About Me

2021/04/22

கறிவேப்பிலை

 

கறிவேப்பிலை நறுமணம் கமகமக்குமே சமையலில் 

அறிவோமே இன்று கொத்திலைகளின் மருத்துவத்தை 

கல்லீரல் பாதுகாப்புடன் கண்பார்வை சீராகும் 

தோல்த் தொற்றும் மாயமாகிப் போகும் 


தோற்றமும் அழகுடன் மிளிர்ந்தே சிறக்கும் 

நீளக் கூந்தலும் உடலைத் தழுவும் 

நீங்குமே நீரிழிவும் தீருமே தலைச்சுற்றும் 

செரிமானக் கோளாறும் சரியாகும் தினமும் 


செந்நிற இரத்தம் சுற்றியோடும் சரியாக 

பச்சையிலை பசியின்மையை நீக்கும் நமக்கே 

பருகும் சாற்றால் குமட்டலும் ஓடும் 

உடலுக்குப் பலமும் கிடைத்திடும் சிறப்பாக 


உயிர்ப்பான மூலிகையை உணவாகக் கொள்வோம் 

சுவைப்போம் நிதமும் தடுப்போம் நோய்தனை 

ஜன்ஸி கபூர்

ஓட்டுரிமை

நல்லாட்சி விதைத்திட நாமேந்தும் ஆயுதமே/
நல்லவர்கள் நாடாள நாமிடும் அங்கீகாரமே/

தொட்டதுமே பதினெட்டை வந்துவிடுமே அடையாளம்/
தெரிவுக்கான உரிமைக்காக உறவாவார் பலருமே/

சிந்தித்தே இடும் வாக்குப் பலத்தில்/
விரல்களும் எழுதிடுமே புரட்சி மாற்றங்களையே/

ஜன்ஸி கபூர் 

நாணயம்

நம்பிக்கையை மனதிலேற்றி நம்மை நகர்த்திடும்/
நாணயமே ஆள்கின்றதே மனித வாழ்வினை/

நிலைமாறும் உலகைப் பற்றும் அச்சாணியிது/
நீங்குமே நுகர்வினால் நீடிக்கா  செல்வமாகி/

நுட்பமான சேமிப்பும் காக்குமே எதிர்காலம்/
நூதனசாலைகள் பேணிடுமே பழமைத் தோற்றங்களை/
  
நெஞ்சக் கலக்கம் நீக்கிடும் பொக்கிசமிது/
நேர்மையும் நாணயப் பண்பும் கொண்டோர்/
  
நொந்திடார் அவலங்களால் நிறைந்திடுவார் நிம்மதியினால்/
நோவும் துறந்தே மகிழ்ந்திடுவார் பொழுதெல்லாம்/

ஜன்ஸி கபூர்  
 

உதிரிப்பூக்கள்

 

வலியின் வலிமையில் வாழ்வது மூட/
வயதின் ஏற்றத்தில்  வனப்பது உதிர/
வாழ்கின்ற வனிதையும் வகுத்திடும் விதியோ/
வழிகின்ற நீரும் வருத்திடும் முதிர்கன்னியென/

உதிரும் நாட்களில் உறைகின்றதே ஆரோக்கியம்/
உன்னத வாழ்வினை உருக்குலைக்கும் தீநுண்ணிகள்/
உருவாக்கும் மரணங்களால் உதிரிப்பூக்களாகத் தேகங்கள்/  
உருவாக்கப்படுகின்ற நவீனத்தால் உறங்குகின்றன உயிர்கள்/

அரும்பிடும் முன்னர் அவலக் கறை/
அணைக்கின்ற காமம் அறுத்திடும் மூச்சை/
அழகிய ஆன்மாவுக்குள் அறைகின்றதே வன்புணர்வை/
அகிம்சை இற்றுப்போக அடைக்கலமாகின்றன சமாதிக்குள்/

வெஞ்சினம் கரைத்தே வெந்நீர் பூசும்/
வெறுக்கும் சமரினில் வெட்டப்படும் தேகங்கள்/
வெறுமை பூமிக்குள் விதைக்கப்படுகின்றன உதிரிகளாகி/
வெல்லுகின்ற வன்முறைகள் வெட்கப்படா கலியுகமிது

ஜன்ஸி கபூர்