2021/04/13
விதியை மதியால் வெல்வோம்
---------------------------------------------------------------------------------------
வீரமும் ஆற்றலும் விளைந்திடும் தேகம்/
கோரமாகி வீதியினில் விதைக்கப்படுகிறதே காயங்களால்/
விவேகமில்லா வேகம் விடுக்கின்ற அழைப்பால்/
விபத்தின் தடத்தில் வீழ்கின்றதே உயிரும்/
சிந்தனைச் சிதறலின்றி இலக்கில் சென்றிட/
சிறப்பாகக் கடைப்பிடிப்போம் சாலை விதிகளை/
பாதைக்குள் மோதும் விதியின் இடர்களையும்/
பக்குவமாக நீக்குமே மதியின் விழிப்புணர்வும்/
ஜன்ஸி கபூர் - 24.12.2020
தந்தையின் தாலாட்டு
அன்புத் தூளியிலே
அணைத்த கரங்களுக்குள்/
தாய்மையைக் கண்டேனே
தந்தையும் தாலாட்டுகையில்/
இரவின் மடியினில்
இதமான துயிலினை/
இரசித்த நினைவுகள்
இன்பத்தின் உயிர்ப்பில்/
வீரத்தின் சாயலை
நாமத்தில் நினைவூட்டி/
விருப்புடன் கற்றிடவே
விதையுமானார் வாழ்வினிலே/
பாசத்தை ஒலியாக்கி
பாதைக்குள் வழிகாட்ட/
சிந்திய வாசனை
குன்றவில்லையே நெஞ்சுக்குள்/
ஜன்ஸி கபூர் - 18.12.2020
திசை மாறிய பறவைகள்
விழிகளின் மொழியினில் மலர்ந்த காதல்
விதியின் சிறையினில் முடங்கியதே தானாய்
சதி செய்ததோ எதிர்பார்ப்பும் நம்பிக்கைகளும்
சகதிக்குள் மூழ்கியதே எதிர்கால வனப்பும்
புரிந்துணர்வு காணாத துணைகளின் கரங்கள்
வரிகளில் எழுதின விவாகரத்தெனும் முடிவினை
அடுத்தவர் பார்வையில் ஆயிரம் குற்றங்கள்
அனலின் பிம்பத்தில் இல்லறத்தின் சொப்பனங்கள்
ஓர் கூட்டின் அன்றில் பறவைகள்
திசை மாறின உறவும் அறுந்ததனால்
வசை பாடக் காத்திருப்போர் ஏளனத்தில்
இசைந்ததுவே இணை பிரிந்த இதயங்கள்
பிரிவின் எல்லைகளைத் தொடுகின்ற முரண்பாடுகள்
பிள்ளைகளின் வனப்பினையும் வருத்துமே நிதமும்
அலைகின்ற அல்லலுக்குள் அகப்படுகின்ற ஊடல்கள்
சிதைகின்றனவே சிறப்பற்ற வாழ்வின் முடிவினாலே
ஜன்ஸி கபூர் - 22.12.2020
Subscribe to:
Posts (Atom)