About Me

2021/04/13

"தகவல் அறியும் உரிமைச் சட்டம்"

 

மக்களின் வரிப்பணத்தினை தனது மிகப் பெரிய வளமாக, பலமாகக் கருதுகின்ற அரசின் செயற்பாடுகள் குறித்து அறிவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கான பிரதான வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணப்படுகின்றது. இது ஜனநாயகம் சார்பான மக்களின் அடிப்படை உரிமையாகும்.

சுவீடன் நாட்டிலேயே முதன் முதலில் பிரஜைகள் தகவலறியும் உரிமையை அனுபவிக்க வழி ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பின் 22 ஆவது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவரப்பட்டதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இலங்கையிலும், 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டு 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் செயல்படுத்தப்பட்டது. தகவலறியும் சட்டத்தினை அமுல்படுத்தும் பொறுப்பு வெகுசன ஊடக அமைச்சிற்கு உரியதாகும். இலங்கையின் ஊடக கலாசாரத்தில் இச்சட்டம் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் தகவல் அலுவலருக்கு, தேவைப்படும் தகவல் பற்றிய விபரங்களை எழுத்திலே கோருதல் வேண்டும். தகவல் அலுவலர் இயன்றளவு விரைவாகவும், 14 வேலை நாட்களுக்கு மேற்படாமலும், கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும். கோரிக்கையானது நிராகரிக்க முடிவு செய்தால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரசைக்கு அறிவிக்க வேண்டும்.

இதன் மூலமாக பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணி வளர்க்கலாம். மக்கள் ஊழலை எதிர்த்து நிற்கும் பொறிமுறையை தாபிக்கலாம். பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஊடாக மக்கள் முழுமையாகப் பங்கேற்கக் கூடிய ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும்.

தகவலறியும் சட்டத்தினைப் பயன்படுத்தி அரச நிறுவனம் ஒன்றிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என ஒருவர் எதிர்பார்க்க முடியாது.

அரசின் நிதி மற்றும் பணிகள் தொடர்பாக கேள்வி கேட்கின்ற உரிமை இதன் மூலமாக சாதாரண பிரசைக்கும் கிடைக்கின்றது. இவ்வாறான அவதானப் பார்வைகளின் வீச்சு கூரியதாக இருக்கின்ற பட்சத்தில் தவறுகள் குறைவடைந்து மக்கள் திருப்தியான சேவைதனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புண்டாகும் என்பது வெள்ளிடைமலையாகும்.

ஜன்ஸி கபூர் - 23.12.2020
 

வாசிப்பை நேசிப்போம்


 
மானிட வாழ்வின் அறியாமை எனும் இருளினை அகற்றிட கிடைக்கின்ற அற்புத ஒளிச்சுடரே வாசிப்பாகும். வாசிப்பின் மூலமாக நமது பகுத்தறிவும் ஆற்றலும் வளர்கின்றது. சிறந்த வாழ்வியலைக் கற்றுக் கொள்வதற்கான பாதைகளும் திறக்கின்றன. அறிவை வளர்ப்பதற்கான கட்டமைப்பாக கல்வி காணப்படுகின்றது. அதனாற்றான் "இளமையிற்கல்வி சிலையிலெழுத்து" என பழமொழி வாயிலாக அனுபவம் தொகுக்கப்பட்டுள்ளது.

"ஓதுவீராக" என்பது புனித அல்குர்ஆன் மூலம் இறக்கப்பட்ட முதல் வசனமாகக் காணப்படுகின்றது. "ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது" என்று பேரறிஞர் விக்டர் ஹியுகோ கூறியுள்ளார். "ஓதுவது ஒழியேல்' என்பது ஔவையின் வாக்கு.

நமக்குள் எழுகின்ற தேடலின் ஆர்வத்திற்கான ஊக்க மாத்திரையாக இவ்வாசிப்பு மிளிர்கின்றது. புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் என்பார்கள். ஒவ்வொரு புத்தகங்களின் வரிகளிலும் காணப்படும் நல்ல விடயங்களைக் கருத்தூன்றி வாசிக்கையில் நமது சிந்தனையில் ஏற்படுகின்ற மாற்றம் நடத்தைகளிலும் பிரதிபலிக்கச் செய்கின்றது.

உணர்வுகளின் வெளிப்பாடுகளாக வெளிச்சமிடுகின்ற கருத்துக்களின்பால் நாம் ஈர்க்கப்படுகையில் நமது செயல்களிலும் நல்ல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் தற்போது இணையத்தில் மூழ்கியுள்ளோம். பெரும்பாலும் இளைய தலைமுறையினர் நூல்களை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. பொழுதுகளை திட்டமிட்டுச் செலவளிப்பதில்லை. எனவேதான் அருகிவருகின்ற வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் துளிர்விடச் செய்கின்ற பொறுப்பு நம் எல்லோருக்கும் காணப்படுகின்றது.
நாம் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் வாசிப்பதற்கென ஒதுக்க வேண்டும். மனமொன்றி வாசிக்கும்போதுதான் நம் சிந்தனைக்குரிய ஆழ்மனம் தூண்டப்படுகின்றது. தினமும் வாசிக்கையில் நம்மை வசீகரிக்கின்ற வரிகளை குறிப்பெடுத்து வைக்கின்றபோது நம்மையுமறியாமல் நம் நினைவுப் புலத்தில் பல விடயங்கள் சேமிக்கப்படுகின்றன.
புத்தகங்களின்பால் ஆர்வம் ஏற்படுகின்றபோதே வாசிக்க முடிகின்றது. நம் இரசனைக்கேற்ப நூல்களைத் தெரிவு செய்ய முடிகிறது. அதிகமாக வாசிக்கின்றபோது சொற்களை சரியாக எழுதவும் கற்றுக் கொள்ள முடிகிறது. வாசிப்புப் பழக்கமானது அறிவைத் திரட்டவும் மகிழ்வோடு பொழுதுகளைக் கழிக்கவும் நம்மைச் சூழக் காணப்படுகின்ற புத்துலகோடு இசைந்து வாழவும் பயிற்றுவிக்கின்றது. சிறிய வயதிலிருந்தே வாசிப்பை நேசித்து நம் அறிவை விசாலிக்கச் செய்வோம்.

ஜன்ஸி கபூர்




நான் விரும்பும் மனிதர்




எனது தந்தையார் - பெயர் முகம்மது அப்துல் கபூர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் தன் தாயாரை இழந்து, மறுமணம் புரிந்த தந்தையும் பிரிந்து, வாழ்ந்த வாப்பாவின் இளமைக்கால வாழ்க்கையின் சுவடுகள் கண்ணீர்த்துளிகளால் நிறைந்திருப்பதனை நான் பல தடவைகள் உணர்ந்துள்ளேன். தன் குடும்ப உறவுகளின் அணைப்பின்றி தனிமையில் வாழ்ந்த ஒவ்வொரு பொழுதுகளிலும் தன் துன்பத்திற்கு மத்தியிலும் தன் ஆற்றலை வளர்த்துள்ளார். 

தந்தை எனும் முகத்தினுள் நான் பல்வேறு விதமான ஆளுமைகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். மின்னியல் துறையாகட்டும், தையலாகட்டும், பொறியியல் துறையாகட்டும் அவர் பின்நிற்பதில்லை. எல்லா வேலைகளையும் தானே தனித்துச் செய்யும் ஆற்றலுடையவர்.

உலகத்திற்குள் தன் எழுத்துக்களை வெளிப்படுத்தாமல் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதி அவர். பல  மேடை நாடகங்களையும் அரங்கேற்றியிருப்பதை என் தாயார் மூலமாக அறிந்து கொண்டேன். வாப்பாவின் எழுத்துக்களின் அழகும், வசீகரமும் என்னையும் கவர்ந்திழுத்ததனால் இன்று நானும் இலக்கிய வெளிக்குள் சஞ்சாரிக்கின்றேன். என் எழுத்துக்களை ரசித்த முதல் ரசிகர் அவரே. சில பாடல்கள் வானொலியில் ஒலிக்கும்போது சின்ன வயதில் வாப்பா பாடி என்னைத் தூங்க வைத்த நினைவும் எழுகின்றது.

இளமைக் காலத்தில் பொலிஸாகப் பணிபுரிந்தாலும்கூட, அவரின் அபார ஆங்கிலப் புலமை மற்றும் கற்ற கல்வியின் காரணமாக கல்லூரி முதல்வராகவே பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

வாப்பா வரைந்திருந்த பல தத்துருவான ஓவியங்கள் யுத்த இடப்பெயர்வின்போது அழிந்தது இன்றும் வேதனையே.

வாப்பா எனக்கு கற்றுத் தந்த பல விடயங்களை முன்மாதிரியாகக் கொண்டு நானும் எனது தலைமைத்துவப் பணியினை மேற்கொண்டு வருகின்றேன். அவர் தான் காணும் பிறரின் தவறுகள், குறைகளை முகத்தின் முன்னால் சுட்டிக்காட்டுவதால், அவரைச் சிலர் கண்டிப்பானவர் என்பர். ஆனாலும் அக்கண்டிப்பினுள் ஒளிந்திருக்கின்ற அன்பையும், சிரிப்பையும் நான் அனுபவித்துள்ளேன்.  

எனக்கு வழிகாட்டிய தந்தை இன்று என்னுடன் இல்லாவிட்டாலும்கூட, அவர் வாழ்த்திய இலக்கியத் துறையில் என் பெயருடனே பயணிக்கின்றார். வாப்பாமீது கொண்ட நேசம் என் ஆயுள்வரை நினைவுக்குள் நீண்டுகொண்டே இருக்கும்.

ஜன்ஸி கபூர் -8.12.2020


விடாது நெருப்பு



 
புகைக்கும் சிவப்பும் பகைக்கும் உயிரை/
நகைக்கும் உதடும் சிதையும் நோயால்/

எரியும் நெருப்பும் துரத்தும் ஆரோக்கியம்/
நரகத்தின் நிழலே நலன்களும் கெடுமே/

விலை கொடுத்தே வாங்கும் சுகமும்/
கலைக்குமே நிம்மதியை வாழ்வும் அழிய/  

ஜன்ஸி கபூர் - 11.12.2020