About Me

2021/04/13

"தகவல் அறியும் உரிமைச் சட்டம்"

 

மக்களின் வரிப்பணத்தினை தனது மிகப் பெரிய வளமாக, பலமாகக் கருதுகின்ற அரசின் செயற்பாடுகள் குறித்து அறிவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கான பிரதான வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் காணப்படுகின்றது. இது ஜனநாயகம் சார்பான மக்களின் அடிப்படை உரிமையாகும்.

சுவீடன் நாட்டிலேயே முதன் முதலில் பிரஜைகள் தகவலறியும் உரிமையை அனுபவிக்க வழி ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பின் 22 ஆவது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவரப்பட்டதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இலங்கையிலும், 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டு 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் செயல்படுத்தப்பட்டது. தகவலறியும் சட்டத்தினை அமுல்படுத்தும் பொறுப்பு வெகுசன ஊடக அமைச்சிற்கு உரியதாகும். இலங்கையின் ஊடக கலாசாரத்தில் இச்சட்டம் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் தகவல் அலுவலருக்கு, தேவைப்படும் தகவல் பற்றிய விபரங்களை எழுத்திலே கோருதல் வேண்டும். தகவல் அலுவலர் இயன்றளவு விரைவாகவும், 14 வேலை நாட்களுக்கு மேற்படாமலும், கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும். கோரிக்கையானது நிராகரிக்க முடிவு செய்தால், கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரசைக்கு அறிவிக்க வேண்டும்.

இதன் மூலமாக பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணி வளர்க்கலாம். மக்கள் ஊழலை எதிர்த்து நிற்கும் பொறிமுறையை தாபிக்கலாம். பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஊடாக மக்கள் முழுமையாகப் பங்கேற்கக் கூடிய ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும்.

தகவலறியும் சட்டத்தினைப் பயன்படுத்தி அரச நிறுவனம் ஒன்றிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என ஒருவர் எதிர்பார்க்க முடியாது.

அரசின் நிதி மற்றும் பணிகள் தொடர்பாக கேள்வி கேட்கின்ற உரிமை இதன் மூலமாக சாதாரண பிரசைக்கும் கிடைக்கின்றது. இவ்வாறான அவதானப் பார்வைகளின் வீச்சு கூரியதாக இருக்கின்ற பட்சத்தில் தவறுகள் குறைவடைந்து மக்கள் திருப்தியான சேவைதனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புண்டாகும் என்பது வெள்ளிடைமலையாகும்.

ஜன்ஸி கபூர் - 23.12.2020
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!