புறநானூறும்
ஓடையின் இதத்தில் குளிர்ந்திடுவார் சூழ்ந்தோரும்
அரசன் ஆளுகையில் நாடுகள் பதினெட்டும்
வளத்தில் செழித்தன வானும் வணங்கியதே
பரி மொழி அறிந்திட்ட வீரனிவன்
பரிவோடு செலுத்திடுவான் குதிரைகளின் மீதேறி
பற்றும் பாசமும் கொண்ட குணத்துள்;
பற்றியதே வில்வித்தை நுட்பங்களும் திறனோடு
ஒப்புமை இல்லாதவன் பொருளுக்குள் பெயரும்
ஒத்திசைந்தான் வீர தீர ஈரத்தில்
ஓர் நாளில் வண்பரணரும் கண்டாரே
ஓரியின் வேட்டுவத் திறனின் ஆளுகையை
வில்லினை வளைத்தே எய்த அம்பும்
விண்ணில் பறந்து வேழம் வீழ்த்தி
விரைந்து நுழைந்தது புலியின் வாயிலுக்குள்ளும்;
வித்தை யிதுவோ கலைமானும் காட்டுப்பன்றியும்
உடும்பும் விண்ணேறியதே வில்லாளன் வலிமையில்
ஓர் இலக்கிற்கு எறிந்திடும் அம்பும்
துளைத்திடுமே பல பொருளையும் வீரத்தினால்
துதித்திடுவார் வண்பரணரும் வல்வில்லின் பெருமையை
இசைவாணர்கள் இசைத்தனர் ஓரியின் புகழினை
இசையால் மயங்கியே மன்னனும் மகிழ்ந்தானே
இதயமோ பெருமிதத்தில் இரசனையும் மனதினில்
வாரி வழங்கினான் அன்புடன் தானமதை
கொடையாளி ஓரியின்மீது படையெடுத்தனரே அழுக்காற்றால்
கொடும் குணம் கொண்ட காரியும்
கொற்றவன் சேரனும் கொன்றொழிக்கும் தீவிரத்தில்
நட்டனரே ஓரியின் உயிரை மண்ணுக்குள்
போர் வல்லமை கொண்ட காரியின்
போராற்றல் படையினரும் வென்றனரே ஓரியை
போர்க்களத்தில் வீழ்ந்தாலும் மன்னன் ஓரி
போற்றப்படுகின்றான் மக்கள் மனங்களை வென்றவனாகி
அபார ஞானத்தில் பாண்டவர் நகுலனும்
அயர்வில்லாத விஜயனுக்கும் இணையாகிப் போற்றப்பட
அகிலத்தின் பார்வையும் அண்ணார்ந்தே பார்த்திடுமே
அதிசய வீரனானே ஆதன் ஓரியை
ஜன்ஸி கபூர் - 16.09.2020