About Me

2021/04/13

இதழ்களின் மூச்சு

 

உன்னை நானும்....
என்னை நீயும் .......
உயிரில் நனைத்த அங்கீகாரம்
தினமும் முத்தமாய் பரவிச் செல்கின்றது
நம்முள்!

இப்பொழுதெல்லாம்
நம் இதழ்கள்..........
முத்தத்தின் சிலிர்ப்பில்தானே
மூச்சு விடுகின்றது!

மயிலிறகை உன் விரலில் நசித்து
என் கன்னம் கிள்ளும் உன் குறும்பில்
கிறங்கிக் கிடக்கின்றது என் ஆயுள்!

நம் சந்திப்பின் ஒவ்வொரு புள்ளியிலும்
நீ எனக்குள் பதியமிடும்............
உன் முத்தத் தடங்கள் நொறுங்கிக் கிடக்கின்றதே
பனித் துளிகளை அணைத்தபடி!

இப்பொழுதெல்லாம் ............
நாம் மௌனித்துக்கிடக்கின்றோம்!
நமக்குள்...........
முத்தங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன!

Jancy Caffoor -13.04.2021

மஞ்சள் நாண்

 

விழியில் நாணங் கலந்து
கன்னத்தில் மருதாணிச் சாறு நனைத்து
மனசெங்கும் துடிப்பு நிறைத்து
உயிரிலே உன்னைக் கரைத்து
காத்திருந்தேன் கனவுகளுடன்
காதலோடு கசிந்தாய் மெல்ல!!

மென் பாதம் தொட்டு
நீ சூட்டும் மெட்டி ஒலி........
மெட்டசைக்கும் நம் காதலோசையாய்
மொட்டவிழ்த்து நானுமுன் கரம் வீழ
எட்டுத் திக்கெங்கும் மேள சத்தம்
நீ கட்டும் தாலி என்னுள் உன்னுயிராய் வருடும்!!

மஞ்சள் நாண் பூட்டி .............உன்
விழிக் கொஞ்சலில் முத்தம் சிதைத்து.......
அழகான வாழ்வும் தந்தாய் காதலுடன்
பல காலம் நானும் உன்னவளாய் வாழ!

உன்னைச் சுமக்கின்றேன் நெஞ்சோரம்
என் மேனியின் அறுவடை உனக்காகவே!
உன் உதட்டோரக் குறும்புகளில் சுருங்கும்
முத்தங்களை சேகரிக்கும் தேனீயாய்
தினமுன்னைச் சுற்றும் ராணி நான்!

சாம்பர் மேட்டின் சரிதம்

 


இளமையின் சுவாரஸியம்
இதயம் எரிக்கும் அக்கினியாக!

சாம்பர் மேட்டில் சரிதமெழுதும்
நிக்கற்றின் வாசிகள் இவர்கள்!

மூச்சுக்குள் விஷம் தடவும்
மூடர்கள் இவர்கள்!

உதடேந்தும் புகையினால்
உருக்குலைந்த ஆத்மாக்கள்!

விண்ணகம் தொடும் மரண வாகனமாய்
விசிலடிக்கும் சிகரெட் காத்திருக்கின்றது
புகைப்போர் அருகாமையில்.....

நகைக்காதீர்!
புன்னகை மறந்தோரே!

Jancy Caffoor - 13.04.2021

துணிந்து நில் பெண்ணே

 

ஆணாதிக்கக் கரங்களில் 
.........அடங்கிடுமோ பெண்மை/
அவலத்தின் சிறைதனில் 
...........அடிமையும் இவளோ/
அக்னியைச் சூடியே 
..........அகிலத்தில் சிலுவையறையும்/
கரங்களை அறுத்திடவே 
.........அஞ்சாதே பெண்ணே/

சீதனம் தேடி 
......சீர்குலைப்போர் சிந்தையை/
சீவிவிடு நீயும் 
......சிந்தனையைத் தெளித்திடு/
பாலியல் வன்மத்துக்குள் 
........பாவையுன்னை உதிர்த்திடும்/
பாவக்கறையை கரைத்திடு 
.......பாயுமுந்தன் சினத்தாலே/

விரட்டும் துன்பத்தை 
........வீரியத்துடன் சிதைத்திடு/
விழுந்தாலும் தயங்காதே 
........விருட்டென பறந்தோடு/
முறிக்கின்ற சிறகினை 
........நிமிர்த்திடு ஆற்றலோடு/
முடக்குகின்ற சமூகத்தினை 
........முன்னேற்று சீர்திருத்தி/

அறியாமைச் சகதிக்குள் 
.........அவிழ்த்திடுவார் மூச்சினை/
அடங்காக் கட்டாறென 
.........பொங்கிடு அறிவுடனே/
ஆணுக்கு நிகரென 
.........அடைகின்ற உரிமைகளால்/
அடையாளம் காட்டிடு 
........அவனிக்குள் உன்னை/

நாணமும் நளினமும் 
.........நாவடக்கமும் சீர்வரிசையாம்/
நகையும் சிந்திடும் 
.........நற்பண்புகள் கிரீடமாம்/
அறமும் நெய்தே 
.........அன்புடன் பயணித்திட/
துணிந்துநில் பெண்ணே  
.........தூரமல்ல வெற்றிகள்/

குவிகின்ற தடைகள் 
..........குறியீடுகளே சவால்களுக்கே/
குதித்தெழு சாதிக்கவே 
.........குற்றுயிர் நீயல்லவே/
குதூகலத்தின் குத்துவிளக்கே 
.........குனிந்திடாதே குதறிடுவார்/
குன்றாய் உயர்ந்தே 
...........குடும்பமதையும் காத்திடு

ஜன்ஸி கபூர் - 1.11.2020