About Me

2021/04/13

நீயும் நானும்


அள்ளிச் செருகிய ஆசைகளோ விழிகளுக்குள்/
அன்பின் தித்திப்புக்குள் அடங்கினோம் சுகமாக/

அலைகளின் அணைப்புக்குள் தித்திக்கின்றதே காதலும்/
அன்பே சாய்கின்றேன் உன் மடியினில்/

மெலிதான பூங்காற்றாகி மேனி தழுவுகையில்/
அந்திச்சிவப்பும் மறைகின்றதே உன் வெட்கத்துக்குள்/

 ஜன்ஸி கபூர் - 19.11.2020

ஏதோ நினைவுகள்

 


உதிர்கின்ற ஒவ்வொரு நாட்களிலும் வீழுகின்றதே/

உணர்வுகளுடன் கலந்துவிட்ட இனிய நினைவுகள்/

பள்ளி நாட்களைப் பகிர்ந்த தோழமைகள்/
உள்ளத்தின் சேமிப்பினில் சுகமான சுவடுகள்தானே/

கண்ணீர் ஈரத்தினை ஒற்றியெடுக்கின்ற அன்பும்/
அடங்கிக் கிடந்த தருணங்களும் அழகானவை/

மனதைச் சுவைக்கின்ற ஒவ்வொரு நினைவுகளையும்/
தனிமைக்குள் திறந்தே உயிர்க்கின்றேன் தினமும்/

அஸ்கா சதாத் - 14.11.2020

தர்மம் தலை காக்கும்

 

முதுமையும் தாய்மையுமென முகங்காட்டும் யாசகங்கள்/

முகவரியாம் வறுமைக்குள் முக்காடிடும் அவலங்கள்/

இரந்திடும் கரங்களுக்குள் இரக்கமே உணவளிக்கும்/

இதயத்தில் அன்புள்ளோர் இன்னலைத் துடைத்திடுவார்/


ஏழ்மைத் தணலில் ஏக்கங்கள் புகைய/

ஏனிந்த விதியோ ஏற்றமில்லா வாழ்வுக்குள்/

ஏழை எளியோர் ஏந்தும் கரங்களுக்கு/

உதவிகள் செய்வோர் உயர்ந்தவர்களே என்றும்/


நவீனத் தேடலுக்குள் நகர்ந்திடும் உலகில்/

நடுங்கும் தேகங்கள் நடைபாதை ஓரங்களில்/

நாளும் பொழுதுமாக  நாடுவார் தர்மத்திற்காக/  

நல்மனங்களின் கருணையும் நற்செயலாகப் பூத்திடுமே/


ஈகையளிப்போர் என்றுமே  ஈடேற்றமே காண்பார்/

ஈருல மாண்பும்  ஈட்டிடுவார் சிறந்தே/

உயிர்களைப் பேணும்  உன்னதமாம் தர்மம்/

உம்மையும் என்னையும்  உயர்வாய்க் காத்திடுமே/


ஜன்ஸி கபூர் - 8.11.2020

 

தேடலின் துவக்கம்

 

ஒவ்வொரு தேடலின் துவக்கமும் என்னிருப்புக்கான/

அடையாளமாக நீள்கின்றன எதிர்பார்ப்புக்களை ஏந்தியபடி/

துளிர்க்கும் விடியலுக்குள் தடம்பதிக்கின்றேன் ஆர்வமாக/

வீழ்கின்ற அனுபவங்களையும் சேமிக்கின்றேன் முன்னேற/


அன்புக்குள் காதலும் மொழிக்குள் கவிதையும்/

உழைப்புக்குள் செல்வமுமென தேடல் விரிகின்றது/

ஒவ்வொன்றின் முடிவும் பிறிதொன்றின் ஆரம்பமாக/

முடிவுறுத்தப்படாத தேவைகளின் பன்முகங்கள் தொடர்கின்றன/


ஜன்ஸி கபூர் - 8.11.2020