About Me

2020/11/03

வாழ்க்கை எனும் வரம்




1. வாழ்க்கை எனும் வரம்

**************************** 
இறப்பும் பிறப்புமென்ற 
.......இறைவனின் நியதியில்/
இயற்கையின் வசத்தில் 
......இரம்மியப் பொழுதுகள்/

இரசிக்கின்ற தரிசனங்கள் 
......இழையும் நினைவுகளில்/
இளமையின் வனப்பு 
......இன்பத்தின் உயிர்ப்பே/

இசைந்திடும் வாழ்வில் 
......இன்னல்களை நீக்க/
இணைகின்ற உறவும் 
......இன்பமே மனதிற்கே/

இலக்கதை வகுத்தே 
......இயங்கிடும் ஆற்றலால்/
இனித்திடுமே வருங்காலமும் 
.......இவ்வுலகத் தடத்தினில்/

பருவங்கள் விரிகையில் 
......பரவசம் உணர்வுகளிற்கே/
படர்கின்ற கனவுகள் 
......பற்றுமே வெற்றியை/

பகுத்தறிவுச் சிந்தனையால் 
.....பாரதும் புகழ/
பண்புகளால் செழித்திடுவோம் 
......பக்குவமாக வளர்ந்திடுவோம்/ 

ஆறாம் விரலாய் 
.....அறிவினைப் பொருத்தி/
அகத்தினில் அன்பினை 
.....அழகால் நிறைத்து/

அன்பான உறவுகளால் 
.....ஆனந்தமும் பெற்று/
அருமையாக வாழ்கின்ற 
......வாழ்க்கையும் வரமே/

ஜன்ஸி கபூர் - 3.11.2020


 


பூஞ்சோலை


செவ்விதழ் விரித்தே 

.......செதுக்கும் குரலினில்/

சொக்கித்தான் போனேனே 

......என்றன் சோலைக்கிளியே/


பக்கத்தில் உனையிருத்தி 

........வாழ்கின்ற வாழ்வினில்/

தினமும் காதல் 

........வாசம் வீசுதே/


ஜன்ஸி கபூர் - 7.11.2020

------------------------------
இணைக்கின்றேன் அன்பே உன்னை வாழ்வில்
இதயத்தில் மகிழ்வேற்றி உலாவுகின்றேன் நிதம்
இன்னலும் தடைகளும் புயலென மோதுகையில்
வலிக்குள் மூழ்காமல் காக்கின்றாய் என்னையே

ஜன்ஸி கபூர் - 13.11.2020
-------------------------------------------------------------- 

5.  நினைவெல்லாம் நீயே
************************** 
காலம் ஓடிக்கொண்டேதான் இன்னும் இருக்கின்றது/
ஆனால் நீயோ என்னிலிருந்து தொலைவாகின்றாய்/

தினமும் உன்னை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்/
விரல்களால் என் கண்களைக் குத்துகின்றாய்/

வலிதான என் வலி புரிந்துமா/ 
மௌன முடிச்சுக்குள் ஒளிந்து கொள்கின்றாய்/

தவிப்புக்கள் நீள்கின்றன உனை நோக்கியதாக/
நீயோ தரிசனப் பாதைகளை மறைக்கின்றாய்/

என் கண்ணீரும் தீண்டாமல் காக்கின்றேன்/
விழிக்குள் விம்பமாக மலர்ந்திருக்கின்ற உன்னை/

இருந்தும் காத்திருக்கின்றேன் நீ வருவாயென/
உனதான நினைவுகளைப் பத்திரமாகச் சேமித்தபடி/

ஜன்ஸி கபூர் - 14.11.2020
-------------------------------------------------------- 
6. பண்பாட்டு வாழ்க்கை
***********************
பண்போடு வாழ்ந்திடும் வாழ்வில் என்றுமே/
இன்பமே பெருகும் மனமது மகிழும்/
உறவும் ஊரும் இணைந்தே வாழ்த்தும்/
வரலாறும் நம்மை இணைத்தே பேசும்/

ஜன்ஸி கபூர் - 16.11.2020
-------------------------------------------------------- 




நம்பிக்கை வாழ்வு
-------------------------
நம்பிக்கை கொள்வோர் வாழ்வில் தோற்கார்/
தெம்புடனே ஏற்பார் வாழ்வியல் போராட்டங்களை/
துன்பமும் தடைகளும் தகர்த்தே வெல்வார்/
அன்பும் அறமும் கொண்டே வாழ்ந்திடுவார்/
ஜன்ஸி கபூர்
----------------------------------------------------------------------------------


Azka Sathath
வாழ்ந்திடுவார் என்றுமே சுக வாழ்வினை//
செய்திடுவார் நற் செயல்கள் பல//
வென்றிடுவார் இலக்கு வழிப் பயணங்களை//
கண்டிடுவார் தினம் அன்பான உறவுகளை//
அஸ்கா சதாத்
--------------------------------------------------------------------------------------------------------


நட்பின் பயணம்


1.நட்பின் பயணம்

****************** 

அணைபோடாத தூய அன்பு/

என்னிழலுடன் துணையாகி வருகின்றது/

உணர்வுகளுடன் ஒத்திசைகின்ற பிம்பங்களாகி/

தொடர்கின்றதே  எந்தன் வாழ்வினில்/


ஜன்ஸி கபூர் - 03.11.2020

----------------------------------------- 

2. கருங் காக்கைகள்/
   சிறகு விரித்துப் பறக்கின்றன/
   மழை மேகங்கள்/

ஜன்ஸி கபூர் - 08.11.2020
 


2020/11/02

முத்தமிழ்ச்சாரல்

1. வளரட்டும் - மலரட்டும்

-------------------------------------------

வளரட்டும் மனிதநேயமே வாட்டங்கள் குறையட்டும்/

வனப்புகள் படர்ந்திடும் வாழ்வும் தழுவட்டும்/

குற்றங்கள் கரைந்தே  குதூகலமும் ஆளட்டும்/

குன்றா அன்பும்  குவலயமெங்கும் மலரட்டும்/


2. அலை பாயும் எண்ணங்கள்

நிலையில்லா மனதில்  அலைகின்றதே உணர்வுகள்/

நீள்கின்றதே தவிப்பும் நிம்மதியும் தொலைகின்றதே/

தேடல் வாழ்வுக்குள்  தேங்கும் ஆசைகளால்/

நகர்கின்ற பொழுதெல்லாம் துடிக்கின்றதே எதிர்பார்ப்புக்கள்/

நினைவுகளின் வேட்கைக்குள்  சிதறிடும் சிந்தையும்/

கவனமதைக் கலைத்தே தடுமாறுதே முடிவுமின்றி/


3. என் மன வானில்
*********************
என் மன வானின் ஒளியே/
நிலவெனச் சிரிக்கின்றாய் நினைவுகளில் உயிர்க்கின்றாய்/

நீள்விழிதனில் சூடிடும் காதலால் அணைத்தே/
செதுக்கிறாய் என்னுள் உன்றன் புன்னகையை/

செந்நிறக் கன்னமதில் கரைத்திடும் நாணத்தில்/
நனைந்தே அணைக்கின்றாய் என்னை இதமாக/

  

5. சிங்கமாய் நடை போடு
 
ஆற்றல்களை விரல்களில் அணிந்தே நீயும்/
ஆற்றிடு செயல்களை அகிலமும் வியந்திட/

தோற்றிடும் தோல்விகளை ஏற்றிடு அனுபவமாக/
வெற்றியின் நிழலினில் வல்லமையாய் பூத்திடு/

ஏற்றிடு துணிவினை வீசிடு அச்சத்தை/
போற்றுமே பாருமே  சிங்கமாக வீற்றிடு/
 


6. தேடலிலே வெற்றி உண்டு
**************************** 
அறிவியல் ஆள்கின்ற  அற்புத வாழ்வினில்/
ஆற்றல்களின் செழிப்பினில்  ஆளுமை மலருமே/

இயற்கைத் தளத்தில்  இசைகின்ற செயல்கள்/
வெற்றி பெறவே  வேண்டுமே தேடல்கள்/
 
உதிர்கின்ற பொழுதினை உரமாக்கும் சிந்தனைகள்/
ஊட்டமே எண்ணங்களுக்கு  ஊக்கமே வலிமைக்கும்/



7. மாறாத காலங்கள்
---------------------------------
வாலிபம் வசப்பட்ட வண்ணக் கனவுகள்/
விழிகளில் வீழ்கின்றதே இன்னும் பிம்பமாக/

விரிந்த ஆசைகளைக் கருக்காத காலங்கள்/
இன்னும் பத்திரப்படுத்துகின்றன அகத்தின் சேமிப்புக்களை/

நவீனத் தேடல் தொடுகின்ற மாற்றங்களைக்/
கடந்தே பயணிக்கின்றது எனதான அனுபவங்கள்/


8. புன்னகை பூக்கட்டும்
--------------------------------------
விரிகின்ற விடியலுக்குள் சிரிக்கட்டும் நெஞ்சங்கள்/
புவியின் செழிப்பினில் இயற்கையும் துளிர்க்கட்டும்/

மனிதங்களின் மலர்ச்சிக்குள் வளரட்டும் சமத்துவம்/
இனிமைத் தழுவலில் மனமது நிறையட்டும்/

ஓற்றுமைச் சாரலில் இணையட்டும் இதயங்கள்/
வறுமையும் நீங்கியே வாழ்வது புன்னகைக்கட்டும்/

9. முகிலுக்கும் அழகுண்டு
************************** 
விண் கடலின் பொங்கும் நுரைகளோ/
கண்ணுக்குள் மொய்க்கின்றனவே மேக முத்துக்களாகி/

சிறகினை விரித்தே பறக்கின்றதோ வெண்பட்சிகள்/ 
பதுங்குகின்றேன் நானும் பஞ்சுப் போர்வைக்குள்/ 

காற்றில் நீந்திடும்  வெள்ளிப் பளிங்குகளை/
விழிகளில் ஏந்தியே  தினமும் ரசிக்கின்றேன்/


10கோமாளிகள் கூடாரம்
---------------------------------
அறியாமையை அகமேற்றி அறிவென வாதிட்டு/
ஆற்றல்களை வீணாக்கும் அநாகரிக மாந்தர்கள்/

விரித்திடும் வலையில் வீழ்கின்ற சமூகமும்/
இருக்கின்ற வரையில் இப்புவியின் துடிப்புக்களின்/

பொய்மைக்குள் மெய்தனை பொருத்தியே மகிழ்ந்து/
ஏமாளிகளாய் அணிவகுப்பார் கோமாளிக் கூடாரத்தில்/


12. தீப ஒளியின் தீபாவளி
************************ 
திக்கெங்கும் சுடர்கள் 
........தித்திப்பால் ஒளிர/
தீப ஒளியில் 
........தீமைகளும் அகல/

மத்தாப்புச் சிரிப்பினில் 
.......மழலைகள் மகிழ்ந்திருக்க/
மனதெல்லாம் நல்லெண்ணம் 
......மங்களமாகப் பூத்திட/

உறவுகளின் உற்சாகம் 
........உளங்களைத் தழுவிட/
இல்லங்கள் தோறும் 
.......இனிக்கிறதே தீபாவளி/

13. வாழ்க்கைப் போராட்டம்
*************************** 
இலக்குகளை நோக்கிய 
.......இடைவிடாப் பயணமதில்/
இடைக்கிடையே முகம்காட்டும் 
......இடர்த் தடைகள்/

இன்னல்களின் பின்னல்கள் 
.....இதயமதைச் சூள்கையில்/
வாழ்க்கைப் போராட்டம் 
.....வருத்துமே மனதை/

வரும் சவால்களை 
.....வலிமையுடன் போராடுகையில்/
வசந்தத்தின் நுழைவாயில் 
......வரவேற்குமே நம்மையும்/



14. பூவே பூச்சூடவா
--------------------------
என் வாழ்வில் வரமாக இணைந்தவளே
பிரிவின் வலிக்குள் துடிக்கின்றேன் நீயின்றி
தனிமையின் இம்சைக்குள் தவிப்புக்கள் நீள்கின்றதே
துடிக்கின்ற நினைவுக்குள்ளே துயில்கின்றேன் நிதமும் 
நெடுந்தொலைவோ நீயின்று விழியிரண்டும் கண்ணீரில்
வாடுகின்றேன் அன்பே பூவே பூச்சூடவா

15. கற்றது கையளவு
******************* 
அறிவுப் பெருக்கம் 
அண்டத்தையே துளைத்திட/

அகிலமும் மாறும் 
அடிக்கடி நவீனத்தால்/

அறியக் கற்றது 
கையளவுதானே நமக்கும்/

வாழ்க்கையைக் கற்றிடச்
சொற்கள்தான் போதுமோ/

அறியாததை அறிந்திடவே
அனுபவங்களைத் தேடிடுவோம்/



16. அன்றும் இன்றும்
****************** 
இயற்கைக்குள் உயிர்த்த இனிமை வாழ்க்கைக்குள்/
இணைந்தோம் அன்று இன்பமும் கோடியே/

இன்றோ சுமக்கின்றோம் இயந்திர உலகினை/
இடர்களும் தடைகளும் இன்னலும் நிழலாக/

அறிவுப் புரட்சியால் அலைகின்றோம் நவீனத்துள்/
ஓய்வற்ற செயற்கைக்குள் ஓடித் திரிகின்றோம்/


17. உயிர் காக்க உதவிடுவோம்
****************************** 
காற்றின் சீற்றமும் கார்முகில் எழுச்சியும்/
கன மழையென ஊற்றும் ஊரெங்கும்/

இயற்கை இடரும் இன்னலென குவிகையில்/
வலியின் சுமையில் மனமது துடிக்கும்/

வழியும் கண்ணீரைத் துடைப்போம் அன்போடு/
கருணை கொண்டே காத்திடுவோம் உயிர்களை/


18.அலைபாயும் அலைபேசி
***************************** 
விஞ்ஞானத்தின் விந்தையால் தேடலுக்குள் நாமிணைய/
விரல்களும் பற்றிடும் அலைபேசியும் அருமையே/

வலைத்தளத்தின் வசீகரத்தில் பொழுதெல்லாம் கழிகையில்/
நிலைகுலையுமே நிம்மதியும் வலைவீசும் வம்புகளும்/

உறவுகளின் அருகாமை தொலைவுக்குள் தொலைகையில்/
உணர்வுகளின் பரிமாற்றம் ஊசலாடுதே அலைகளுக்குள்/


19. கனவுகள் கரை சேரட்டும்
--------------------------------------- 
போராட்ட வாழ்வில் கோர்க்கின்ற கனவுகள்/
வேகின்றதே தினமும் உயிர்த்திட வழியின்றி/
நெஞ்சத்தில் மோதுகின்ற ஆசைகளைப் பற்றிட/
ஏங்குதே மனமும் ஏற்காயோ விதியே/
பொங்கும் அலைகளைத் தாங்கும் வாழ்விலே/
துளிர்க்கும் கனவுகள் கரை சேரட்டும்/

ஜன்ஸி கபூர் - 27.11.2020