About Me

2020/12/21

விவசாயம் தலைமுறை அறியுமா

 



துளிர்க்கின்ற பசுமைக்குள் உயிர்க்கின்ற வாழ்வினை/
அளிக்கின்ற விவசாயம் அறியவேண்டும் தலைமுறை/

சேற்றில் புதைக்கின்ற காலடித் தடத்தில்/
வீற்றிருக்கின்ற உழைப்பின் வாசம் உன்னதமே/

ஏர் கண்டறியா ஏடுகளைப் புரட்டுகையில்/
ஏற்படுமோ அனுபவங்கள் ஏற்றமுண்டோ பொழுதுகளில்/

கரமும் ஏந்துகின்ற மண்வெட்டி புரட்டுகின்ற/
உரத்தின் சேர்க்கைக்குள்ளே உயர்வின் ஈரம்/

தொலைவில் நின்றே தொலைக்கின்ற உழைப்பை/
கலையாக்கிக் கற்பிப்பதே காலத்தின் சிறப்பு/

ஜன்ஸி கபூர் - 21.12.2020
 


வாழ்க்கை

 



படக்கவிதை!
 வாழ்க்கை 
************* 
காற்றின் கரம் மெலிதாகப் பற்ற/
கயிற்றின் தடத்தினில் வாழ்வும் நகருது/
பயின்ற அனுபவம் காட்டும் பாதையினில்/
வறுமைச் சுமையினை இறக்கி வைக்கின்றேன்/
அந்தரத்தில் தள்ளாடும் வித்தையால் விழிநீரும்/
வற்றுகின்றதே வயிற்றுப்பசியினை நிதமும் தணிக்கையிலே/

ஜன்ஸி கபூர் - 21.12.2020
 


மனம் போகும் போக்கிலே



 காணும் யாவும் வேண்டும் என்றே/

களிக்கும் பேராசை கலியின் வேட்கையே/

பலிப்பார் அடுத்தார் பயனற்ற செயல்களால்/

வலியினைச் சூடி வாழ்தல் நன்றோ/


தன்னம்பிக்கை இல்லாத் தனித்த பயணம்/

வென்றெடுக்குமோ தடைகளை வெகுமதியும் தந்திடுமோ/ 

மதிப்பினை இழக்கின்ற மதியின் வேகம்/

தகுதியைக் குறைக்கும் தடுமாறும் நிம்மதியும்/


இலக்கில்லா வாழ்வில் இல்லையே ஈடேற்றம்/

இரவெனவே நீளும் விடிவில்லா எதிர்காலமும்/

மனம் போகும் போக்கிலே வாழ்தல்/

மாறிடல் வேண்டும் மாண்போடு வாழ்ந்திடவே/


வெற்றிகளை விரட்டி வெறுமையினைச் சேர்த்தே/

குற்றுயிராகும் உணர்வோடு குடியிருக்கும் தேகம்/

குரங்காகித் தாவும் உள்ளத்தின் குடியிருப்பே/

குறிக்கோள் தீட்டி குதூகலிப்போம் ஆற்றல்களால்/


ஜன்ஸி கபூர் - 21.12.2020

 



 

2020/12/20

உனது உறவாகி வந்தேன்


 

உணர்வினில் உனைக் கோர்த்தே மகிழ்ந்தேனே/ 

மகிழ்ந்தேனே தினமும் உன் தரிசனத்தால்/


தரிசனத்தால் சிரித்தனவே நம் காதலும்/

காதலும் களித்ததே இராக் கனாக்களில்/


கனாக்களின் நீட்சிக்குள் மறந்தேனே பிரிவினை/

பிரிவினை வென்ற அன்பும் உறவுக்குள்ளே/


ஜன்ஸி கபூர் - 21.12.2020