1. வளரட்டும் - மலரட்டும்
-------------------------------------------
வளரட்டும் மனிதநேயமே வாட்டங்கள் குறையட்டும்/
வனப்புகள் படர்ந்திடும் வாழ்வும் தழுவட்டும்/
குற்றங்கள் கரைந்தே குதூகலமும் ஆளட்டும்/
குன்றா அன்பும் குவலயமெங்கும் மலரட்டும்/
2. அலை பாயும் எண்ணங்கள்
நிலையில்லா மனதில் அலைகின்றதே உணர்வுகள்/
நீள்கின்றதே தவிப்பும் நிம்மதியும் தொலைகின்றதே/
தேடல் வாழ்வுக்குள் தேங்கும் ஆசைகளால்/
நகர்கின்ற பொழுதெல்லாம் துடிக்கின்றதே எதிர்பார்ப்புக்கள்/
நினைவுகளின் வேட்கைக்குள் சிதறிடும் சிந்தையும்/
கவனமதைக் கலைத்தே தடுமாறுதே முடிவுமின்றி/
3. என் மன வானில்
*********************
என் மன வானின் ஒளியே/
நிலவெனச் சிரிக்கின்றாய் நினைவுகளில் உயிர்க்கின்றாய்/
நீள்விழிதனில் சூடிடும் காதலால் அணைத்தே/
செதுக்கிறாய் என்னுள் உன்றன் புன்னகையை/
செந்நிறக் கன்னமதில் கரைத்திடும் நாணத்தில்/
நனைந்தே அணைக்கின்றாய் என்னை இதமாக/
5. சிங்கமாய் நடை போடு
ஆற்றல்களை விரல்களில் அணிந்தே நீயும்/
ஆற்றிடு செயல்களை அகிலமும் வியந்திட/
தோற்றிடும் தோல்விகளை ஏற்றிடு அனுபவமாக/
வெற்றியின் நிழலினில் வல்லமையாய் பூத்திடு/
ஏற்றிடு துணிவினை வீசிடு அச்சத்தை/
போற்றுமே பாருமே சிங்கமாக வீற்றிடு/
6. தேடலிலே வெற்றி உண்டு
****************************
அறிவியல் ஆள்கின்ற அற்புத வாழ்வினில்/
ஆற்றல்களின் செழிப்பினில் ஆளுமை மலருமே/
இயற்கைத் தளத்தில் இசைகின்ற செயல்கள்/
வெற்றி பெறவே வேண்டுமே தேடல்கள்/
உதிர்கின்ற பொழுதினை உரமாக்கும் சிந்தனைகள்/
ஊட்டமே எண்ணங்களுக்கு ஊக்கமே வலிமைக்கும்/
7. மாறாத காலங்கள்
---------------------------------
வாலிபம் வசப்பட்ட வண்ணக் கனவுகள்/
விழிகளில் வீழ்கின்றதே இன்னும் பிம்பமாக/
விரிந்த ஆசைகளைக் கருக்காத காலங்கள்/
இன்னும் பத்திரப்படுத்துகின்றன அகத்தின் சேமிப்புக்களை/
நவீனத் தேடல் தொடுகின்ற மாற்றங்களைக்/
கடந்தே பயணிக்கின்றது எனதான அனுபவங்கள்/
8. புன்னகை பூக்கட்டும்
--------------------------------------
விரிகின்ற விடியலுக்குள் சிரிக்கட்டும் நெஞ்சங்கள்/
புவியின் செழிப்பினில் இயற்கையும் துளிர்க்கட்டும்/
மனிதங்களின் மலர்ச்சிக்குள் வளரட்டும் சமத்துவம்/
இனிமைத் தழுவலில் மனமது நிறையட்டும்/
ஓற்றுமைச் சாரலில் இணையட்டும் இதயங்கள்/
வறுமையும் நீங்கியே வாழ்வது புன்னகைக்கட்டும்/
9. முகிலுக்கும் அழகுண்டு
**************************
விண் கடலின் பொங்கும் நுரைகளோ/
கண்ணுக்குள் மொய்க்கின்றனவே மேக முத்துக்களாகி/
சிறகினை விரித்தே பறக்கின்றதோ வெண்பட்சிகள்/
பதுங்குகின்றேன் நானும் பஞ்சுப் போர்வைக்குள்/
காற்றில் நீந்திடும் வெள்ளிப் பளிங்குகளை/
விழிகளில் ஏந்தியே தினமும் ரசிக்கின்றேன்/
10கோமாளிகள் கூடாரம்
---------------------------------
அறியாமையை அகமேற்றி அறிவென வாதிட்டு/
ஆற்றல்களை வீணாக்கும் அநாகரிக மாந்தர்கள்/
விரித்திடும் வலையில் வீழ்கின்ற சமூகமும்/
இருக்கின்ற வரையில் இப்புவியின் துடிப்புக்களின்/
பொய்மைக்குள் மெய்தனை பொருத்தியே மகிழ்ந்து/
ஏமாளிகளாய் அணிவகுப்பார் கோமாளிக் கூடாரத்தில்/
12. தீப ஒளியின் தீபாவளி
************************
திக்கெங்கும் சுடர்கள்
........தித்திப்பால் ஒளிர/
தீப ஒளியில்
........தீமைகளும் அகல/
மத்தாப்புச் சிரிப்பினில்
.......மழலைகள் மகிழ்ந்திருக்க/
மனதெல்லாம் நல்லெண்ணம்
......மங்களமாகப் பூத்திட/
உறவுகளின் உற்சாகம்
........உளங்களைத் தழுவிட/
இல்லங்கள் தோறும்
.......இனிக்கிறதே தீபாவளி/
13. வாழ்க்கைப் போராட்டம்
***************************
இலக்குகளை நோக்கிய
.......இடைவிடாப் பயணமதில்/
இடைக்கிடையே முகம்காட்டும்
......இடர்த் தடைகள்/
இன்னல்களின் பின்னல்கள்
.....இதயமதைச் சூள்கையில்/
வாழ்க்கைப் போராட்டம்
.....வருத்துமே மனதை/
வரும் சவால்களை
.....வலிமையுடன் போராடுகையில்/
வசந்தத்தின் நுழைவாயில்
......வரவேற்குமே நம்மையும்/
14. பூவே பூச்சூடவா
--------------------------
என் வாழ்வில் வரமாக இணைந்தவளே
பிரிவின் வலிக்குள் துடிக்கின்றேன் நீயின்றி
தனிமையின் இம்சைக்குள் தவிப்புக்கள் நீள்கின்றதே
துடிக்கின்ற நினைவுக்குள்ளே துயில்கின்றேன் நிதமும்
நெடுந்தொலைவோ நீயின்று விழியிரண்டும் கண்ணீரில்
வாடுகின்றேன் அன்பே பூவே பூச்சூடவா
15. கற்றது கையளவு
*******************
அறிவுப் பெருக்கம்
அண்டத்தையே துளைத்திட/
அகிலமும் மாறும்
அடிக்கடி நவீனத்தால்/
அறியக் கற்றது
கையளவுதானே நமக்கும்/
வாழ்க்கையைக் கற்றிடச்
சொற்கள்தான் போதுமோ/
அறியாததை அறிந்திடவே
அனுபவங்களைத் தேடிடுவோம்/
16. அன்றும் இன்றும்
******************
இயற்கைக்குள் உயிர்த்த இனிமை வாழ்க்கைக்குள்/
இணைந்தோம் அன்று இன்பமும் கோடியே/
இன்றோ சுமக்கின்றோம் இயந்திர உலகினை/
இடர்களும் தடைகளும் இன்னலும் நிழலாக/
அறிவுப் புரட்சியால் அலைகின்றோம் நவீனத்துள்/
ஓய்வற்ற செயற்கைக்குள் ஓடித் திரிகின்றோம்/
17. உயிர் காக்க உதவிடுவோம்
******************************
காற்றின் சீற்றமும் கார்முகில் எழுச்சியும்/
கன மழையென ஊற்றும் ஊரெங்கும்/
இயற்கை இடரும் இன்னலென குவிகையில்/
வலியின் சுமையில் மனமது துடிக்கும்/
வழியும் கண்ணீரைத் துடைப்போம் அன்போடு/
கருணை கொண்டே காத்திடுவோம் உயிர்களை/
18.அலைபாயும் அலைபேசி
*****************************
விஞ்ஞானத்தின் விந்தையால் தேடலுக்குள் நாமிணைய/
விரல்களும் பற்றிடும் அலைபேசியும் அருமையே/
வலைத்தளத்தின் வசீகரத்தில் பொழுதெல்லாம் கழிகையில்/
நிலைகுலையுமே நிம்மதியும் வலைவீசும் வம்புகளும்/
உறவுகளின் அருகாமை தொலைவுக்குள் தொலைகையில்/
உணர்வுகளின் பரிமாற்றம் ஊசலாடுதே அலைகளுக்குள்/
19. கனவுகள் கரை சேரட்டும்
---------------------------------------
போராட்ட வாழ்வில் கோர்க்கின்ற கனவுகள்/
வேகின்றதே தினமும் உயிர்த்திட வழியின்றி/
நெஞ்சத்தில் மோதுகின்ற ஆசைகளைப் பற்றிட/
ஏங்குதே மனமும் ஏற்காயோ விதியே/
பொங்கும் அலைகளைத் தாங்கும் வாழ்விலே/
துளிர்க்கும் கனவுகள் கரை சேரட்டும்/
ஜன்ஸி கபூர் - 27.11.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!